Around the world in eighty days
– ஜூல்ஸ் வெர்னே
தமிழில் : அகிலாண்ட பாரதி
இதுவரை:
சாகசங்களில் ஆர்வமுடையவராகவும், நேரம் தவறாத மனிதராகவும் விளங்கும் ஃபிலியாஸ் பாக் என்ற ஆங்கிலேய செல்வந்தர் தன் நண்பர்களிடம் எண்பது நாட்களில் உலகத்தைச் சுற்றி வந்து விடுவேன் என்று சவால் விடுகிறார். அதே சமயம் லண்டனில் ஒரு வங்கியில் ஒரு பெரும் தொகை கொள்ளை போயிருக்கிறது.
இனி..
நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு வீட்டிற்கு விரைந்தார் ஃபிலியாஸ் ஃபாக். தன் புதிய உதவியாளரான பாஸர்பார்பட்டவுட்டை அழைத்தார்.
“சரியா ஒரு மணி நேரத்தில் நாம வீட்டை விட்டுக் கிளம்பணும். எண்பது நாட்களில் உலகம் முழுவதையும் நானும் நீயும் சுற்றிவரப் போறோம். அதுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வச்சுக்கோ” என்றார்.
‘என்ன? உடனடியாக் கிளம்பப் போறோமா? அதுவும் எண்பது நாட்களில் முழு உலகத்தையும் சுற்றி வரப்போறோமா? சாத்தியமா?’ என்று வியந்தார் பாஸர்பார்ட்டவுட். இருந்தாலும் சுறுசுறுப்புடன் முதலாளி கூறியபடியே எண்பது நாட்களுக்கு அவர்களுக்குத் தேவையான உடைமைகளை வேகமாக எடுத்து வைக்கத் துவங்கினார்.
அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது. அப்போது ஒரு பையை பாஸர்பார்ட்டவுட்டிடம் கொடுத்த ஃபிலியாஸ் ஃபாக், “இதில் 20 ஆயிரம் பவுண்டுகள் பணம் இருக்கு. பத்திரமா வச்சுக்கோ. நம்மளுடைய பயணச் செலவுக்கு இதுதான் உதவப் போகுது* என்றார். வேகமாக லண்டன் ரயில் நிலையத்தை அடைந்தனர்.
டோவர் நகரத்திற்குச் செல்லும் ரயில் புறப்படுவதற்குத் தயாராக நின்றது. ரயில் கிளம்பப் போகும் சமயம் வேகமாக அதில் ஏறி ஃபிலியாஸ் பாக், பாஸர்பார்ட்டவுட் இருவரும் அமர்ந்தனர். டோவர் என்பது இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு கடற்கரை நகரமாகும். அங்கிருக்கும் துறைமுகத்தில் இருந்து தான் ஃபிரான்ஸ் நாட்டிற்கு படகு மற்றும் கப்பல் தேவைகள் சேவைகள் செயல்பட்டு வருகின்றன.
ரயிலில் டோவர் நகரத்தை அடைந்தவர்கள், பின் கப்பலில் ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்கள். அங்கிருந்து இத்தாலி நாட்டில் உள்ள டூரின் என்ற ஊருக்கு ரயிலில் பயணித்தார்கள். அங்கிருந்து இன்னொரு ரயிலைப் பிடித்து பிரிண்டிசி என்ற ஊருக்கு வந்தார்கள். இந்த பிரிண்டிசி நகரமும் ஒரு துறைமுக நகரம் தான். அந்த நகரத்தின் துறைமுகத்தில் ‘மங்கோலியா’ என்று அழைக்கப்பட்ட ஒரு நீராவிக் கப்பலில் ஏறினார்கள். அக்டோபர் இரண்டாம் தேதி தங்கள் பயணத்தைத் துவங்கிய அவர்கள் சரியாக நான்கு நாட்களில் ஐரோப்பியக் கண்டத்தைத் தாண்டி விட்டார்கள்.

மங்கோலியா கப்பல் அக்டோபர் ஒன்பதாம் தேதி புதன் கிழமை அன்று சூயஸ் கால்வாயை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூயஸ் கால்வாய் என்பது மெடிட்டரின் கடலையும் செங்கடலையும் இணைக்கக் கூடிய ஒரு பகுதி. இந்த கால்வாய் தான் ஐரோப்பிய கண்டத்திற்கும் ஆசியக் கண்டத்திற்கும் இடையேயான முக்கிய இணைப்பு பாலம் ஆகும்.
“இதுவரை நம்ம பயணம் நான் திட்டமிட்டபடி போயிட்டு இருக்கு. சரியான நேரத்திற்கு சூயஸ் கால்வாய்க்கு போயிடுவோம்னு நினைக்கிறேன். அந்த இடத்தில் கப்பல் கொஞ்ச நேரம் நிற்கும். அங்கே இருக்கும் அலுவலகத்தில், நாம அங்க போனதுக்கு அடையாளமா நம்முடைய கடவுச்சீட்டுகள்ல முத்திரை வாங்கிக்கணும். அதற்கப்புறம் அதே மங்கோலியா கப்பல்ல நாம இந்தியாவில் இருக்கும் பம்பாய் நகரத்துக்கு போயிடலாம்” என்றார் ஃபிலியாஸ் ஃபாக்.
ஆனால் சூயஸ் கால்வாயில் இருந்து இன்னொரு நபரை அவர்களது பயணத்தில் அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. அவர் மிஸ்டர் ஃபிக்ஸ் என்ற காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி.
திரு. ஃபிக்ஸ் லண்டனில் நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுள் ஒருவர். இங்கிலாந்து நாடு மற்றும் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களை அவர் கணக்கிட்டார். மங்கோலியா கப்பலில் கொள்ளையன் பயணிக்கக்கூடும் என்று அவர் நினைத்தார். மங்கோலியா கப்பலில் கொள்ளையன் ஏறியிருந்தால், அவன் அனேகமாக சூயஸ் கால்வாயில் வைத்துத் தான் மங்கோலியா கப்பலில் இருந்து இறங்கி பின் ஏசியா கண்டத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருப்பான் என்று நம்பினார்.
எனவே அவர் சூயஸ் கால்வாயில் மங்கோலியா கப்பல் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தார். கப்பலில் இருந்து பயணிகள் வரிசையாக இறங்குகையில் ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்தார் திரு. ஃபிக்ஸ். அவற்றில் ஒருவர் பாஸர்பார்ட்டவுட்.
“யார் இந்த மனுஷன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கானே?” என்று திரு பிக்ஸ் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, பாஸர்பார்ட்டவுட் அவரைச் சாதாரண பயணி என்று நினைத்து, “ஐயா வணக்கம். இங்கே இங்கிலாந்து நாட்டுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா? நானும் என் முதலாளியும் வந்திருக்கோம். எங்க பாஸ்போர்ட்டில் நாங்கள் பதிவு செய்யணும்” என்றார்.
திரு. ஃபிக்ஸ்க்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. ‘ஏன் நேரடியா முதலாளி வராமல் இந்தப் பணியாளரை அனுப்பி விட்டிருக்கார்? ஒருவேளை அவர்தான் கொள்ளைக்காரராக இருப்பாரோ? இவங்கள நாம தீவிரமாக கவனிக்கணும்’ என்று நினைத்துக் கொண்டார்.
தான் நினைத்ததை வெளியில் காட்டாமல், கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் செல்லும் வழியைக் கூறிவிட்டு, “உங்க முதலாளியையும் கூட்டிக்கிட்டு போய் நீங்க அங்கு இருக்கிற அதிகாரியை பார்க்கணும். நீங்க மட்டும் தனியா போகக் கூடாது” என்றார் ஃபிக்ஸ்.
“சரி, அவரையும் கூட்டிட்டு வரேன்” என்று விடைபெற்றார் பாஸர்பார்ட்டவுட். திரு. ஃபிக்ஸ் கூறிய அறிவுரையின்படி இருவரும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் உரிய அதிகாரியைச் சந்தித்து, அவர்களது கடவுச்சீட்டில் முத்திரையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் கடற்கரைக்குத் திரும்பினர்.
கப்பல் புறப்படுவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஃபிலியாஸ் பாக் கப்பலில் இருந்த தன்னுடைய அறைக்குத் திரும்பி விட்டார். துறைமுகத்தில் சுற்றிக்கொண்டிருந்த பாஸர்பார்ட்டவுட்டை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தார் திரு.ஃபிக்ஸ்.
ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவரிடம் கடகடவென்று பேசினார் பாஸர்பார்ட்டவுட். “நாங்க லண்டனில் இருந்து டோவர் போய், பாரிஸ் போனோம். அப்புறம் டூரின், அடுத்து பிரிண்டிசி. அதுக்கப்புறம் இதோ இங்கே வந்திருக்கோம். அடுத்ததாக நாங்க இந்தியா போறோம். அதுபோக என் முதலாளி நிறைய பணம் வச்சிருக்கார். அதையும் ஜாக்கிரதையா கொண்டு போற பொறுப்பு எனக்கு இருக்கு” என்று பெருமையுடன் பாஸர்பார்ட்டவுட் சொல்ல, ‘என்ன! அவ்வளவு பணம் வச்சிருக்காங்களா? அப்புறம் ஏன் இத்தனை நகரங்கள் போயும் சுற்றி பார்க்கக் கூட நேரம் செலவழிக்காமல் ஒவ்வொரு நாடா மாறிக்கிட்டு இருக்காங்க? நிச்சயமா இவங்கதான் திருடங்களா இருக்கணும்’ என்று முடிவே செய்து விட்டார் திரு ஃபிக்ஸ். அப்போது முதல் இருவரும் திரு ஃபிக்ஸின் சந்தேக வளையத்திற்குள் சிக்கிவிட்டனர்.
– தொடரும்..
(ஃபிலியாஸ் ஃபாகின் பயணம் இதுவரை: லண்டன் —–> டோவர் ——> பாரிஸ் —–> டூரின் ——>பிரிண்டிசி——-> சூயஸ் கால்வாய்)
– Dr. S. அகிலாண்ட பாரதி