80 நாட்களில் உலகத்தைச் சுற்றி – 4

அத்தியாயம் 4

இதுவரை: எண்பது நாட்களில் என்னால் உலகைச் சுற்றிவர முடியும் என்று நண்பர்களிடம் சவால்விட்டு லண்டனிலிருந்து கிளம்புகிறார் ஃபிலியாஸ் ஃபாக். அவருடைய பயணம் பல சுவாரசியங்கள் நிரம்பியதாக இருக்கிறது.‌ ஃபிக்ஸ் என்ற போலீஸ்காரர், ஃபாக் வங்கிக் கொள்ளைக்காரராக இருப்பாரோ என்று சந்தேகித்து, இந்தியாவில் அவர் இருக்கும் போது கைது செய்வதற்காக முயற்சிக்கிறார். இனி..

அத்தியாயம் 4

பம்பாய் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய ரயில் பெஹ்ராம்பூர் என்ற ஊரில் முதலில் நின்றது. பாஸர்பார்ட்டவுட் தன் காலணிகள் தான் பம்பாயில் கோவிலில் விட்டுவிட்டு வந்துவிட்டதால் வேகவேகமாக ரயிலிலிருந்து இறங்கி காலணிகள் வாங்கிவிட்டுத் திரும்பினார். ரயில் தன் பயணத்தைத் துவங்கியது.

ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வந்தார் பாஸர்பார்ட்டவுட். ஒரு யானையும், அதன் மேல் ஒரு பாகனும் வந்ததைக் கவனித்தார். பயணம் இனிமையாக இருந்தது. அந்த நேரத்தில் திடீரென்று ரயில் நின்றது.

ரயிலின் நடத்துனர், “எல்லாப் பயணிகளும் இங்கேயே இறங்கிடுங்க” என்று கூறினார்.

 என்ன நடந்தது என்று அனைவரும் குழப்பத்துடன் பார்க்க, “இதுக்கு மேல ரயில் தண்டவாளங்கள் சரியான முறையில் இல்ல. சேதம் அடைஞ்சிருக்கு. அதனால ரயில் இதோட நிக்கப்போகுது” என்றார் நடத்துனர்.

“இப்ப நாம கல்கத்தாவுக்கு எப்படிப் போறது?” என்று ஃபிலியாஸ் ஃபாக் குழம்ப,

“கொஞ்சம் முன்னாடி ஒரு யானை இந்த திசையில் வந்துக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். நாம ஏன் யானை மேல ஏறி போகக்கூடாது?” என்று கேட்டார் பாஸர்பார்ட்டவுட்.

“நல்ல யோசனை!” என்றார் ஃபாக். பாஸர்பார்ட்டவுட் அந்த யானையையும், பாகனையும் கண்டுபிடித்து அழைத்து வந்தார்.

“இந்த யானையை எங்களுக்கு வாடகைக்குத் தர முடியுமா?” என்று கேட்டார் ஃபாக்.

“வாடகைக்கெல்லாம் தர முடியாது. வேணும்னா விலைக்கு வாங்கிக்கோங்க” என்றான் யானைப்பாகன்.

சரி விலையைச் சொல்லு என்று ஃபாக் கேட்க, 2000 பவுண்டுகளுக்கு யானையை விற்க யானைப் பாகன் சம்மதித்தான்.

 ரயிலில் வந்த பயணிகளுள் அலி என்ற ஒரு பயணி இருந்தார். “எனக்கு யானையின் மேல சவாரி செய்றதுல அனுபவம் இருக்கு. நான் உங்களுக்குப் போறதுக்கு அலகாபாத்துக்கு வழி காட்டுறேன். அங்கே இருந்து கல்கத்தாவுக்கு நிறைய ரயில்கள் புறப்படும். அலகாபாத்தில் தண்டவாளங்கள் நல்ல நிலையில் இருக்கும்” என்றார்.

அவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி கிடைத்ததில் ஃபாக் மகிழ்ச்சியடைந்தார். யானையின் மேல் அலி, ஃபாக், பாஸர்பார்ட்டவுட் மூவரும் ஏறிப் பயணித்தனர்.

“இதோ இந்தக் குறுக்கு வழியில் போனா சீக்கிரம் போயிடலாம்” என்று அலி ஒரு வழியைக் காட்டினார். அந்த சாலை மிகவும் மோசமானதாக இருந்தது. ஒரு அடர்ந்த காட்டின் வழியாகவும், சில காய்ந்த வயல்கள் வழியாகவும் அவர்கள் பயணித்தார்கள். வழியில் சில குரங்குகள் எதிர்ப்பட்டன. “வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் கூட இங்கே இருக்கக் கூடும்” என்றார் அலி.

இரவு நேரம் வந்தது. ஒரு பழைய குடிசை ஒன்றில் இரவு தங்கினார்கள். காலை மீண்டும் பயணத்தைத் துவங்கியவர்கள் நடுவழியில் உணவுக்காக நிறுத்தினார்கள்.

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்” ஃபாக் கேட்டதற்கு,

“12 மைல்கள் போக வேண்டி இருக்கும்” என்று பதில் கூறினார் அலி.

அப்போது திடீரென யானை நின்று விட்டது. இசைக்கருவிகளின் ஓசையும், நிறைய குரல்களும் கேட்டன.

“வாங்க ஒழிஞ்சுக்கலாம். கொள்ளைக்காரர்களாக இருந்தாலும் இருக்கும்” என்று அலி கூற, அவர்கள் அனைவரும் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்.

வண்ண வண்ண உடையணிந்து பல மனிதர்கள் அங்கே நடந்து வந்தார்கள். அவர்கள் ஒரு சிலையை வண்டியில் வைத்து இழுத்து வந்தார்கள். அதற்குப் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அழகான இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். அந்தப் பெண் நிறைய நகைகள் அணிந்து மணப்பெண் போல் உடையணிந்திருந்தாள். நிறைய வாள்கள் மற்றும் கத்திகளுடன் சில பாதுகாவலர்களும் உடன் வந்தார்கள்.

“அலி! அங்கே பாருங்க.. அந்தப் பொண்ணை பார்த்தா ஒரு இளவரசி மாதிரி தெரியுது.. அவ ஏதோ பிரச்சனையில் மாட்டிக்கிட்டு இருக்கா. நாம அவளைக் காப்பாத்தணும்” என்றார் ஃபாக்.

“ஆமா பாம்பேல இருக்கிற ஒரு பணக்கார வியாபாரியோட பொண்ணு தான் இவங்க. பேரு அவ்டா (Aouda)”

கொள்ளைக்காரர்கள் அந்தப் பெண்ணைக் கடத்திவந்து பணம் கேட்டு மிரட்டப் போகிறார்கள் என்று நினைத்தார் ஃபாக். ஊர்வலம் போல் நடந்து வந்த மனிதர்கள் ஒரு இடத்தில் நின்று அன்று இரவு தங்குவதற்காக கூடாரம் அமைத்தார்கள்.

அந்தப் பெண்ணை ஒரு குடிசையில் தங்க வைத்துவிட்டு காவலுக்கு ஒரு ஆளை அமர்த்தி வைத்தார்கள். அனைவரும் சற்று நேரத்தில் படுத்துத் தூங்கி விட்டார்கள்.

அலி மற்றும் பாஸர்பார்ட்டவுட் அந்தப் பெண்ணைத் தங்க வைத்திருந்த குடிசையின் அருகே மெல்லச் சென்று அந்த குடிசையின் பின்புறச் சுவரை இடிப்பதற்கு முயன்றார்கள். குடிசைக்கு வெளியில் இருந்த காவல்காரன் விழித்து விட்டான். அதை பார்த்த பாக் அவன் தலையில் ஒரு கம்பால் அடித்து அவனை மயங்கி விழச் செய்தார்.

குடிசைக்குள் சென்று பார்க்கையில் அவ்டா மயக்கத்தில் படுத்திருப்பது தெரிந்தது. அவளை அப்படியே தூக்கி யானை மேல் ஏற்றிக்கொண்டு, மற்ற காவலர்கள் விழிக்கும் முன்பாக வேகமாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

தொடரும். ஃபிலியாஸ் ஃபாகின் பயணம்: சூயஸ் கால்வாய் —–> ஏடன் நகரம் ——->பம்பாய் ——->கல்கத்தாவை நோக்கி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *