
ரமாபாய் மங்களூரில் மராத்திய பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை ஆனந்த் சாஸ்திரி டோங்கிரே சமஸ்கிருத அறிஞர். அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்க முடியாது. ஆனந்த் சாஸ்திரி தம் மனைவிக்கும், மகளுக்கும் சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார். அதனால் ஊரார் வெறுப்புக்கு ஆளானார். ஆனந்த் சாஸ்திரி கோவில்களில் புராணம், பாகவதம் பற்றி உரையாற்றினார். அதில் கிடைத்த குறைந்த வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தினார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. 1877ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் காரணமாக ரமாபாய் குடும்பத்தினர் இறந்தனர். ரமாபாயும், அவர் அண்ணனும் மட்டுமே உயிர் தப்பினர். அப்போது ரமாபாய்க்கு வயது 16 மட்டுமே.
தந்தையைப் போலவே ரமாபாய் தம் அண்ணனுடன் இந்தியா முழுதும் பயணம் செய்து புராணம், பாகவதம் பற்றி உரையாற்றினார். அவரது புகழ் கல்கத்தா வரை பரவியது. கல்கத்தா பல்கலைக்கழகம் அவரை உரை நிகழ்த்தக் கூப்பிட்டது. ரமாபாயும் அங்குச் சென்று உரை நிகழ்த்தினார். அந்தப் பல்கலைக்கழகம் அவருக்குப் ‘பண்டிதர்’ என்ற பட்டம் கொடுத்துப் பாராட்டியது. மேலும் ‘சரஸ்வதி’ என்ற பட்டமும் கொடுத்தது. ‘பண்டிதர்’ பட்டம் பெற்ற முதல் பெண் ரமாபாய் ஆவார்.
அவருடைய 22ஆம் வயதில் அண்ணனும் இறந்தார். அண்ணன் இறந்த பிறகு ரமாபாய் பிபின் ஃகரி மெதிலி என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்தார். அவர் வேறு சாதி என்பதால் கலப்புத் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பைத் துணிச்சலுடன் சமாளித்தார் ரமாபாய். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பெயர் மனோரமா.
ரமாபாய் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தையும், உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையும் எதிர்த்துப் போராடினார். கல்வி மூலம் கணவனை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்க உறுதி பூண்டார். பூனாவில் ‘ஆரிய மகிள சமாஜம்’ என்ற சங்கத்தைத் தொடங்கினார். ‘சாரதா சதன்’ என்ற பள்ளியைத் திறந்து பெண்களுக்குப் பெண் விடுதலை, சம உரிமை குறித்து விழிப்புணர்வு ஊட்டினார். பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்கத் தொழிற்கல்வியையும் போதித்தார்.
பண்டித ரமாபாய் கணவனை இழந்த இளம்பெண்களின் மறுவாழ்வு, பெண் கல்வி ஆகியவற்றுக்காக வாழ்நாள் முழுதும் போராடிய சமூகப் போராளி. இவரது சேவையின் நினைவாக இந்திய அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது. பண்டித ரமாபாயின் நினைவைப் போற்றுவோம்!
