சின்னஞ்சிறு பெண் (Little Women) (மொழிபெயர்ப்பு நாவல்)

தமிழாக்கம் – சுகுமாரன்
வானம் பதிப்பகம், சென்னை-89
விலை ரூ 100/-.

அமெரிக்க நாவலாசிரியர் லூயிசா மே ஆல்காட் (Louisa May Alcott) 1868ஆம் ஆண்டு எழுதிய Little Women என்ற பிரபலமான சிறார் நாவல் ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. இந்த நாவலில் நான்கு சகோதரிகள் இருக்கின்றார்கள். கதாசிரியர் லூயிசாவின் சொந்த வாழ்க்கையின் கூறுகளைக் கொண்டிருப்பதால் இந்நாவலின் 50 சதவீதம் லூயிசாவின் சுயசரிதை என்று கூறப்படுகிறது.
150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நாவலில் ஆசிரியர் பாரம்பரியமான பிற்போக்கான பெண் கதாபாத்திரங்களுக்குப் பதிலாகக் காத்திரமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இதை வாசிக்கும் பெண் குழந்தைகள் வாழ்வில் ஜோ கதாபாத்திரம் நிச்சயம் ஓர் உந்துசக்தியாக இருக்கும்.
இக்கதையில் பெண்களின் அப்பா போர் முனையில் இருக்கிறார். அப்பா வீட்டில் இல்லாத கிறிஸ்துமஸ் விழாவுடன் நாவல் துவங்குகிறது. ஏழ்மையான குடும்பம். “அன்பளிப்புகள் இல்லாத கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் அல்ல” என்று முணுமுணுத்தாள் ஜோ என்று இந்தக் கதை துவங்குகிறது. பதின்வயது பெண்களுக்குப் புதிய உடைகளோ அன்பளிப்புகளோ இல்லாத பண்டிகை.
சகோதரிகள் நால்வரும் தங்களுக்குப் பரிசு ஏதும் வாங்காமல் தங்களது சேமிப்பில் அம்மாவுக்காக ரகசியமாகப் பரிசு வாங்குகிறார்கள். அம்மா மீது அவ்வளவு பாசத்தோடு இருக்கிறார்கள். அப்பா தங்கள் கூட இல்லையே என்று ஏங்குகிறார்கள். பாசமான குடும்பம்.
சகோதரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் பிறகு ராசியாகிப் போவதும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் விஷயம் தான். அதனால் தான் இந்த நாவல் எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளாகியும் இன்றும் வாசிக்கப்படுகிறது. இந்தக் கதாபாத்திரங்கள் அமெரிக்கப் பெண்களாக இருந்தாலும், கதையை வாசிக்கும் போது நம்மூரில் ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு சகோதரிகள் கதையிது என்ற உணர்வு ஏற்படுமாறு எழுதியிருப்பது சிறப்பு.
