பானு அக்கா, உங்க வீட்டுல என்ன டிபன் பண்ணிட்டு இருக்கீங்க? நல்ல வாசனை வருது?” என்று கேட்டபடியே வந்தாள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பத்மா.
“நான் ஸ்பைஸி க்ரீன் தோசை வார்த்துட்டு இருக்கேன் பத்மா.”
“என்னக்கா, புதுசா என்னமோ பேர் எல்லாம் சொல்றீங்க? இது என்ன தோசைக்கா?”
“வேற ஒண்ணுமில்ல பத்மா, கறிவேப்பிலை தோசையைத் தான் சொன்னேன்.”
“என்னக்கா, கறிவேப்பிலைல தோசையா? நாம கறிவேப்பிலையைச் சமையல்ல சேர்த்துப்போம்; தாளிக்கத் தானே பயன்படுத்துவோம். இப்போ நீங்க என்னமோ தோசை எல்லாம் செய்யலாம்னு சொல்றீங்க. நல்லா இருக்குமா?”
“அருமையா இருக்கும் பத்மா, சின்னப் பிள்ளைங்க கூட அதோட கலரை பார்த்தே விரும்பிச் சாப்பிடுவாங்க; இந்தா நீ சாப்பிட்டுப் பாரு.” என்று சொல்லி அவளுக்கு ஒரு தட்டில் தோசையை வைத்து, தேங்காய்ச் சட்னியும் போட்டுக் கொடுத்தாள்.
ஒரு வாய் விண்டு வாயில் போட்டவள், “அக்கா, சூப்பரா இருக்குக்கா. எப்படிச் செய்யணும்னு சொல்லுங்க. நானும் வீட்டுல போய்ச் செய்து கொடுக்கிறேன்.”

“சொல்றேன் கேட்டுக்கோ.” என்று சொல்லிச் சொல்லத் தொடங்கினாள்.
ஸ்பைஸி க்ரீன் தோசை:
தேவையானவை:
பச்சரிசி/ இட்லி அரிசி …………..= 1 கப்
வெள்ளை முழு உ.பருப்பு……..= 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை ஆய்ந்தது ………= 1 கப்
பச்சை மிளகாய் ……………………..= 4
ஜீரகம்……………………………………..= 1 டீஸ்பூன்
மிளகு………………………………………= 15
உப்பு…………………………………………= தேவையானது
எண்ணெய் ………………………………= தேவையானது
செய்முறை:
அரிசி, உளுந்தைத் தண்ணீர் விட்டு ஊற வைத்து, ஒரு மணி நேரம் கழித்து மிக்ஸியில் அரிசி, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஜீரகம், மிளகு, உப்பு போட்டு நன்கு நைஸாக அரைக்கவும். இதைப் புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனேயே வார்த்து விடலாம். பச்சை நிறத்தில் பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். சாப்பிட அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும்.
பின்குறிப்பு:
- இந்தத் தோசை வார்க்க எண்ணெய் அதிகம் தேவை இல்லை.
- கறிவேப்பிலையில் முக்கியமாக இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் உடல்நலத்திற்கு நல்லது. “சரிங்க அக்கா, இன்னிக்கு ராத்திரி டிபன் எங்க வீட்டுல இந்த ஸ்பைஸி க்ரீன் தோசை தான்.” என்று சொல்லிக் கொண்டே கிளம்பினாள்.
