ஒரு கிராமத்தில் இரண்டு சகோதரர்களும், ஒரு நாயும் வசித்து வந்தார்கள். தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து ஏதோ பணம் சம்பாதித்துத் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.
“ இப்படியே அங்கேயும், இங்கேயும் அலைந்துகொண்டு வாழும் வாழ்க்கை அலுத்துப் போய்விட்டது. ஏதாவது இடத்தைத் தேர்ந்தெடுத்து நமக்காக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது” என்றான் அண்ணன்.
“ ஆமாம், அப்படியே செய்யலாம். நமக்கும் ஒரு வீடு என்று ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்றான் தம்பி.
இரண்டு பேருமாய் வீடு கட்டுவதற்காக இடம் தேடிப் பல இடங்களிலும் அலைந்து திரிந்தும் எதுவும் சரியாக அமையவில்லை. இறுதியில் ஒரு காட்டிற்குள் இருந்த அமைதியான இடம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். ஜம்போவும் அவர்களுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு, குரைத்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வந்தது.
செடி, கொடிகளை வெட்டி அகற்றினார்கள். கடைசியாக அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்ட ஆரம்பித்தார்கள். முதல் கிளையை வெட்டிய உடனேயே மரத்தில் இருந்து ஒரு பெரிய பூதம் குதித்து இறங்கியது.
“ யாரைக் கேட்டு என்னுடைய இருப்பிடமான இந்த மரத்தை வெட்டத் துணிந்தீர்கள்? ” என்று கோபத்துடன் உறுமியது பூதம்.
“ நிறைய இடங்களில் தேடி அலைந்து விட்டோம். இந்த இடம்தான் எங்கள் மனதிற்கும் பிடித்தமாக இருக்கிறது” என்றான் அண்ணன்.

“ அதற்காக என்னுடைய இடத்தை அழிக்கலாமா? அழிக்க விடமாட்டேன் நான். கிளம்புங்கள் இங்கிருந்து” என்று மிரட்டி விட்டு மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது பூதம்.
சகோதரர்கள் இருவரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். திரும்பவும் வேறு இடம் தேடி அலைய அவர்களுக்கு விருப்பமில்லை. களைத்துப் போய்விட்டார்கள். என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் மீண்டும் விவாதித்தார்கள். இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
“ நாம் இன்று இரவு இங்கே ஒரு பெரிய குழியைத் தோண்டி அதற்கு மேலே இலை, தழைகளைப் போட்டு மூடி வைத்துவிடலாம். நாளைக்கு பூதம் எழுந்து வரும்போது இந்தக் குழிக்குள் விழுந்துவிடும். அதை எப்படியாவது மூடி வைத்து விட்டு, அதன் மேலேயே நம்முடைய வீட்டைக் கட்டி விடலாம். அந்தக் குழிக்குள் பூதம் நிரந்தரமாகச் சிறைப்பட்டுக் கிடக்கும்” என்று பேசி முடிவு செய்தார்கள்.
இரவு முழுவதும் கண்விழித்து ஒரு பெரிய குழியைத் தோண்டி அதை நன்றாக மூடி வைத்தார்கள்.
அடுத்த நாள் காலையில் பூதம் கண்விழித்து எழுந்துவந்தது. அவர்கள் அங்கிருந்து போகவில்லை என்று தெரிந்ததும் கோபத்துடன் கிளையில் இருந்து கீழே குதித்தது.
“ இன்னுமா போகவில்லை நீங்கள்? ” என்று கத்திக் கொண்டே வந்தபோது அந்தக் குழியைக் கவனிக்காமல் அதற்குள் பொத்தென்று விழுந்தது. நல்ல ஆழத்தில் இருந்த குழியில் இருந்து பூதத்தால் வெளியே வர முடியவில்லை. சகோதரர்கள் இருவரும் வேகவேகமாகக் குப்பையைப் போட்டுக் குழியை மூடி விட்டார்கள். பூதத்தால் குழியில் இருந்து தப்பித்து வர முடியவில்லை.
சகோதரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டுத் தங்கள் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினார்கள். வீடும் சிறப்பாக அமைந்தது. இரண்டு பேரும், ஜம்போவுடன் சேர்ந்து அந்த வீட்டில் நிம்மதியாக வசிக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் பூதத்தைக் கைது செய்து குழிக்குள் அடைத்து வைத்திருந்த விதம் அவர்களுக்கே பிடிக்கவில்லை. பூதத்தின் பேரில் இரக்கம் கொண்டார்கள்.
“ என்னதான் இருந்தாலும் பூதத்தோட இடத்தை நாம் பறித்துக் கொண்டு வீட்டைக் கட்டியிருப்பதால் அதற்கு தினமும் உணவாவது கொடுக்கவேண்டும்” என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத்தார்கள்.
தினமும் தாங்கள் சாப்பிடும் உணவைக் குழிக்குள் வீசி எறிந்தார்கள். பூதத்திற்கு உணவு கிடைத்து வந்தாலும் எப்படியாவது அங்கிருந்து தப்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது. தினமும் சாப்பிடும் ரொட்டித் துண்டுகளில் மீதமான துண்டுகளைக் குழிக்குள் போட்டுக் கொண்டே வந்தது. அவற்றைத் தவிர பழத் தோல்கள், மற்ற குப்பைகள் எல்லாமாகக் குழிக்குள் சேர்ந்து வந்தன. பல மாதங்கள் கழித்து, குப்பைகள் அனைத்தும் சேர்ந்து ஓரளவு உயரம் கிடைத்தது. பூதம் அந்தக் குப்பை மலையின் மீது கால் வைத்து ஏறி மேலே வந்தது.
தன்னுடைய பலத்தை முழுவதுமாகத் திரட்டி, இரண்டு கைகளாலும் வீட்டையே தகர்த்துத் தூக்கிக் கொண்டே எழுந்தது. கோபத்துடன் அந்த வீட்டைத் தூக்கி வானத்தில் எறிந்தது. இரண்டு சகோதரர்களும் இரண்டு நட்சத்திரங்களில் போய் விழுந்தார்கள். ஜம்போ நிலாவில் போய் விழுந்தது. அன்றிலிருந்து நிலாவில் இருந்து பூமிக்குத் திரும்பி வரத் தெரியாமல் அங்கேயே குரைத்துக் கொண்டு தெரிகிறது.
அதற்குப் பிறகு யாருமே காட்டுக்குள் துணிந்து வீடு கட்டவில்லை.
என்றாவது வானத்தில் சஞ்சரிக்கும் நிலாவிற்குள் குரைத்துக் கொண்டு நிற்கும் நாயை நீங்கள் பார்க்க நேரிடலாம். அந்த நாய் ஜம்போவேதான்.
