ஆனியின் அன்புசூழ் உலகு – 14

Anne of Green Gables – Lucy Maud Montgomery

தமிழாக்கம்:- ஞா.கலையரசி 

ஆசிரியர் பிலிப்ஸ் சொன்னபடி கில்பர்ட் பக்கத்தில் ஆனி உட்கார்ந்த உடனே வகுப்பில் இருந்த மாணவர்கள் அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் மேசையில் கவிழ்ந்து படுத்த ஆனி தலையை உயர்த்தவே இல்லை. கில்பர்ட் எதுவும் நடக்காதது போல் கணக்கு போட்டுக் கொண்டு இருந்தான். எனவே அவர்களும் திரும்பித் தங்கள்  வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

யாரும் பார்க்காத சமயம் கில்பர்ட், தன்னுடைய ஒரு ரோஸ் கலர் மிட்டாயை எடுத்து ஆனியின் கையில் வைத்தான். அதில் “நீ இனிமையானவள்” என்று எழுதியிருந்தது. ஆனி கோபமாக எழுந்து அதைத் தரையில் போட்டுக் காலால் மிதித்துத் தூளாக்கிவிட்டு மீண்டும் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.  

பள்ளி முடிந்தவுடன் ஆனி எழுந்து தன் மேசைக்குச் சென்றாள். அதன் டிராயரில் இருந்த பேனா, பென்சில் உட்பட எல்லாப் பொருட்களையும் எடுத்துத் தன் உடைந்த சிலேட் மேல் அடுக்கினாள்.

“ஏன் எல்லாத்தையும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போறே ஆனி?” டயானா கேட்டாள்.

“இனிமே நான் பள்ளிக்கூடம் வர மாட்டேன்” ஆனி சொன்னாள்.

டயானா அதிர்ச்சியாகி ஆனியைப் பார்த்தாள்.

“மரிலா உன்னை வீட்டில் இருக்க விடுவாரா?”

“விட்டுத் தான் ஆகணும். அந்த மனிதர் பிலிப்ஸ் இருக்கிறவரை நான் பள்ளிக்கு வர மாட்டேன்”

படம் – அப்பு சிவா

“ஓ! ஆனி! நான் என்ன பண்ணுவேன்? அந்த மோசமான ஜெர்டி இப்ப தனியா உட்கார்ந்து இருக்கா. பிலிப்ஸ் என்னை அவள் பக்கத்துல உட்கார வைச்சுடுவார். மறுபடியும் பள்ளிக்கு வா ஆனி!” இதைச் சொன்ன போது டயானா அழுது விடுவாள் போல் இருந்தது.

“இந்த உலகில் உனக்காக நான் எதை வேணுமானாலும் செய்வேன் டயானா. ஆனால் இதை என்னால செய்ய முடியாது. தயவு செஞ்சு இதை மட்டும் கேட்காதே” வருத்தத்துடன் சொன்னாள் ஆனி.

“பள்ளிக்கு வரலேன்னா நீ இழக்கப் போற மகிழ்ச்சியை யோசிச்சிப் பாரு. ஓடைப் பக்கம் நாம் அழகான புது வீடு கட்டப் போறோம். நீ இதுவரைக்கும் பந்து விளையாண்டதே இல்லை.. அடுத்த வாரம் நாம் பந்து விளையாடப் போறோம். அந்த விளையாட்டு ரொம்ப உற்சாகமா இருக்கும். புதுப் பாட்டு கத்துக்கப் போறோம்.”   

டயானா சொன்னது எதுவும் ஆனியின் முடிவை மாற்றவில்லை. அவள் வீட்டுக்குப் போன உடனே தன் முடிவை மரிலாவிடம் தெரிவித்தாள்.

“முட்டாள்தனமான முடிவு” என்றார் மரிலா.  

“இது முட்டாள்தனம் இல்லை. உங்களுக்குப் புரியலையா மரிலா? எனக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சி.”    

“அவமானமா? அதெல்லாம் வீண் பேச்சு! நாளைக்கு எப்பவும் போல நீ பள்ளிக்குப் போகணும்” என்றார் மரிலா.

“கண்டிப்பா நான் போக மாட்டேன் மரிலா. வீட்டிலேயே பாடங்களைப் படிப்பேன்” என்றாள் ஆனி.

ஆனி முகத்தில் தெரிந்த உறுதியையும் பிடிவாதத்தையும் கண்ட மரிலா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

திருமதி லிண்டேவிடம் இது குறித்து ஆலோசனை கேட்கலாம் என்று முடிவு செய்த மரிலா அவர் வீட்டுக்குச் சென்றார். திருமதி லிண்டே வழக்கம் போல் தையல் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

“நான் எதற்காக வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும் தானே?” என்று சற்றுச் சங்கடத்துடன் பேச்சைத் துவங்கினார் மரிலா.  

‘தெரியும்’ என்கிற விதமாகத் திருமதி லிண்டே தலையை ஆட்டினார்.

“ஆனி விஷயம் தானே? டில்லீ போல்டர் பள்ளியிலேர்ந்து வீட்டுக்குப் போனப்ப எங்கிட்ட வந்து சொன்னாள்.”  

“அவளை வைச்சிக்கிட்டு நான் என்ன பண்றதுன்னு தெரியலை. இனிமே பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு சொல்றாள். இந்த மாதிரி பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நான் பார்த்ததே இல்லை. அவ பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சதுமே ஏதாவது பிரச்சினை வரும்னு எதிர்பார்த்தேன். எல்லாம் அவ்வளவு நல்லாப் போகுதுன்னா அது ரொம்ப நாள் நீடிக்காதுன்னு எனக்குத் தெரியும். அவ ரொம்பச் சீக்கிரம் உணர்ச்சிவசப்படுவாள். நீங்க என்ன சொல்றீங்க திருமதி ரஷேல்?”  

“நல்லது. என் யோசனையைக் கேட்கிறதால சொல்றேன். அந்த பிலிப்ஸ் செஞ்சது தான் தப்புன்னு நான் நினைக்கிறேன். நேத்தி ஆனி கோபப்பட்டு சிலேட்டால அடிச்சதுக்குத் தண்டனை கொடுத்தது சரி தான். ஆனா இன்னிக்கு ஆனி கூட தாமதமா வந்த மத்தவங்களுக்கும் தண்டனை கொடுத்து இருக்கணும். அதுவும் இல்லாம தண்டனையாப் பொண்ணுங்களைப் பசங்க பக்கத்துல உட்கார வைக்கிறதை நான் ஏத்துக்க மாட்டேன். அது சரியில்லை. டில்லீ போல்டரும் ஆனி சார்பா ரொம்ப கோபப்பட்டாள். எல்லார் மத்தியிலேயும் ஆனி பிரபலம் ஆயிட்டாளாம். ஆனி இப்படி பிரபலம் ஆவாள்னு நான் நினைக்கவே இல்லை.”       

“அப்ப அவளை நான் வீட்டுலேயே இருக்க விடலாம்னு சொல்றீங்களா?” மரிலா வியப்புடன் கேட்டார்.

“ஆமாம். அவளா பள்ளிக்கூடம் போறேன்னு சொல்றவரைக்கும் வீட்டுலேயே இருக்கட்டும். ஒரு வாரம் ஆச்சுன்னா அவளே எல்லாத்தையும் மறந்துட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிரியப்படுவாள். இப்ப அவளைக் கட்டாயப்படுத்தி அனுப்பினா, இன்னும் என்னென்ன பிரச்சினையைக் கொண்டுவருவாள்னு தெரியாது. அந்த பிலிப்ஸும் ஒரு நல்ல ஆசிரியர் கிடையாது.”  

திருமதி லிண்டே சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட மரிலா ஆனியைப் பள்ளிக்கூடம் போகச் சொல்லவில்லை. ஆனி வீட்டிலேயே பாடங்களைப் படித்தாள். வீட்டு வேலைகளைச் செய்தாள். டயானாவுடன் விளையாடினாள். ஆனால் கில்பர்டைத் தெருவில் பார்த்தாலோ, ஞாயிறு அன்று மாதாக்கோவிலில் பார்த்தாலோ கோபத்துடன் முறைத்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள். இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க டயானா செய்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. தன்  வாழ்நாள் இறுதி வரை கில்பர்ட்டை வெறுக்கவேண்டும் என ஆனி முடிவு செய்துவிட்டாள்.  

– தொடரும்..

– ஞா. கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *