ஒரு கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் மலையடிவாரத்தில், மைக்கேலும், அவளுடைய மனைவி சாராவும் வசித்து வந்தார்கள். இருவரும் நல்ல உழைப்பாளிகள். தங்கள் வீட்டில் நான்கு மாடுகளை வைத்துப் பராமரித்தார்கள். பால் ஓரளவு கிடைத்தது. தயிர், நெய் மற்றும் பாலாடைக் கட்டிகளைத் தயாரித்து, தங்கள் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை வியாபாரம் செய்து பிழைத்து வந்தார்கள்.
ஒரு வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமை தோறும் பக்கத்தில் இருக்கும் பெரிய நகரத்தில் சந்தை கூடியது. அங்கே பாலாடைக் கட்டிகள் நன்றாக வியாபாரம் ஆகி வந்தன. மைக்கேல் சனிக்கிழமைச் சந்தைக்குச் சென்று பாலாடைக் கட்டிகளை விற்று வந்தான். இதன் மூலம் சிறிதளவு வருமானமும் அவர்களுக்குக் கிடைத்தது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மைக்கேல், சந்தைக்குச் சென்று பால் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்து, தனக்குக் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தான். இருவரும் கிடைத்த வருமானத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாரா, எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னுடைய வேலைகளைச் செய்வாள். வேலை செய்யும் போது பாடிக்கொண்டே வேலை செய்வது அவளுடைய வழக்கம்.
அன்று சாரா ஏனோ அமைதியாக இருந்தாள். வழக்கமான உற்சாகம் அவளிடம் இல்லை. பாடவும் இல்லை அவள்.
“என்ன ஆச்சு சாரா? காலையில் இருந்து உன்னுடைய பாட்டுச் சத்தம் கேக்கவே இல்லையே? உடம்பு சரியில்லையா?” என்று அக்கறையுடன் விசாரித்தார் மைக்கேல்.
“அதெல்லாம் சரியாத் தான் இருக்கு. ஆனால், எனக்கு ஒரு வினோதமான கனவு வந்துச்சு. அதை நினைச்சு நினைச்சு எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. என்னால அந்தக் கனவை மறக்கவே முடியலை!”
“அப்படி என்ன கனவு வந்தது? உனக்குத் தான் அடிக்கடி நல்ல நல்ல கனவுகள் வருமே? உடனே எங்கிட்ட சந்தோஷமாப் பகிர்ந்துக்குவயே? இப்போ என்ன திடீர்க் கவலை?”
“இல்லை, இந்தத் தடவை மூணு நாளா ஒரே கனவு திரும்பத் திரும்ப வருது. அதை என்னால மறக்கவே முடியலை. நிஜமா நடக்கற மாதிரியே தத்ரூபமா இருக்கு.”
“அப்படி என்ன கனவு? எனக்கும் சொல்லேன், கேக்கறேன்.”
“அது வந்து சந்தைக்கு நானும் உங்களோட வரேனாம். அந்தச் சந்தை இருக்கற இடத்தை மூணு தடவை சுத்தி வரேனாம். மூணு சுத்து சுத்தி முடிச்சதும் பெரிய பணக்காரியா மாறிடறேனாம்!”
சாராவின் கனவைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தான் மைக்கேல். சாரா, கோபத்துடன் அவனை முறைத்தாள்.

“திரும்பத் திரும்ப ஒரே கனவு வந்து தொந்தரவு பண்ணுதுன்னு நானே கவலைப்பட்டுட்டு இருக்கேன். நீங்க எனக்கு ஆறுதல் சொல்லாம இப்படி கேலி செய்யலாமா?”
“கேலி செய்யணும்னு நினைக்கலை. ஆனால், உன்னோட விசித்திரமான கனவைக் கேட்டதும் சிரிப்பை அடக்க முடியலை. கோவிச்சுக்காதே. சரி, இப்போ என்ன செய்யலாம்னு பாக்கலாம். அடுத்த சனிக்கிழமை வரை பொறுமையா இரு. சனிக்கிழமை என்னோட நீயும் சந்தைக்கு வந்து உன் ஆசை மாதிரியே சந்தையை மூணு சுத்து சுத்திட்டு வா உனக்கும் திருப்தியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு மாடுகளைக் கவனிக்கப் போய்விட்டான்.
சாராவுக்கு அடுத்த சனிக்கிழமை வரை காத்திருக்கும் அளவிற்குப் பொறுமை இல்லை. அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டாள். கணவன் எழுந்து வருவதற்கு முன்னால் கிளம்பி, பக்கத்து ஊர்ச் சந்தை நடக்கும் இடத்தை அடைந்தாள்.
அங்கே யாருமே இல்லை. மூன்று தடவை அந்தச் சந்தையை சுற்றி வந்தாள். மூன்றாம் முறை சுற்றி முடித்த பின்பு, களைத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்து இளைப்பாறினாள். அப்போது அங்கே ஒரு புதிய குரல் கேட்டது.
“சகோதரி, வணக்கம். யார் நீங்க? இங்கே தனியாக என்ன செயதிட்டிருக்கீங்க?” என்று கேட்டான் ஒரு புதியவன். அவனைப் பார்க்கும் போது ஊர் ஊராகச் சுற்றும் நாடோடி போலத் தெரிந்தான்.
“வணக்கம் சகோதரரே, என் பெயர் சாரா. பக்கத்து ஊரிலிருந்து வருகிறேன்.” என்று ஆரம்பித்து அவனிடம் தன்னுடைய கனவைப் பற்றிச் சொன்னாள் சாரா.
அவனும், அதை முழுதாகக் கேட்டதும் வாய்விட்டுச் சிரித்தான்.
“என்ன சகோதரி இது! ஒரு கனவை நம்பி இப்படி அங்குமிங்கும் அலையலாமா? எனக்குக் கூட ஒரு விசித்திரமான கனவு வந்தது. பக்கத்தில் இருக்கும் ஊரில் ஒரு தம்பதி ஊர்க் கோடியில் வசிக்கிறாங்க. அவங்க வீட்டுல மாடுகளை வளக்கறாங்க. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்யறாங்க. அவங்க வீட்டு மாட்டுக் கொட்டிலில், தரைக்குக் கீழே பொக்கிஷம் இருக்கறதா என் கனவுல வந்துச்சு. நான் அதை எல்லாம் நம்பலை. நீயும் உன் வீட்டுக்குக் காலா காலத்துல திரும்பிப் போய் ஓய்வெடுத்துக்கோ. வெயிலில் அலைய வேணாம்.” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அந்த வழிப்போக்கன்.
சாராவுக்கு இந்தத் தகவலைக் கேட்டதில் இருந்து ஒரே படபடப்பாக இருந்தது. வீட்டுக்குப் போகும் பாதையில் வேகவேகமாக நடந்து சென்றாள்.
சாராவைக் காணாமல் கவலையுடன் இருந்த மைக்கேலுக்கு அவளைப் பார்த்ததும் நிம்மதியாக இருந்தது.
“சொல்லாமக் கொள்ளாம எங்கே போனே சாரா?” என்று கோபத்துடன் கேட்டான்.
“பக்கத்து ஊருக்குப் போனேன் மைக்கேல்” என்று ஆரம்பித்த சாரா, நடந்தவற்றை அவனிடம் அப்படியே எடுத்துச் சொன்னாள்.
“போதும், போதும் நீயும் உன்னோட கனவும்! நடந்ததை எல்லாம் மறந்துட்டு வேலையைப் பாரு.” என்று கடிந்துகொண்டான் மைக்கேல். சாராவோ, அவன் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. பிடிவாதமாகச் சென்று மாட்டுக்கொட்டிலின் தரைப் பகுதியைத் தோண்ட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் ஒரு பழைய இரும்புப் பெட்டி கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தபோது அவர்கள் இரண்டு பேருக்கும் பயங்கர ஆச்சர்யம்.
முதலில் சாதாரண உலோகத்தில் நாணயங்கள். அதற்குக் கீழே வெள்ளி நாணயங்கள். அதற்கும் கீழே தங்க நாணயங்கள். அவர்களுடைய மனங்களில் மகிழ்ச்சி பொங்கியது. கை நிறைய நாணயங்களை அள்ளிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அன்றிலிருந்து அவர்களுடைய பொருளாதார நிலை நன்றாக உயர்ந்தது. எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு, தங்களுடைய பால் பண்ணையை விரிவுபடுத்தி வழக்கம் போல உழைத்தபடி, ஆனந்தமாக வாழ்க்கை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சாராவின் கனவுகள் நின்று போயின.
புவனா சந்திரசேகரன்.
