குழந்தைகளே! குழந்தைகளே!
ஓடி ஓடி வாருங்களேன்!
கூடி நின்று நாமும் இன்று
ஆடிப் பாடிக் கற்றிடுவோம்!
தமிழ் மாதப் பெயர்களையும்
தெரிந்துகொள்வோம் பாங்காக!

தமிழ் வருட மரத்தில் பூக்கும்
பன்னிரெண்டு மலர்கள் இவை!
ஒவ்வொன்றும் ஒரு நிறம்!
ஒவ்வொன்றும் தனி மணம்!
சித்திரையும் வைகாசியும்
ஆனி, ஆடி, ஆவணியும்
புரட்டாசியும், ஐப்பசியும்
கார்த்திகையும் மார்கழியும்
தை, மாசி, பங்குனியுடன்
பன்னிரெண்டு மலர்கள் இவை!
சித்திரையாம் முதல் மாதத்தில்
கத்திரி வெயில் கொளுத்திடுமே!
தொடரும் மாதம் வைகாசியில்
கோடை வசந்த மாற்றங்கள்
விடுமுறைக் கொண்டாட்டத்தில்
விதவிதமாய் விளையாடுவோம்!
ஆனி, ஆடி, ஆவணி மாதங்களும்
அடுத்தடுத்து அணி வகுக்கும்
புரட்டாசியும் அடுத்து வந்து
புனிதமாக நிமிர்ந்து நிற்கும்!
ஐப்பசி மாதம் வந்தாலே
பண்டிகைகள் கதவைத் தட்டும்!
கார்த்திகையாம் மாதம் தனில்
கருமேகங்கள் கூடிவரும்!
இருள் நீங்கி ஒளி சேரும்!
மழை பொழிந்து வளமாக்கும்!
மார்கழி மாதக் கோலங்களும்
இல்லங்களின் எழில் கூட்டும்
இசை, நடனம், நாடகத்துடன்
கலைகளையும் போற்றும் மாதம்!
தை மாதம் பிறந்து விட்டால்
வாழும் வழிகள் பிறந்து விடும்!
வளமும் பொங்கிச் செழித்திடுமே! !
நலமும் சிறக்கும் மாதமிது!
பண்பாட்டுடன் கலாச்சாரம்
போற்றும் மாதம் மாசி மாதம்!
மரங்களின் இலைகள் துளிர்த்து
பங்குனியை வரவேற்றிடுமே!
சித்திரையில் தொடங்கியுமே
பங்குனியில் முடியும் ஆண்டில்
பல கலைகள் கற்றிடுவோம்!
கல்வியிலும் சிறந்து நிற்போம்!
– புவனா சந்திரசேகரன்
