thangai

பள்ளி முடிந்து வெளியில் வந்து பார்த்த வேலன் தன் தங்கை ஜோதியைக் காணாமல் பள்ளி முழுவதும் சுற்றி வந்தான். எங்கேயும் காணாமல் போகவே அவனுக்குப் பயம் அதிகரித்தது. ஏற்கெனவே அழுது கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது இன்னும் அழுகை அதிகமானது. எல்லா மாணவர்களும் சென்றிருக்க, ஒவ்வொரு ஆசிரியர்களாக வெளியில் வந்தார்கள்.

வேலன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவனுடைய வகுப்பு ஆசிரியை தேவி, “என்ன வேலன் இன்னும் வீட்டிற்குப் போகலையா?, ஏன் அழுகிறாய்?” என்றார்.

அவரைப் பார்த்துக் கொஞ்சம் தைரியம் பெற்றவன், அழுது கொண்டே தன் தங்கையைக் காணாததைச் சொன்னான். அந்த ஆசிரியைக்கும் பதட்டமாகிவிட்டது. அவனிடம், “தினமும் உங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல யார் வருவார்கள்?” என்றார் ஆசிரியை.

“நாங்க ரெண்டு பேரும் தான் போவோம் மிஸ்” என்றான் வேலன். “ஏன் உங்க வீட்டிலிருந்து யாரும் கூட்டிக்கிட்டுப் போக வரமாட்டாங்களா?” என்று வகுப்பு ஆசிரியை கேட்கவும்,  “அம்மா வேலைக்குப் போயிருவாங்க மிஸ் அப்பா எங்களைக் கண்டுக்க மாட்டாங்க, அதனால நானும் என் தங்கச்சியும் தான் போவோம் ” என்றான் தேம்பலுடன்.

“உன் தங்கை எந்த வகுப்பில் படிக்கிறாள்?” என்ற ஆசிரியையிடம், “நான்காம் வகுப்பு மிஸ்”என்றான். உடனே அந்த ஆசிரியை அவனையும் அழைத்துக் கொண்டு நான்காம் வகுப்பு ஆசிரியையைத் தேடினார்கள்.

வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஆசிரியையிடம் நடந்ததைச் சொல்லிக் கேட்கவும், “பள்ளி விட்டதும் கிளம்பினவளை நான் பார்த்தேனே? அதுக்குள்ள எங்க போயிருப்பா?” என்றார் அவரும் அதிர்ந்து போய்.

இன்னும் சில ஆசிரியைகள் கூட்டம் கூடவும், “அதற்குள் எங்கேயும் போயிருக்க முடியாது; வாங்க தேடலாம்” என்று ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள்.

பக்கத்தில் இருக்கும் கடையிலும் விசாரிதார்கள். பள்ளிக்குள்ளேயே சென்று பாத்ரூம் முதற்கொண்டு தேடிவிட்டார்கள்;  எங்கும் காணவில்லை. வேலனுக்குப் பயத்தில் கைகால்கள் நடுங்கின. அழுது கண்ணெல்லாம் வீங்கிச் சிவந்துவிட்டது.

அவனுக்குத் தங்கை என்றால் அவ்வளவு பிடிக்கும்; இருவரும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருப்பவர்கள். பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றவுடன், காலையில் சமையல் செய்த பாத்திரத்தை எல்லாம் எடுத்து விளக்கிச் சுத்தம் செய்து தருவாள் ஜோதி.

வேலன் சாதம் மட்டும் வைத்து விட்டு தங்கைக்கும் அவனுக்கும் டீ போட்டு எடுத்து வந்து வாசலில் அமர்ந்து கொள்வார்கள். அந்த டீயை அருந்தி விட்டு இருவரும் வீட்டுப் பாடம் செய்வார்கள். அவனுடைய அம்மா கூலி வேலைக்குச் செல்பவர். பொழுது போனதும் தான் வருவார். வந்த சலுப்பில் அவருக்குக் குழம்பு வைப்பதே கஷ்டமாக இருக்கும். அதைப் புரிந்து கொண்ட இரு குழந்தைகளும், சாப்பாடு வைத்து  பாத்திரம் சுத்தம் பண்ணி வைப்பது, அந்த தாய்க்கு அவ்வளவு சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரும்.

இருந்தாலும் தன் குழந்தைகளின் கையைப் பார்ப்பவளுக்கு மனது கேட்காமல், “நானே வந்து செய்திருப்பேன் நீங்க ஏன் குட்டி சிரமப்படுறீங்க”,  என்பாள். “பரவாயில்லை  நீங்க வந்து செய்வதற்கு லேட் ஆகும். காலையிலிருந்து வெயிலில் வேலை செய்யும் உங்களுக்கு, வீட்டிற்கு வந்து எல்லா வேலையும் செய்வது கஷ்டமாக இருக்கும். பாப்பாவுக்கும் பசிக்கும்.  அதனால தான் செய்தேன் அம்மா” என்று பொறுப்பாக பதில் சொல்வான் எட்டாம் வகுப்புப் படிக்கும் அந்த பாலகன்.

அப்படி தங்கை, அம்மா என்று குடும்பத்தில் பாசத்தை பொழிந்தவன் தங்கையைக் காணாமல் துடித்துப் போனான். ஆசிரியர்களும் இதற்கு மேல் தாமதிக்க வேண்டாம் என்று போலீஸிற்குத் தகவல் தந்தார்கள். அழுது கொண்டிருந்த வேலன் எதேச்சையாகத் திரும்பவும், காம்பவுண்ட் சுவற்றிற்கு அந்தப் பக்கம்  கை தெரிந்த மாதிரி இருந்தது.

அதே சமயம் போலீஸும் வந்தது . அந்த பெண் போலீஸைப் பார்த்துப் பயந்து போனாள். இரண்டு கான்ஸ்டபிள் சுவர் மேல் ஏரி அந்தப் பக்கம் குதித்து,  குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெண்ணைப் பிடித்தார்கள். 

வகுப்பு ஆசிரியையை அழைத்து, “மிஸ் அங்க கை தெரிந்தது” என்றான். அதை கேட்டதும், எல்லா ஆசிரியைகளும் அங்கே ஓடினார்கள். அந்தச் சின்ன சந்தில் ஒரு ஆள் நுழையும் அளவிற்குத் தான் இடம் இருந்தது. அங்கே ஒரு பெண் துள்ளிக் கொண்டிருந்த  ஜோதியை அழுத்திப் பிடித்திருந்தாள்.

ஜோதி வேலனைப் பார்த்ததும் ஓடிவந்துக் கட்டிக்கொண்டு அழுதாள். “அண்ணா! அவங்க என்னை அடிச்சாங்க..” என்றாள். அவனுடைய ஆசிரியை, “நீ எப்படி அவங்களோட போனே?” என்று கேட்கவும்,  “அவங்க எங்க அம்மாவோட தோழியாம்; அம்மா காசு கொடுத்து விட்டு எனக்கு மிட்டாய் வாங்கி தரச் சொன்னாங்களாம்,  அவங்க எனக்கு நிறைய மிட்டாய் வாங்கித் தந்தாங்க அதனால போனேன்”, என்று அழுது கொண்டே சொன்னாள்.

“இங்க பாரு ஜோதிமா இனிமேல் இப்படி யார் கூப்பிட்டாலும் போகாதே. உனக்குத் தெரிந்தவராக இருந்தால் கூட போகாதே. குழந்தைகளைக் கடத்துகிறவர்கள் இப்படி எல்லாம் பொய் சொல்லி உங்களுடைய ஆசையைத் தூண்டிவிட்டு அழைத்துச் சென்று விடுவார்கள். யார் எது கொடுத்தாலும் வாங்காதே. உனக்கு மிட்டாய் சாப்பிடனும் போல இருந்தால் அம்மாவையே வாங்கித் தரச்சொல்”,  என்று அவளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொன்னார்.

அப்பொழுது போலீஸ்காரர் இவர்கள் அருகில் வந்தவர், “சரியான நேரத்தில் போன் பண்ணிருக்கீங்க.. அந்தப் பெண், குழந்தைகளைக் கடத்தி விற்பவள்,  இதையே ஊர்ஊராகச் செய்கிறாள்.. இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”, என்று சொல்லிவிட்டுச் சென்றார். வகுப்பு ஆசிரியை மற்ற ஆசிரியைகளை அனுப்பி விட்டு இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக வீட்டில் விட்டு விட்டு, தன் வீடுநோக்கிச் சென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *