பல வருடங்களுக்கு முன் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் அதாவது ஃப்ரிட்ஜ்ஜில் தக்காளி, முட்டை, வெங்காயம், ஐஸ்கிரீம் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தாங்க. சூப்பர் மார்க்கெட்டின் மரப்பலகையில் இருந்ததிலிருந்தே நால்வரும் நண்பர்கள்தான். (பல வருடங்களுக்கு முன்னாடி ஃப்ரிட்ஜா? அதெப்படின்னு கேக்குறீங்களா.. நோ..நோ.. “அதெப்படி?” என்று கேட்காமல் “அப்படியா!”என்ற ஆச்சர்யத்தோடு நம் கற்பனை உலகத்தில் தொபுக்கடீர்னு குதிச்சிடுங்க. ஓகே?) அந்த நால்வரில் வெங்காயம்தான் கொஞ்சம் விவேகமானவன்.
அன்று இரவு நால்வரும் பேசிக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக் குட்டி, சோனு ப்ரிட்ஜ் கதவைத் திறந்து, “ஹை..நாளைக்கு நம்ம வீட்டுல விருந்து சாப்பாடு!” என்று சந்தோஷமாகக் கூவியபடி மஞ்சள்,உப்பு தோய்த்த மீன் இருந்த தட்டை பிரிட்ஜில் வைத்துக் கதவை மூடி விட்டு ஓடினான்.
“ஹை.. நாளைக்கு என்னைச் சாப்பிட்டுவிடுவாங்க.. ஜாலி!” என்று ஐஸ்க்ரீம் உற்சாகமாய்க் கூவியது.
“நான் நாளைக்கு சுவையான ஆம்லெட் ஆகப்போகிறேன்,” என்று முட்டையும் தன் தட்டிலேயே குதிக்க, தக்காளி “நாளை சோனுக்குப் பிடித்த தக்காளி ரசத்தின் ஹீரோவாகப் போகிறேன்” என்று தன் காம்பைத் தூக்கி விட்டுக் கொண்டது. வெங்காயமோ, “நான் பிரியாணிக்குதான் வெட்டுப்படுவேன்னு நினைக்கிறேன். ரொம்ப ஜாலி இல்லையா” என்று சிரிக்க, “ம்ம்.. ரொம்ப ஜாலிதான்..” என்ற கிண்டல் குரலில் நால்வரும் திரும்பிப் பார்த்தனர்.
புதிதாக உள்ளே வந்த மீன் தான் அந்த கிண்டல் குரலுக்குச் சொந்தக்காரர். “வணக்கம் மீன் அண்ணா!”
“வணக்கம்! வணக்கம்! ஆனால் உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.”
“ஏன்? ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“நீங்கள் நாளை உணவாகப் போகிறீர்கள். ஆனால் ஒருமுறைகூட பீச்சைப் பார்க்கவே இல்லையே!”
“பீச்சா?”
“ம்.. பீச்! கடற்கரை! பெரிய மணல் பரப்பு இருக்கும்; மணலெங்கும் அள்ள முடியாத அளவிற்கு சிற்பிகள் இருக்கும்; கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் தான் தெரியும்; அலைகள் பஞ்சு போல கரையில் காற்றில் விளையாடும்.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது!” என்று ஆச்சர்யமான குரலில் கூறி இறுதியில், “இதையெல்லாம் உங்களால் இனி பார்க்கவே முடியாது!” என்று சோகமான குரலில் முடித்தது. அந்த மீன்.
“கடற்கரை அவ்வளவு நன்றாக இருக்குமா?” ஐஸ்கிரீம் கண்களை அகலமாக விரித்துக் கேட்டது.
“ஆமாம்.. ஆமாம்..” என்ற மீன் இன்னும் விலாவாரியாக கடற்கரையின் அருமை பெருமைகளை எடுத்துக்கூற, நால்வருக்குமே கடற்கரையைக் காணவேண்டும் என்ற ஏக்கம் வந்தது.
முட்டை, “எப்படியும் நாளை நாம் உணவாகப் போகிறோம். அதற்குள் பீச்சைப் பார்த்துவிட்டு வரலாமா?” என்று ஆசையாகக் கேட்டது.
நால்வரில் கொஞ்சம் விவேகமான வெங்காயம் சொன்னது, “ஆனால் அது ரொம்பவும் ஆபத்தான பயணமாச்சே!”
” என்னப்பா ஆபத்து? நாளை எப்படியும் உணவாகப் போகிறோம். அப்படி ஆபத்து நேர்ந்தால், மனிதருக்குப் பதிலாக எறும்பு, பூச்சிக்கு உணவாவோம். அவ்வளவுதான் வித்தியாசம்!”, என்று தக்காளி தத்துவம் பேசியது.
“சரிதான்!” என்று வெங்காயம் அரை மனதாகத் தலையாட்டியது. எப்போது போவது? அது மார்கழி மாதம். நடு இரவிற்கு மேல் நன்கு குளிரும். ஐஸ்கிரீம் உருவாகாமல் இருக்கும் என்று அவர்கள் பேசி முடிவெடுத்தார்கள்.
தங்கள் திட்டப்படி, நள்ளிரவு மணி பன்னிரண்டைத் தாண்டியதும் கதவை மெல்லத் திறந்த தக்காளி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து, யாரும் இல்லை என்று முடிவு செய்ய, நால்வரும் வீட்டில் இருந்து கிளம்பினர்.
பேருந்து நிலையம் போய் காலியாக இருந்த பேருந்தில் ஏறினர். கடற்கரைக்கு வந்ததும் நால்வருக்கும் ஒரே குதூகலம்! சந்தோஷம்! மணல்வெளியில் ஆர்ப்பரித்தனர்; கடல் நீரில் கால் நனைத்தனர்; மணல் வீடு கட்டினர்; ஓடிப்பிடித்து விளையாடினர்.
“நல்லவேளை! நாம் பீச்சுக்கு வந்தோம்.. எப்படிப்பட்ட சுகத்தை அனுபவிக்காமல் உணவாகியிருப்போம்!”
என்று ஐஸ்கிரீம் சொல்ல, “ஆமாம்!” என்று அனைவரும் தலையாட்டினார்கள்.
ஆடி ஓடிக் களைத்து அப்படியே அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், தங்களை அறியாமல் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். தன் ஓடு சூடாவதை உணர்ந்து முதலில் கண் விழித்தது, முட்டைதான். ஆம்.. விடிந்துவிட்டது.. சூரியனும் வந்துவிட்டார். “அச்சோ! அப்போ ஐஸ்கிரீம்!” என்று சத்தமாக அதிர்ந்து பக்கத்தில் பார்க்க, ஐஸ்கிரீம் உருகியிருந்தது.
முட்டையின் சத்தத்தில் தக்காளியும் வெங்காயமும் விழிந்துவிட்டனர். உருகிய ஐஸ்கிரீமைப் பார்த்த மூவரும், “அச்சோ! ஐஸ்கிரீம் உருகி விட்டதே!” என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.
“சரி வாங்க வீட்டுக்குப் போகலாம்,” என்று பேருந்து நிலையம் போய் பேருந்தில் ஏறினார்கள். நள்ளிரவு போல பகல் நேரப் பேருந்து இருக்குமா? பயங்கரக் கூட்டம்! யாரோ கால்பட்டு தக்காளி நசுங்கி விட்டது. உடனே முட்டையும் வெங்காயமும், “அச்சோ! ஐஸ்கிரீம் உருகிவிட்டதே! தக்காளி நசுங்கி விட்டதே!” என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.
வீடு வந்ததும், இரவு போல முட்டை பேருந்திலிருந்து குதித்தது. இரவு குதித்தது மணலில்.. இப்போது தரையில்.. ஆம்! முட்டை உடைந்து விட்டது! உடனே வெங்காயம், “அச்சோ! ஐஸ்கிரீம் உருகிவிட்டதே! தக்காளி நசுங்கி விட்டதே! முட்டை உடைந்து விட்டதே!” என்று வெங்காயம் கண்ணீர் விட்டது.
பேருந்திலிருந்து இறங்கிய வெங்காயத்திற்கு ஒரே வருத்தம். நிமிர்ந்து வானிலிருந்த சூரியனைப் பார்த்து ” சூரியன் அண்ணா! ஐஸ் க்ரீம் உருகியபோது நான், தக்காளி, முட்டை எல்லோரும் கண்ணீர் விட்டு அழுதோம்.. தக்காளி நசுங்கியபோது, நானும் முட்டையும் கண்ணீர் விட்டு அழுதோம்.. முட்டை உடைந்த போது நான் கண்ணீர் விட்டு அழுதேன். ஆனால் நான் இப்போது வெட்டுப்படப் போகிறேன். எனக்கு யார் அழுவார்கள்?” என்று கேட்டது.
அதைக் கேட்ட சூரியன், “வெங்காயம்! வருத்தப்படாதே.. இனி நீ வெட்டுப்படும்போது உன்னை வெட்டுபவர் மட்டுமல்லாது, உன்னைச் சுற்றியுள்ள அனைவரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்..” என்று வரம் கொடுத்தது. வெங்காயமும் , “ரொம்ப நன்றி சூரியன் அண்ணா!” என்று சொன்னபடி வீட்டிற்குள் சென்றது. அன்றிலிருந்துதான் வெங்காயம் வெட்டும் போது அனைவருக்கும் கண்ணீர் வர ஆரம்பித்தது.
என்ன சிட்டுகளே! வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருவதற்கான ஒரு கற்பனைக் காரணத்தைக் கேட்டீங்களா? இப்போது அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்வோமா?
வெங்காயத்தை வெட்டும்போது ப்ரோப்பேன்-எஸ்- ஆக்சைடு என்ற நிலையற்ற வேதிப்பொருள் காற்றில் கலக்கிறது. அது நம் கண்களை அடையும்போதுஃ கண்களில் உள்ள நீர்ப் படலத்தில் சல்ப்யூரிக் அமிலமாக மாறுகிறது. இதனால் கண்களில் எரிச்சல் உருவாகிறது. அதிகப்படியான அமிலத்தன்மையைச் சரி செய்வதற்காக கண்ணீர் சுரப்பி, கண்ணீரை உருவாக்குகிறது. இது தான் வெங்காயத்தை வெட்டும் பொழுது நம் கண்கள் எரிச்சலடைவதற்கும், கண்ணீர் அதிகம் சுரப்பதற்குமான காரணம்.
நான்அனிதா செல்வம். தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.