குட்டிச் செல்லங்களே!
சென்ற மாதம் அறிமுகப்படுத்திய தையல் சிட்டுவை, யாராவது கவனித்துப் பார்த்தீர்களா? இந்த மாதம், உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், குருவியின் பெயர் கரிச்சான்.
மைனாவை விட அளவில் சிறியது; அடர்ந்த கருப்பு நிறம். இதன் பெயர் தெரியாவிட்டாலும், அடிக்கடிப் பார்த்திருப்பீர்கள். மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து, ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும்; வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடுகளின் மேல் அமர்ந்து, ஒய்யாரமாகச் சவாரி செய்யும். அவற்றின் மேல் உள்ள உண்ணிகளையும், ஈக்களையும் பிடித்துத் தின்னும்.
இதன் மற்ற பெயர்கள் ஆனைச்சாத்தன், வலியன், இரட்டை வால் குருவி. கருவெட்டு வாலி ஆகியவை. வால் நடுவே பிளந்து வெட்டுப்பட்டது போல் இருப்பதால், கருவெட்டு வாலி எனப் பெயர் வந்திருக்கலாம். கருவெட்டுவாலி என்பது மருவி, சில ஊர்களில், கருவாட்டுவாலி என்று அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இதன் பெயர் கரிக்குருவி.
இது அடைகாக்கும் காலத்தில், தனக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, காக்கா, கழுகு போன்ற பெரிய பறவைகள் வந்தால், விரட்டியடித்து விடுமாம். அதனால் இதற்கு ராஜகாகம் (KING CROW) என்ற பெயரும் உண்டு.
எனவே இது கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும் காலத்தில், கொண்டைக்குருவி போன்ற சிறிய பறவைகள் இதைக் காவல் தெய்வமாகக் கொண்டு இதன் எல்லைக்குள் கூடு கட்டி, தைரியமாகக் குஞ்சு பொரிக்கும்.
சமயத்தில் வல்லூறு போலக் குரல் கொடுத்து மைனா போன்ற பறவைகளைப் பயமுறுத்தித் துரத்தி விட்டு, அவற்றின் இரையைப் பிடுங்கித் தின்னுமாம்.
குழந்தைகளே! இந்தக் குருவியைக் கவனித்து அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்றால், அதைப் பற்றிய விபரங்களை மறக்காமல் எங்களுக்கு எழுதியனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.