ரகசியப் பூந்தோட்டம் என்ற ஆங்கில நாவல் 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் ஒரு முக்கியமான குழந்தை இலக்கிய நூலாக இது பார்க்கப்படுகிறது. பலமுறை மொழிபெயர்க்கப்பட்டும் இரண்டு முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டும் இந்த நாவல் வெளிவந்துள்ளது. இதைப் பூஞ்சிட்டு இதழுக்காக எளிய வகையில் தமிழாக்கம் செய்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சிறிய தொடர்கதையாக இது வெளிவரும்.
The Secret Garden – பிரான்சிஸ் ஹாட்க்ஸன் பர்னட்
தமிழில்: Dr. S.அகிலாண்ட பாரதி
1. புதிய இருப்பிடம்
மேரி லெனாக்ஸ் ஒரு பத்து வயது நிரம்பிய சிறுமி. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலம் அது. அவளது தந்தை இங்கிலாந்து சார்பில் இந்தியாவில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். அதனால் அவள் பிறந்தது முதலே இந்திய நாட்டில் தான்வளர்ந்து வந்தாள். அங்கு அவளுக்குத் தனி வீடு, வேலைக்காரர்கள் என்று எல்லாம் வசதியும் இருந்ததால் செல்லமாக வளர்ந்து வந்தாள். அவளது பெற்றோரும் அவளைக் கண்டிக்கவில்லை. அதனால் மற்றவர்களிடம் கோபப்படுபவளாக இருந்தாள். யாரையும் மதிக்காமல் எடுத்தெறிந்து பேசி வந்தாள். அவளது வீட்டின் வேலைக்காரர்களும் அவளைப் பார்த்து பயந்து ஒதுங்கியே இருந்தனர்.
திடீரென்று ஒருமுறை அவர்கள் வசித்த நகரத்தில் காலரா நோய் தீவிரமாக பரவ, அதில் அவளுடைய பெற்றோர்கள் மரணமடைந்தனர். அவளது தந்தையின் நண்பர் ஒருவர் மேரியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மேரியின் நடவடிக்கைகளைக் கண்டு அந்த வீட்டில் இருந்த குழந்தைகள் அவளைக் கிண்டலடித்து வந்தனர். அவளுடன் சேராமல் ஒதுக்கியே வைத்திருந்தனர். துள்ளித் திரிந்து இளவரசி போல வளர்ந்துவந்த மேரிக்கு அது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
மேரியின் மாமா ஸர். காலின் க்ரேவன் என்பவர் லண்டனில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு ஊரில் வசதியாக வாழ்ந்து வந்ததாகத் தெரிய வந்தது. அதனால் மேரியை அங்கு அனுப்ப அவளது தந்தையின் நண்பர் முடிவு செய்தார். இங்கிலாந்துக்குச் சென்ற அதிகாரிகள் சிலருடன் அவளை அனுப்பி வைத்தார். கப்பல் பயணம் மூலமாக இங்கிலாந்து சென்ற மேரியை அவளது மாமாவின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த திருமதி. மெட்லாக் என்ற பெண்மணி லண்டனில் வரவேற்றார்.
புதிய இடம் எப்படி இருக்குமோ தன்னை ஒழுங்காக கவனித்துக் கொள்வார்களா என்று பயந்து கொண்டே இருந்தாள் மேரி. திருமதி. மெட்லாக் இனிமையாகப் பேசும் நல்ல பெண்ணாக அமைந்திருந்தது மேரிக்குச் சற்று ஆறுதல்.
மெட்லாக் அவளிடம், “மேரி! நான் தான் உன் மாமாவோட காரியதரிசி. அவர் கொஞ்சம் வேலை அதிகம் உள்ள மனிதர். அடிக்கடி தொழில் நிமித்தமா வெளியூருக்குப் போயிடுவார். இப்போதுகூட வெளியூருக்குத் தான் போயிருக்கார். அவர் வர ஒரு மாதம் கூட ஆகலாம்.. நான் உன்னை அவரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். உனக்கு எல்லா வசதியும் செஞ்சு தரணும்னு உங்க மாமா சொல்லியிருக்கார்” என்று கூறினார்.
“சரி” என்று தலையை ஆட்டியபடி மேரி அவருடன் சென்றாள். கப்பல் பயணம் போன்றே லண்டனிலிருந்து யார்க்ஷயர் என்ற பகுதிக்குச் சென்ற அந்த சிறிய ரயில் பயணம் அவளுக்குப் புதிதாக இருந்தது. அவளது மாமாவின் வீட்டுக்குச் சென்று இறங்கியபோது இரவு நேரமாகி விட்டிருந்தது. மிகப்பெரிய தனி வீடாக அமைந்து, சுற்றிலும் நிறைய வெற்றிடங்களுடன் அருகிலேயே ஒரு காடும் சேர்ந்து காணப்பட்டது.
ஒருவித பரபரப்புடனே மேரி அங்கு சென்றிருந்தாள். ஏதோ ஒரு தனிமை உணர்வும் பயமும் அவளுக்கு ஏற்பட்டது. “இந்த வீடு எனக்குப் பிடிக்கவே இல்லை” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். மெட்லாக் அவளுக்கு சிறிது உணவு கொடுத்து உண்ண வைத்து விட்டு ஒரு அறையைக் காட்டினார். “இதுதான் உன்னோட அறை. இனிமேல் நீ இங்க தங்கிக்கலாம்” என்று கூறினார்.
மறுநாள் காலை இங்கிலாந்து நாட்டுக்கே உரிய தட்பவெப்பத்தின் படி சற்றுக் குளிராகவே விடிந்தது. இந்தியாவில் சூரிய வெளிச்சத்துடன் வாழப் பழகியிருந்த மேரிக்கு அந்தச் சூழல் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஜன்னல் வழியே தெரிந்த காட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேரி விழித்து விட்டாளா என்று பார்க்க வந்த பணிப்பெண் மார்த்தா அவளுக்கு வீட்டின் சில பகுதிகளைச் சுற்றிக் காட்டினார். “என்னோட வீடு இங்கே பக்கத்துல ஒரு கிராமத்துல இருக்கு. எனக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் பெயர் டிக்கன். பன்னிரண்டு வயசாச்சு. அவனுக்கு மிருகங்கள் எல்லாமே ரொம்ப பிடிக்கும். அவன்கிட்ட ஒரு குட்டி குதிரை இருக்கு. அந்தக் குதிரை அவன் பின்னாலேயே போகும். நீ கூட அவன் கூட விளையாடலாம்..இந்த ஊர் நீ நினைக்கிற மாதிரி இல்ல! கோடை காலம் வந்தா இங்க ரொம்ப அழகா இருக்கும்” டபடவென நிறைய விஷயங்களைச் சேர்ந்தாற்போல் பேசிய மார்த்தாவை மேரிக்குப் பிடித்திருந்தது.
காலைக் கடமைகளை முடித்து உணவு உண்டபின், “நீ ஏன் வீட்டைச் சுத்தி இருக்குற தோட்டத்துக்குப் போய் விளையாடக்கூடாது? அங்க நம்ம தோட்டக்காரர் இருப்பார். அவர் உனக்கு உதவி செய்வார். நல்ல காத்து கிடைக்குமே!” என்று மார்த்தா கூற,
“இதோ போறேன்.. ரொம்ப நன்றி!” என்று சொல்லி வெளியே ஓடக் கிளம்பினாள் மேரி.
“ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. தோட்டத்தோட மேற்குப்பக்கத்துல ஒரு கதவு பூட்டி இருக்கும். அந்தப் பக்கம் மட்டும் நீ போகக்கூடாது. அது உன் மாமாவுக்குப் பிடிக்காது. அங்க யாராவது போனா ரொம்ப கோபப் படுவார்” என்றார் மார்த்தா.
ஒரு செயலைச் செய்யக்கூடாது என்றால் குழந்தைகளுக்கு ஆர்வம் வருவது இயல்புதானே! “ஏன் அங்க போனா என்ன?” என்று கேட்டாள் மேரி.
“உன் மாமாவின் மனைவி மிகவும் நல்லவங்க. அவங்க தான் அந்த தோட்டத்தை உருவாக்கினாங்க.. அவ்வளவு ஆசையா அவங்க வச்சிருந்த தோட்டம் அது. உங்க அத்தை அங்கிருந்த ஒரு மரத்தில இருந்து ஒரு முறை தவறி விழுந்துட்டாங்க.. எவ்வளவு சிகிச்சை குடுத்தும் காப்பாத்த முடியல.. இறந்து போய்ட்டாங்க. அதனால உங்க மாமா மனசு ஒடஞ்சு போய்ட்டாங்க.. கதவைப் பூட்டி சாவியை எங்கியோ மண்ணுக்குள்ள பொதச்சு வச்சுட்டாரு.. யார் அங்க போனாலும் அவருக்குப் பிடிக்காது. ஞாபகம் வச்சுக்கோ! நீ அங்க போனாலும் அவர் உன் மேல கோபப்படுவார்” மார்த்தா விளக்கமாகச் சொல்லவும் இதுவரை சந்தித்திராத தன் மாமாவின் மேல் சின்னக் கோபமும் அதிக பயமும் வந்தது மேரிக்கு.
“சரி,” என்று சொல்லிக் கொண்டே தோட்டத்தை நோக்கிச் சென்றாள் மேரி.
-தொடரும்..
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.