வணக்கம் பூஞ்சிட்டுகளே!
இந்த மாதம் நம்ம ‘கதை கதையாம் காரணம்’ பகுதில தெரிஞ்சுக்கபோற ஊர் : நாகப்பட்டினம்.
நாகப்பட்டினம், ஒரு அழகான கடலோர நகரம். நாகபட்டினத்துக்கு திருவாரூர் வழியாவும் வேளாங்கண்ணி வழியாவும், காரைக்கால் வழியாவும் போகலாம்.
நாம முன்னடியே இந்த பகுதில தெரிஞ்சுக்கிட்ட மாதிரி “பட்டினம்” அப்படிங்கிறதுக்கு கடலோரம் அமைந்த நகரம்’ன்னு அர்த்தம். உதாரணமா சென்னைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம்’ன்னு நிறைய ஊர்களை சொல்லலாம். இப்படி கடலோர நகரங்கள்’ல முக்கியமான ஒரு நகரம் – நாகப்பட்டினம்.
நாகப்பட்டினத்துக்கு நம்ம சங்ககாலத்துல ஏகப்பட்ட பேர்கள் இருந்துச்சாம்.
ஸ்ரீலங்கா’ல இருந்து இங்க குடியேறின மக்களை ‘நாகர்’ன்னு அழைக்கிற வழக்கம் அப்போ இருந்ததால நாகர்ன்னு பேர் வந்துச்சாம்.
அப்பரும் திருஞானசம்பந்தரும் அவர்களோட தேவாரப்பாடல்கள்’ல இந்த ஊரை “நாகை”ன்னு அழைச்சதற்கான குறிப்புகள் இருக்காம்!
கடல் கடந்து கண்டங்கள் கடந்து இந்தியாவையும் அதன் கடலோரப் பகுதிகளையும் தெரிஞ்சுக்கறதுக்காக வந்த மேற்கத்திய பயணக்காரர்களான தாலமி, அவரோட பயணக்குறிப்புல இந்த ஊர ‘நிகம்’ ‘நிகமா’ அப்படின்னு பதிவு செஞ்சிருக்காராம்.
ஏழாம் நூற்றாண்டு வரைக்கும் நாகைன்னு மட்டுமே இருந்த பேரை, கடலோரத் துறைமுகம், வணிகம் மற்றும் வியாபாரத்துல கொடிகட்டிப் பறந்த நாகையை, நாகப்பட்டினம்ன்னு முதன் முதலில் அழைச்சது சோழர் காலத்துல தானாம்! அது மட்டுமில்ல சோழர் ஆட்சி காலத்துல குறிப்பா நாகப்பட்டினத்தை அப்போ ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்கர் ராஜா காலத்துல ‘சோழக்குலவள்ளிப்பட்டினம்’ அப்படின்னும் இந்த ஊருக்கு ஒரு பேர் இருந்துச்சாம்!
ஒரு ஊருக்கு இத்தனைப் பேர் காரணங்களான்னு மலைப்பா இருக்குல்ல குட்டீஸ்? அதான் நம்ம தமிழ்நாடோட தனிச்சிறப்பு!
நாகைக் கடற்கரையிலிருந்து பொங்கும் வங்கக்கடலில் சூரியன் மறையும் காட்சி
சரி, ஒருவழியா லாக்டவுன் எல்லாம் தளர்த்தியிருக்காங்க! மழைக்காலம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி பீச் போலாமேன்னு யோசிச்சீங்கன்னா அப்பா அம்மா சொல்படி நல்ல பாதுகாப்பான சூழல்ல, முகக்கவசம், சானிடைசர் எல்லாம் கைவசம் வெச்சிக்கிட்டு ஜாலியா நாகை பீச் ஒரு நடை போயிட்டு வாங்க.. கடலோரம் இருக்கும் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் பூங்காவை பார்க்க மறந்துடாதீங்க 🙂
சரி வரட்டுமா சிட்டூஸ்..
அடடா … கொசுறு தகவல் சொல்ல மறந்துட்டேனே!
இதோ இந்த மாத கொறிக்க கொஞ்சம் கொசுறு:
குறிச்சி என்ற சொல்லில் உங்க ஊர் பேர் முடியுதா..?
அப்போ உங்க ஊர், குறிஞ்சி நிலப்பகுதிகள் கொண்ட ஊர்ன்னு அர்த்தம். குறிஞ்சி’ன்னா மலை மலை சார்ந்த இடங்களும்ன்னு பொருள். மலைப்பகுதிகள் நிறைந்த ஊரை குறிஞ்சின்னு சொல்லி அது காலமாற்றத்துல குறிச்சின்னு ஆகிருச்சாம். உதாரணமா, அரவக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி.
சரி பூஞ்சிட்டுகளே, இதே மாதிரி இன்னொரு ஊரு கதையோட அடுத்த மாசம் உங்கள சந்திக்கிறேன்.
இந்தப் பகுதி உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா உங்களோட கருத்துக்களை மறக்காம எங்களுக்கு மின்னஞ்சல் பண்ணுங்க. அதுமட்டுமில்ல, இந்தப் பகுதில உங்க ஊருக்கான காரணம் தெரிஞ்சுக்கனும்னாலும் மின்னஞ்சல்’ல உங்க ஊர்பெயரக் குறிப்பிட்டு எங்களுக்கு எழுதி அனுப்புங்க.
நீங்க எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
வரட்டும்மா பூஞ்சிட்டுகளே!