இரவில் கேட்ட அழுகுரல்

தோட்டத்திற்குச் சென்ற மேரி, அங்கு பெரிய புல்வெளி, நிறைய மரங்கள், பூந்தொட்டிகள் இருந்ததைப் பார்த்தாள். தோட்டத்தின் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று கூட இருந்தது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. காய்கறிகள், கீரை,  பழங்கள் வளரக்கூடிய சிறிய சமையலறைத் தோட்டம் ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த செடிகளின் பெயரை நினைவுபடுத்த முயன்றாள் மேரி‌.

 அப்போது மண்வெட்டியுடன் வயதான மனிதர் ஒருவர் அங்கு வந்தார். ‘நீ யார்’ என்பது போல் மேரியைப் பார்த்தார். அவர் தன்னைப் பார்த்து முறைப்பது போல மேரிக்குத் தோன்றியது. எதுவும் பேசாமல் அவர் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். அப்போது ஒரு சிறிய சிவப்பு நிறக் குருவி அங்கு பறந்து வந்தது. சற்று நேரம் இனிமையாகப் பாடியபின் அது பறந்து சென்று ஒரு சுவற்றுக்குப் பின்னே மறைந்தது.

 மேரி தோட்டக்காரரிடம் சென்று, “ஒரு சிவப்புக் குருவியைப் பார்த்தேன்.. திடீர்னு அது பறந்து போயிடுச்சு” என்றாள்.

தோட்டக்காரர் ஒரு சீழ்க்கை ஒலி எழுப்ப, மீண்டும் அது சுவற்றின் பின்னாலிருந்து பறந்து வந்து அவரது காலடியில் அமர்ந்தது.

“இது ஒரு அன்பான பறவை. மனுஷங்களோட ரொம்ப நட்பா இருக்கும். இதோட குடும்பத்தைச் சேர்ந்த மத்த குருவிங்க இத விட்டுட்டு வேற எங்கேயோ போயிடுச்சு. அதனால இது தனியா இருக்கு” என்று அதைக் கனிவுடன் பார்த்துக் கொண்டே கூறினார் தோட்டக்காரர்.

secret garden
படம்: அப்புசிவா

“எனக்கும் யாருமே இல்ல.. நானும் தனியான ஆள் தான்” என்றாள் மேரி. இதைக் கேட்ட தோட்டக்காரருக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “நானும் உன்னை மாதிரிதான். எனக்கும் குடும்பம் இல்ல.. அதனால தான் நாம ரெண்டு பேருமே சிடுசிடுன்னு இருக்கோமோ என்னவோ?” என்றார்.

“என் பெயர் மேரி. உங்க பேரு?” என்று அவரிடம் மேரி கேட்க,

“என் பெயர் பென்” என்றார் அவர். அப்போது அந்தக் குருவி மீண்டும் சுவருக்குப் பின்னால் சென்று மறைந்தது.

“அங்கதான் அந்தக் குருவி இருக்கு.. ரோஜாச் செடிகளுக்கு மத்தியில..” என்றார்.

“இப்பயும் ரோஜாப்பூ இருக்கா?” ஆர்வமுடன் கேட்டாள் மேரி.

“தெரியல.. பத்து வருஷம் முன்னாடி நிறைய செடிகள் இருந்துச்சு”

“அப்படியா? அந்த தோட்டத்துக்குப் போற வழி எங்க?” என்று மேரி கேட்க,

“அங்கெல்லாம் போகக்கூடாது. தேவையில்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைக்காதே.. வீட்டுக்குப் போ” என்றார் தோட்டக்காரர்.

‘இப்பதானே நல்லாப் பேச ஆரம்பிச்சார்.. அதுக்குள்ள என்னாச்சு? இந்தியாவில் எல்லாம் வீட்ல வேலை செய்றவங்க என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துப்பாங்க..’ என்று யோசித்தபடியே வீட்டுக்கு நடந்தாள் மேரி.

 இப்படியே சில நாட்கள் கழிந்தன. தினமும் மேரி தோட்டத்திற்குச் சென்று விளையாடினாள்‌. வெளியில் விளையாடுவது அவளது உடல் நலத்துக்கு நல்லது என்று மார்த்தா கூட அவளிடம் கூறினாள். ஒருநாள் அந்த சிவப்புக் குருவியைப் மீண்டும் பார்த்தாள் மேரி. அதன் கூடு எங்கிருக்கிறது என்று தேட முயன்றாள். மூடி வைக்கப்பட்ட தோட்டத்திற்கு வழி எங்காவது தெரிகிறதா என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். அங்கிருந்த பெரிய சுவற்றுக்கு பின்னால் அந்தத் தோட்டம் இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. சுவற்றின் மேல் பல இடங்களில் அதிக அடர்த்தியாகக் கொடிகள் படர்ந்து, சுவரை நிறைத்திருந்தது. வாசல் எதுவும் இருப்பது போலத் தெரியவில்லை.

 அதிக நேரம் தேடியும் கிடைக்காததால் அன்று இரவு உணவின் போது அது குறித்து மார்த்தாவிடம் கேட்டாள்.

“அந்த பூட்டி வச்ச தோட்டம் எங்கே இருக்கு?” என்று மேரி கேட்க,

“அதைப் பத்திப் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்ல? உங்க மாமாவுக்குப் பிடிக்காது” என்றாள் மார்த்தா. அப்போது எங்கோ ஒரு அழுகுரல் கேட்டது.

“ஏதோ சத்தம் கேட்குதே?” என்றாள் மேரி.

“எங்கேயாவது காத்து பலமா அடிச்சிருக்கும்..” என்று மார்த்தா பதில் கூற,

“இல்ல.. யாரோ அழுத மாதிரி இருந்துச்சு..”

“நம்ம சமையல்காரம்மாவுக்குப் பல் வலியாம். அவங்க தான் அழுதுருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் மார்த்தா.

“அது பெரியவங்க சத்தம் மாதிரி இல்லையே..” என்று மீண்டும் மேரி கேட்டதற்கு  மார்த்தா பதிலே கூறவில்லை. தன்னிடம் ஏதோ மறைக்கிறாள் என்று மேரிக்குத் தோன்றியது.

அதன்பின் வந்த சில நாட்களில் அதிக மழை பெய்தது. அதனால் மேரியால் வெளியே போக முடியவில்லை. பொழுது போகாமல் வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தாள். சில நாணயங்கள், பழங்காலத்துப் பொருட்களுடன் விளையாட முயன்றாள். ஆனால் அவளுக்கு அவையெல்லாம் சீக்கிரமே சலிப்பை ஏற்படுத்தின.

திடீரென்று முன்பு ஒருமுறை இரவில் கேட்ட அழுகைக் குரல் மீண்டும் கேட்டது. குரல் வந்த திசையில் அவள் சென்ற போது ஒரு அறையிலிருந்து வெளியே வந்து அதன் கதவைப் பூட்டினார் திருமதி மெட்லாக்.

மேரியைப் பார்த்தவர், “இங்கெல்லாம் வரக்கூடாது.. இனிமே வந்தேன்னா நான் உன்னை உன் ரூம்ல போட்டுப் பூட்டிடுவேன்” என்று கடிந்துகொண்டார். மேரிக்குக் கோபமாக வந்தது.

‘இருக்கட்டும், இந்த வீட்ல என்னமோ நடக்குது.. சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்’ என்று மனதினுள் கூறிக் கொண்டாள். மழை நின்ற பின் மீண்டும் தோட்டத்தில் சுற்ற ஆரம்பித்தாள்.

 அந்த சிவப்பு நிறக் குருவி இப்போது மேரியுடனும் நன்றாகப் பழக ஆரம்பித்து விட்டது. ஒருநாள் அதன் பின்னால் மேரி ஓடிக்கொண்டிருந்த போது பளபளப்பாக ஏதோ மண்ணுக்குள் தென்பட்டது. அதை எடுத்துப் பார்க்க, அது ஒரு பழைய சாவி. ‘இதுதான் அந்த ரகசியப் பூந்தோட்டத்தோட சாவியா இருக்கும்னு நினைக்கிறேன். மாமா தோட்டத்தைப் பூட்டி மண்ணுக்குள் புதைத்து வச்சுட்டார்னு சொன்னாங்களே.. இப்போ நிறைய மழை பெஞ்சதால மண்ணெல்லாம் கரைஞ்சு ஓடிப்போய் இந்த சாவி வெளியே தெரிஞ்சிருக்கு’ என்று மகிழ்ச்சியுடன் தனக்குள் கூறி கொண்டவள் அதை வெளியே எடுத்தாள். அதை சுத்தமாகக் கழுவித் துடைத்துத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டாள்.

அந்த வீட்டிலிருந்த மேரியின் ஒரே தோழியான மார்த்தா சிறிய விடுமுறைக்காக தன் சொந்த ஊருக்கு சென்றிருந்தாள். திரும்பி வந்த அவள், “எங்க வீட்டில எல்லார்கிட்டயும் நான் உன்ன பத்தி சொன்னேன். எங்க அம்மா உனக்காக இந்த ஸ்கிப்பிங் கயிறு கொடுத்தாங்க என்றாள். புத்தம் புதிதாக இருந்த அந்தக் கயிற்றை பார்த்த உடனே மேரிக்கு தெரிந்துவிட்டது, மார்த்தா தன் குறைந்த ஊதியத்தில் மிச்சம் பிடித்து அதைத் தனக்காக வாங்கி வந்திருக்கிறாள் என்று.

“ரொம்ப நன்றி!” என்று சிறிய வெட்கத்துடன் கூறினாள் மேரி. இதுவரை அவள் யாருக்கும் நன்றி கூறியதே இல்லை. ஸ்கிப்பிங் கயிறைப் பார்த்ததும் “இதை எப்படி விளையாடனும்?” என்று மார்த்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

அதன் பின் ஸ்கிப்பிங் கயிற்றுடனே அவளது பொழுது கழிந்தது. ஓரிரு நாட்களில் வேகமாக ஸ்கிப்பிங் குதிக்கவும், ஸ்கிப்பிங்க் கயிற்றில் குதித்துக்கொண்டே தோட்டத்தைச் சுற்றிச்சுற்றி ஓடி வரவும் பழகிவிட்டாள். அப்படி ஒரு நாள் ஓடிக் கொண்டிருக்கையில் காற்று பலமாக அடிக்க, தோட்டத்துச் சுவற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த புதர்ச் செடிகள் காற்றில் அசைந்தன. செடிகள் விலகிய பகுதியில் ஒரு கதவின் தாழ்ப்பாள் தென்பட்டது. அதைப் பார்த்த உடனே மேரிக்கு பயங்கர உற்சாகம் ஏற்பட்டது. ‘இதுதான் அந்தத் தோட்டத்தோட வழி.. நான் கண்டுபிடிச்சுட்டேன்’ என்று சந்தோஷத்துடன் தனக்குள் கூறிக் கொண்டாள். சட்டைப்பையில் இருந்த சாவியால் அதைத் திறக்க முயன்றாள்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments