ஆதித்யா தாத்தா பாட்டியைப் பார்த்து உற்சாகத்தில் குதித்தான். குழந்தைகளுக்கே தாத்தா பாட்டி வந்தால் சந்தோஷம் தான்.

அவர்கள் ஆதித்யாவின் தந்தை அருணனின் பெற்றோர். சென்னை வாழ்க்கை பிடிக்காமல் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்போது ஊரடங்கு கொஞ்சம் தளர்த்திய சமயம் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி வந்தார்கள்.

ஆதித்யா அவர்களுக்குச் செல்லப் பேரன்.

 ஆதித்யா சென்னையின் பிரபல தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கிறான்.

“செல்லக் குட்டி, உனக்கு என்னடா வேணும்?” என்று தாத்தா கேட்க,

“தாத்தா, எனக்குப் புது ஸெல்ஃபோன் (அலைபேசி) வாங்கித் தாங்க” என்று ஆதித்யா சொன்னான். அருண் முறைத்தான்.

“உன் கிட்டத்  தான் ஏற்கனவே இருக்கே?” என்று அருண் மகனிடம் கேட்டான்.

“குழந்தை ஆசையாக் கேக்கறான்.பரவாயில்லை. அதையே வாங்கலாம்” என்று அப்பா சொல்லி விட்டார். ஆன்லைனில் ஆர்டர் செய்து ஃபோனும் வந்து விட்டது.

ஃபோனை எடுத்துக் கொண்டு அப்பாவையும் தாத்தாவையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு அடுத்த தெருவில் வசிக்கும் நண்பன் வீட்டுக்குக் கூட்டிப் போனான் ஆதித்யா. குழந்தைகள் புதிதாக எது வாங்கினாலும் நண்பர்களிடம் காண்பித்துப் பெருமை அடித்துக் கொள்வது வழக்கம் தானே என்று பெரியவர்கள் நினைத்தார்கள்.

karunai ullam1
படம்: அஜ்ஜிராஜ்

அங்கே போய் ஃபோனைத் தன் நண்பனுக்குப் பரிசாகத் தந்து விட்டான். பெரியவர்களுக்கு மனதில் வருத்தம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

வீட்டுக்கு வந்ததும் ஆதித்யா தாத்தாவிடம் சொன்னான்.

“தாத்தா, கோபமா உங்களுக்கு என் மேலே? என் ஃப்ரண்டோட அப்பாநாலு மாசத்துக்கு முன்னாலே விபத்தில் திடீர்னு இறந்து போயிட்டார். கஷ்டப்பட்டுத் தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டறாங்க. இப்ப ஆன்லைன் வகுப்புக்காக அவன் கிட்டே ஃபோன் இல்லாமல் அவனால் வகுப்புகளைப் பாக்க முடியலை. அதுக்காகத் தான் நான் வாங்கிக் கொடுத்தேன்” என்று சொல்லத் தாத்தா கேட்டார்.

“அது சரி, நீ பழசை அவனுக்குக் குடுத்துட்டுப் புதுசை நீயே வச்சுக் கிட்டிருக்கலாமே!” என்று தாத்தா கேட்டதும்,

” பழசை அவனுக்குக் குடுத்து அதில ஏதாவது பிரச்சினை வந்தா, சரி பண்ணப் பணத்துக்கு என்ன செய்வான்? என் கிட்ட இருக்கற பழசிலே பிரச்சினை வந்தாலும் நீங்க சரி பண்ணிக் குடுத்துருவீங்க. இல்லையாப்பா?” என்று தெளிவாகப் பேசிய மகனைப் பெருமையுடன் அருண் பார்க்கத் தாத்தாவும் ஆதித்யாவை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments