“ஹலோ சுட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? மாதா மாதம் நான் செஞ்சு காமிக்கிற செய்முறையை எல்லாம் செஞ்சு பாக்குறீங்களா? இந்த மாசம் ரொம்ப ஈசியான, அதே சமயம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் செய்யப்போறோம்” என பிண்டு சொல்ல,
“என்ன எக்ஸ்ப்ரிமெண்ட் பிண்டு? வழக்கம், போல நீ என்னல்லாம் பொருட்கள் வேணும்னு சொல்லு, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அனு.
பிண்டு, “ஓகே! இன்னிக்கு நம்ம செய்ய போற செய்முறைக்கு பேரு ‘மாயமந்திர மை’. அதை வெச்சு ஒரு ரகசிய கடிதம் எழுதப் போறோம்”.
“ரகசியம்னா காதுல தானே சொல்லுவாங்க, இது எப்படி கடிதம்?” என்ற ஆர்வத்தோடு பொருட்களை எடுக்க ஓடினாள் அனு.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் – அரை மூடி
தண்ணீர் – சிறிதளவு
கரண்டி – ஒன்று
சிறிய கிண்ணம் – ஒன்று
காட்டன் பட்ஸ் – ஒன்று
வெள்ளை காகிதம் – ஒன்று
விளக்கு அல்லது லைட் பல்ப்.
செய்முறை
1. எலுமிச்சம் பழத்தை கிண்ணத்தில் பிழிந்து, அதில் சிறிதளவு தண்ணீர் கலக்க வேண்டும்.
2. அந்தக் கலவையை நன்றாகக் கரண்டியை வைத்து கலந்து கொள்ள வேண்டும்.
3. காட்டன் பட்ஸ்ஸை அந்தக் கலவையில் நனைத்து, நமக்கு வேண்டிய ரகசிய செய்தியை காகிதத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.
4. காகிதத்தில் எழுதிய எழுத்துக்கள் காயும் வரை காத்திருக்கவும்.
5. நன்றாகக் காய்ந்த பிறகு, எரியும் விளக்கின் அருகிலோ அல்லது பல்ப்பின் மீதோ காகிதத்தை வைக்க மறைந்திருந்த எழுத்துக்கள் ப்ரவுன் நிறத்தில் ஒளிரும். இச்செயலை பெற்றோரின் உதவியோடு தான் செய்ய வேண்டும் லட்டுக்களே.
“வாவ் பிண்டு! அப்ப இனிமே ரகசியத்தைக் காதுல சொல்லாம இந்த மாதிரி எழுதிச் சொல்லலாமா! ஆமாம் எப்படி மாயமான எழுத்து மறுபடி வந்தது?”
“அதுவா, விளக்கின் ஒளியிலோ அல்லது வெப்பத்திலோ காகிதத்தை காண்பிக்கும் போது, எலுமிச்சை சாற்றிலுள்ள கரிம பொருள், ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ப்ரவுன் நிறத்தில் மாறுகிறது. அதுதான் இந்த செய்முறையின் சூத்திரம்” என சிரித்தது பிண்டு.
பிண்டு, “எலுமிச்சை சாற்றினை வைத்து எழுதுவது போல் ஆரஞ்ச் சாறு, தேன், பால், வெங்காய சாறு வைத்தும் ரகசிய கடிதம் எழுதலாம்”.
ஆக்ஸிஜனேற்றம் பற்றிய அறிவியல் உண்மைகள்
நாம் பெரிய உணவகங்களில் சாப்பிடப் போகும் போது, அங்கே பழத்துண்டுகளை நறுக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ஃப்ரூட் சால்ட்டாக வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அந்த சாலட்டில் உள்ள பழங்கள் ப்ரவுன் நிறமாகாமல் இருப்பது எப்படி?
இதுவே நம் வீட்டில், ஆப்பிளை நறுக்கி வைக்கும் போது ப்ரவுன் நிறம் ஆவது எப்படி?
ஆப்பிள் பழம், தன் தோலின் பாதுகாப்போடு இருக்கும் வரையில், உட்புறம் வெண்மையாக இருக்கிறது. இதுவே அதை வெட்டி வைத்த பிறகு, ஆப்பிளின் வெள்ளைப் பகுதியில் உள்ள ‘பீனால்’ என்ற வேதியியல் பொருள் காற்றோடு கலந்து, ‘பீனாலேஸ்’ என்ற என்சைம்(நொதி) மூலம் மெலனின் ஆக மாறுகிறது. அதானல் தான் வெட்டி வைக்கப்படும் ஆப்பிள், ப்ரவுன் நிறமாக மாறுகிறது. இந்த வேதியியல் மாற்றத்தின் பெயர் தான் ஆக்ஸிஜனேற்றம்.
அமிலங்கள்(ஆசிட்), பீனாலேஸ் என்சைம் வேலை செய்வதைத் தடுக்கிறது. அதனால் பிரபல உணவகங்களில் பழங்களை நறுக்கி, அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றினை கலந்து விடுகிறார்கள். எலுமிச்சைச் சாறு (சிட்ரிக் ஆசிட்), பீனாலேஸை தடுக்க, மெலனின் உருவாவதில்லை. இப்படிச் செய்யும் போது பழங்கள் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது.
இது போல் வேறு எந்த காய்கனிகள் காற்றில் ஆக்ஸிஜனேற்றம் அடையும் என்று கண்டுபிடியுங்கள் செல்லங்களே!
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.