முன்னொரு காலத்தில், விடிகாலையில் மேகங்கள் எல்லாம் ஆரஞ்சு  நிறமாகும்படியாக, சூரியன் மலை மேல் அப்போது தான் ஏறத்துவங்கி இருந்தான்.

ஒரு குட்டிக் குழந்தை அழகான வெள்ளைப் படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

Kutti Thoongumoonji
படம் : அப்புசிவா

‘கண் விழித்து, எழுந்திரு, எழுந்திரு,’ என்று கடிகாரம் டிக் டிக் என்று குரல் எழுப்பியது.  ஆனால் குழந்தைக்குத் தூக்கத்தில் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

சன்னலுக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் வாழ்ந்த ஒரு குருவி,  “நான் அவனை எழுப்புகிறேன்; தினமும் நான் தின்பதற்கு, அவன் தீனி போடுவான்.  நான் அவனைப் பாடி எழுப்புகிறேன்,” என்றது.

மரத்தில் அமர்ந்தபடி, தொடர்ந்து குருவி பாடிக் கொண்டேயிருந்தது.

“கண்விழி அன்பே,

கண்விழி அன்பே!”

அது பாடியது கேட்டு, தோட்டத்தில் இருந்த எல்லாப் பறவைகளும் விழித்து எழுந்து அதனுடன் சேர்ந்து பாடின.  ஆனாலும் குழந்தை விழிக்கவில்லை.

தெற்கிலிருந்து வீசிய காற்று, தோட்டத்தின் வழியே  புகுந்து வீசிய போதும் அவன் தூங்கிக் கொண்டேயிருந்தான்.

“எனக்கு இந்தக் குட்டிக் குழந்தையைத் தெரியும்;  நேற்று கூட இவனுக்காகக் காற்றாடி இயந்திரத்தைத் திருப்பிவிட்டேன்; சன்னல் வழியாக வீசி, முத்தம் கொடுத்து, அவனை எழுப்புகிறேன்” என்றது, காற்று.

அதன்படி சன்னல் வழியாகக் காற்று நுழைந்து, அவன் இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தது.  அவனுடைய சுருள் முடிகளை,  முகத்தில் விழச் செய்தது. ஆனாலும் அவன் படுக்கையில்  சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. 

“நான் கூப்பிடுவதற்காகத் தான், அவன் காத்திருக்கிறான்” என்றது பண்ணையிலிருந்த சேவல். “நான் அவனைத் தெரிந்து வைத்திருப்பது போல், வேறு யாருக்கும் அவனைத் தெரியாது;  ஏனென்றால், நான் அவனுக்குச் சொந்தமானவன். அதனால், நான் அவனை எழுப்புகிறேன்” என்றது. 

வேலியின் மீது ஏறி நின்று, இறக்கையை படபடவென்று அடித்தவாறு சேவல் கூவியது.

“கொக்கரக்கோ… கொக்கரக்கோ!

நான் உன்னை அழைக்கிறேன்

கண் விழித்து எழுந்திரு, எழுந்திரு!

கொக்கரக்கோ!”

சேவல் கூவிய சத்தம் கேட்டு, மஞ்சள் கோழிக் குஞ்சுகளும் வயதான கோழியொன்றும், புறாக்கூண்டில் இருந்த புறாக்களும், மாட்டுக் கொட்டகையில் இருந்த சின்ன செவலைக் கன்றுக்குட்டியும் விழித்துவிட்டன.

புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டிகள் கூட சேவலின் குரலைக் கேட்டன.  தொண்டை கரகரத்துப் போகும் வரை சேவல் கத்திக் கூவியும், குழந்தையை எழுப்ப முடியவில்லை.

இப்போது சூரியன் வானில் நன்றாகப் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டான்.  மலைக்குன்றுகளும், புல்வெளிகளும் சூரியக்கதிர் பட்டுப் பிரகாசித்தன.    பறவைகள் பாடிய தோட்டத்திலும், சேவல் சத்தம் போட்டுக் கூவிய பண்ணையிலும், தன் ஒளிக்கதிர்களைச் சூரியன் பரவ விட்டான். சன்னல் வழியாகக் குழந்தையின் முகத்தில் வெயில் படவே, குழந்தை கண்களைத் திறந்தான்.

“அம்மா! அம்மா!” என்று அவன் கூப்பிட்டான்.  அம்மா ஓடிவந்து அவனுக்கு உடைகளைப் போட்டுவிட்டாள்.

“என் குழந்தையை விழிக்க வைத்தது யார்?” என்று அம்மா கேட்டாள்.  ஆனால் யாருமே பதில் சொல்லவில்லை. 

ஏனென்றால் தன்னை விழிக்க வைத்தது அந்தச் சூரியன் தான் என்று அந்தக் குட்டித் தூங்குமூஞ்சிக்கும் தெரியாதே!

ஆங்கில மூலம் –  Little Sleepy Head – By Maud Lindsay.

தமிழில் – ஞா.கலையரசி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments