சிறுவர் சிறுமியர் அனைவரும் அபிநயா வீட்டுக்குப் படையெடுத்தார்கள். “ஏன் அபி இன்னும் உனக்கு கால் புண் சரியாகலயா?” என்றாள் லக்க்ஷனா.

“இன்னும் லேசா வலி இருக்கு லக்க்ஷனா” என்றாள் அபிநயா. “லேசாத்தானே வலி இருக்குன்னு சொல்றே, ஏன் விளையாட வரல, நாங்க எல்லாரும் இவ்வளவு நேரமாக உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டிருந்தோம்.

இன்று சனிக்கிழமை வேற, ரொம்ப போரடிக்குது. ஸ்ருதியிடம் விளையாட்டுக் கத்துக்கிடதுல இருந்து புதுசு புதுசா விளையாட ஆசையா இருக்குடி. இப்ப வரப்போறீங்களா? இல்லையா?” என்று அவளிடம் செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

“சரி சரி வரேன் இருங்க” என்ற அபிநயா தன் அம்மாவிடம் சென்று அனுமதி கேட்டாள். “சரி போய் விளையாடிட்டு வாங்க, பார்த்து விளையாடு அபிநயா உட்கார்ந்து விளையாடுங்க” என்றார் அவளின் தாய்.

அனுமதி கிடைத்ததும் சிட்டாகப் பறந்து விட்டார்கள் க்ரௌண்டிற்கு. அங்கே சென்றதும், “என்ன விளையாடலாம் ஸ்ருதி” என்று அவளைச் சூழ்ந்து கொண்டார்கள் அனைவரும்.

“பெரியம்மா அக்காவுக்கு கால் வலிக்கும்ன்னு உட்கார்ந்து விளையாடச் சொன்னாங்க. அதனால நாம கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடலாம்” என்றாள்.

 “சரி சொல்லித் தா ஸ்ருதி” என்று இனியா கேட்க, “சரிங்க அக்கா இரண்டு பேராத்தான் விளையாட முடியும். முதல்ல நீங்களும் நானும் விளையாடலாம், இவங்க எல்லாரும் பார்க்கட்டும்” என்றவள், கையுடன் கொண்டு வந்திருந்த கைக்குட்டையை காண்பித்து, “இந்த விளையாட்டுக்கு இந்த மாதிரி ஒரு கைக்குட்டையும் ஒரு கல்லும் இருந்தால் போதும்” என்றாள்.

“நாம கண்ணாமூச்சியா விளையாடப் போறோம்” என்றான் சஞ்சய். “இல்லை அது இன்னொரு நாள் விளையாடலாம் இதை கவனமா பாருங்க” என்றாள் ஸ்ருதி.

“குறைந்த பட்சம் இருவர் இவ்விளையாட்டை விளையாடத் தேவைப்படுவர். எதிரில் இருப்பவர் கண்களை இந்தக் கைக்குட்டையால் கட்டி விட வேண்டும்” என்றவள், இனியாவின் கண்களைக் கட்டி விட்டாள்.  

“இப்படி மணலை  இரு கைகளாலும் சிறு கரை போல நெடுகச் சேர்த்து, அப்படிச் சேர்க்கும் போதே

“கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்!  கீயாக் கீயாத் தாம்பாளம்!

kichu kichu 2

மச்சு மச்சுத் தாம்பாளம்! மாயா மாயாத் தாம்பாளம்“

என்று பாடியவாறே,  இந்த மணலில் சிறு குச்சியையோ கல்லையோ மறைத்து வைத்து விட வேண்டும். இதோ இந்தக் கல்லை நான் மறைத்து வைக்கறேன்” என்றாள் ஸ்ருதி.

“பாடி முடித்ததும், இப்போ இனியா அக்கா கண்கட்டை அவிழ்த்து விட வேண்டும். அவங்க இந்த நீள மணல் கரைக்குள்  நான் எங்கே கல்லை ஒளித்து வைத்திருக்கேன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

 எப்படினா? அவங்க இருகைகளையும் இணைத்துக் குச்சி மறைத்து வைத்திருப்பதாகக் கருதும் இடத்தை மூடிவிடவேண்டும். மூடப்பட்ட பகுதி தவிர மற்ற பகுதியில் உள்ள மண்ணைக் கலைத்துப் பார்க்கும் போது, அங்குக் குச்சி கிடைத்தால் மறைத்து வைத்தவர் வென்றவர் ஆவார். கையை வைத்து மூடியுள்ள இடத்தில் குச்சி இருந்தால் மறைத்து வைத்தவர் தோற்றவர் ஆவார்.

இப்போ எங்க இருக்கும்ன்னு உங்களுக்குத் தோணுதோ அங்கே இரு கையையும் கோர்த்து வைங்க அக்கா” என்றாள் ஸ்ருதி. இனியா தன் இரு கைகளையும் கோர்த்து ஒர் இடத்தில் வைக்க, ஸ்ருதி மற்ற இடத்தில் தேடி கல்லை எடுத்தாள்.

” இப்ப நான் தான் வெற்றி பெற்றேன். இதே நீங்க கை வைத்திருந்த இடத்தில் இந்தக் கல் இருந்திருந்தால் நீங்க தான் வெற்றி பெற்றிருப்பீங்க” என்றாள் ஸ்ருதி.

“நீ தள்ளு இனியா நான் அவ கூட விளையாடிப் பார்க்கறேன்” என்று ஆதிரா வந்து அமர்ந்தாள். இருவரும் விளையாட ஆதிரா வெற்றி பெற்றாள். அங்கே ஆரவாரமாகக் கைதட்டிக் கொண்டார்கள்.

 இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா. “சரி நாம இரண்டு இரண்டு பேராக சேர்ந்து விளையாடுவோம்” என்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டவர்கள், விளையாட்டைத் தொடர்ந்தார்கள். அன்றைய விடுமுறை அவர்களுக்கு இனிதாகக் கழிந்தது.

“செல்லங்களா!! உங்களுக்கு இந்த விளையாட்டுப் பிடிக்குமா? நீங்களும் இந்த விளையாட்டை விளையாடி இருக்கீங்களா? என்று கமெண்ட் பண்ணுங்க செல்லங்களா!!!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *