அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற மாநிலத்தைச் சேர்ந்த டஸ்கம்பியா என்ற ஊரில் பிறந்தார் ஹெலன் கெல்லர்.
ஹெலன் கெல்லர் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உடல்நலம் பாதித்தது. மூளைக்காய்ச்சல் நோய் எனக் கண்டறியப்பட்டது. அந்நோய் ஹெலனின் பார்வையைப் பறித்ததோடு கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் பறித்துக் கொண்டது.
சிறுவயதிலேயே ஏற்பட்ட தன்னுடைய குறைபாடுகளினால் அவரது மனநிலையே மாறிப்போயிருந்தது. அவருக்குக் கோபமும், பிடிவாதமும் சேர்ந்தது.
இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டு முக்கிய புலன்களை இழந்த ஹெலன் கெல்லர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் மருண்டு போயிருந்தார். பின்னர் ஹெலன் கெல்லருக்கு நிபுணத்துவ உதவி தேவை என்று நம்பிய பெற்றோர் வாஷிங்டென் சென்று அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் காது கேளாதருக்கான நலனிலும் கல்வியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். கிரகாம்பெல்லை “ஆன் சல்லிவன்” என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ஆன் சல்லிவன்தான் கும்மிருட்டான, நிசப்தமான ஹெலன் கெல்லர் உலகுக்கு ஒளியையும், ஒலியையும் கொண்டு சேர்த்தார்.
பார்க்கவும், கேட்கவும் முடியாத ஒரு சிறுமிக்கு எப்படி எழுத்துக்களையும், சொற்களையும் அறிமுகம் செய்வது? ஹெலன் கெல்லரின் உள்ளங்கையில் தன் விரல்களால் எழுதி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்தார் ஆன், அவற்றை விளையாட்டாக எண்ணிக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஆனால் தான் கற்றுக்கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு வாட்டர் (Water) என்று கைகளில் எழுதி காட்டும்போது ஹெலன் கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து அவரது இடது கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார் ஆன் உடனே சட்டென்று மலர்ந்தது கெல்லரின் முகம். முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு அதன் பெயரை உணர்ந்தார். அதே குதூகலத்தில் தனது வலது கையை தரையில் வைத்தார் கெல்லர் அதனை எர்த் என்று இடது கையில் எழுதிக் காட்டினார் ஆன் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினார் கெல்லர். சில நிமிடங்களிலேயே சுமார் முப்பது சொற்களைக் கற்றுக்கொண்டார்.
ஹெலன் லத்தீன்,பிரெஞ்சு,ஜெர்மனி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராட்க்ளிஃப் கல்லூரியில் சேர்ந்து படித்தார் ஹெலன்.இரண்டாவது ஆண்டில் படித்தபோது “என் கதை” என்ற தலைப்பில் சுயவரலாற்றை எழுதினார். இதைத்தொடர்ந்து “நான் வாழும் உலகம்”, “இருளிலிருந்து மீண்டேன்”, “நம்பிக்கை கொள்வோம்” போன்ற நூல்களையும் எழுதினார்.
சிற்பக்கலையின் சிறப்பினைக் கைகளால் தொட்டுப் பார்த்து ஹெலன் புரிந்து கொண்டார். “வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. வாழ்க்கை என்பது துணிச்சல் அடங்கிய முயற்சி என்றுதான் பொருள். சலிப்பில்லாமல் போராடப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் அனைவரும் சுலபமாக வெற்றி அடைந்து விடலாம்” எனக் கூறுகிறார் ஹெலன் கெல்லர்.
இரண்டாவது உலகப்போரின் போது போரில் காயம் அடைந்த வீரர்களைக் கண்டு ஆறுதல் கூறினார். அருகில் இருந்து பல உதவிகளைச் செய்தார்.
உடல் ஊனமுற்றவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து காட்டியவர் ஹெலன் கெல்லர். தமது உடல் குறையை பெரிதாக எண்ணாமல் அறிவாற்றலால் வாழ்க்கையில் வெற்றி அடைந்தார்.
ஹெலனின் அறிவாற்றலை வியந்த விக்டோரியா மகாராணியார் ஒரு கப்பலுக்கு ஹெலனின் பெயரைச் சூட்டி கௌரவித்தார். அவரைப் பற்றி சினிமாவும் எடுத்திருக்கிறார்கள். அதில் ஹெலன் நடித்தும் உள்ளார்.
ஒளிவிளக்காக வாழ்ந்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பது உண்மைதானே!
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.