ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்று சண்டை வந்தது.

Image Source: overdrive.com

“அதோ தெருவில நடந்து போய்க்கிட்டிருக்கிறவரைப் பார்த்தியா? நாம ரெண்டு பேரும்,  அவருக்கிட்ட நம்ம வலிமையைக் காட்டுவோம்;  சட்டைக்கு மேல அவர் போட்டிருக்கிற கோட்டை, யாரு கழற்ற வைக்கிறோமே அவங்க வெற்றி பெற்றதா அர்த்தம்” என்றது காற்று.

 “சரி; ஒத்துக்கிறேன்,” என்றது  சூரியன்

காற்று முதலில் தன் வேலையைத் துவங்கியது.  அது ஏற்படுத்திய பேய்க்காற்றில்  இலைகள் அங்குமிங்கும் பறந்தன; தெருவெங்கும் புழுதி மழை!. காற்றின் வேகத்தில், உயரமான மரங்கள், கீழே சாய்ந்து தரையைத் தொட்டன. ஒரு பெரிய அரச மரம், வேரோடு பெயர்ந்து தரையில் விழுந்தது. 

ஆனால் அந்த மனிதரோ கோட்டு பறந்துவிடாமல் இருக்க அதைத் தன் தோளைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பயணத்தைத் தொடர்ந்தார். 

அடுத்து சூரியன் துவங்கியது.  கருப்பான மேகத்துக்குப் பின்னாலிருந்து வெளியில் வந்த  சூரியன், கொஞ்சங் கொஞ்சமாக நடந்து கொண்டிருந்தவரின் தலையிலும், முதுகிலும் வெயிலைப் பாய்ச்சியது. 

அவர் முதலில்  இதைக் கவனிக்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்தில் வெப்பம் மிகவும் அதிகமாகி, முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைப்பதை நிறுத்தி விட்டு, தன் கோட்டைக் கழற்றி,  கைகளுக்கு அடியில் வைத்துக் கொண்டார்

 “ஆ! ஐயோ என்னால நிற்கவே முடியலையே; அடுப்பு மேல இருக்கிற மாதிரி, பயங்கரச் சூடா இருக்கு,” என்று சொன்னபடி  தெரு ஓரத்திலிருந்த மரத்துக்கடியில் போய்  குளுமையான நிழலில்  உட்கார்ந்து ஓய்வெடுத்தார்.  

அதற்குப் பிறகு  எக்காலத்திலும் சூரியனை விட தனக்கு வலிமை அதிகம் என்று காற்று போட்டிக்கு வரவேயில்லை.

(The Wind and the Sun – ஜேம்ஸ் பால்டுவின்

தமிழில் – ஞா.கலையரசி)

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments