டிசம்பர் 22 – தேசிய கணித தினம்

(National Mathematics Day)

இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் அன்றைய இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

Srinivasa Ramanujan
Source: Britannica

தேசிய கணித தினத்திற்காக 2012 ஆம் ஆண்டு, ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களின் உருவம் பதிக்கப்பட்ட  அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தேசிய கணித தினம் இந்திய அளவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கல்வி நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் நகரில் இராமானுஜன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கணித தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

ஸ்ரீனிவாச இராமானுஜன்:

ஸ்ரீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுஜர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுஜன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இளமை மற்றும் கல்வி:

பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாடப் புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கிப் படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:

• மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913–1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

அவருடைய சிறப்புகள்:

1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.

ராமானுஜன் ஆய்வுகளில் “தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்”, “தியரி ஆஃப் நம்பர்ஸ்”, “டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்”, “தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்”, “எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்” எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

இவருடைய “மாக் தீட்டா ஃபங்சன்ஸ்” எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இவரைப்பற்றி சொல்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இன்னும் நிறைய உள்ளது.

இப்படிப்பட்ட மேதையின் பிறந்தநாளை தேசியக் கணித தினமாகக் கொண்டாடுவது சரிதானே சுட்டீஸ்?! 

என்ன சுட்டீஸ்! இவரைப்பற்றி தெரிஞ்சப்பறம் கணிதம் இன்னும் பிடிச்ச பாடமா ஆயிடுச்சில்ல!

நீங்களும் இவரை மாதிரி நல்லா உழைத்து பல புதிய புதிய தேற்றங்களைக் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அடுத்த இதழ்ல இதே போல வேற ஒரு சிறப்பு செய்தியோட வரேன். அதுவரைக்கும் சமத்தா இருங்க.. பை சுட்டீஸ்! டாடா!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments