சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார். சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப்பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பிறந்தநாளே, ‘மகளிர் தினமாக’ இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பிறப்பு: பிப்ரவரி 13, 1879
பிறப்பிடம்: ஹைதராபாத்
இறப்பு: மார்ச் 2, 1949
சரோஜினி நாயுடு அவர்கள் இளமையிலிருந்தே ஒரு அறிவுக்கூர்மை மிக்க மாணவியாக இருந்தார். அவர் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, மற்றும் பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். அவர் தனது பன்னிரண்டு வயதில் சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற்று தேசிய புகழ் பெற்றார். அவரது தந்தை அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கில கவிதைகளை எழுதத் தொடங்கினார்.
சரோஜினி ஆற்றிய பணிகள்:
சரோஜினி நாயுடு அவர்கள், ஜுலை 1919 ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப்பட்டார். ஜுலை 1920ல் இந்தியா திரும்பினார். 1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம், ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதும்’ சட்டமான ‘ரௌலெட் சட்டத்தினைப்’ பிறப்பித்தது. இச்சட்டத்தை எதிர்த்துப் போராடும் விதமாக, மோகன் தாஸ் காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இவ்வியக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.
1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.
சரோஜினி நாயுடு அவர்கள், 1925ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையே சேரும்.
1925ல், சரோஜினி நாயுடு அவர்கள், கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார். சட்டமறுப்பு இயக்கத்தில், ஒரு முக்கிய பங்காற்றிய சரோஜினி அவர்கள், காந்திஜி மற்றும் பிற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். 1942ல், நடந்த “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு அவர்கள், மீண்டும் கைது செய்யப்பட்டார். காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு, காந்திஜியுடன் ஒரு அன்பான உறவு ஏற்பட்டதால், காந்திஜி அவரை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.
ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், சரோஜினி நாயுடு அவர்கள், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’ என்ற பெருமையைத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி ஆவார்.
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.