பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும். அப்போதிருக்கும் சூரியனின் அளவைப் பொறுத்தும் அது பூமிக்கு எத்தனை பக்கத்திலிருக்கிறது என்பதைப் பொறுத்தும் வெளிச்சமும் சூடும் இருக்கும். சில நேரம் பிரகாசமாக; சில நேரம் சுகமான ஒளியாக; சில நேரம் சுட்டெரிக்கும் நெருப்பாக.

 அப்போது நம் பூமியை ஒரு முட்டாள் ராஜா ஆண்டு வந்தார். அவருக்குத் தான் தான் மிகவும் முக்கியம். ரொம்பவும் கோபம் வரும். ஆனால் வில் வித்தையில் அவரை வெல்ல யாராலும் முடியாது. அவருக்கு வெளிச்சம் என்றாலே பிடிக்காது. பெரும்பாலும் அரண்மனைக்குள் ஜன்னல்கள் இல்லாத தன் பெரிய அறைக்குள்ளே தான் இருப்பார். அவருக்கு தினமும் சில மணி நேரங்கள் தூங்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் அவரால் உயிர் வாழவே முடியாது.

ஒரு நாள் தன் அறைக்கு வெளியே ஒரே சத்தம். எழுந்து வெளியே நடந்து வந்தவர்,  அழகான காட்சி ஒன்றைக்  கண்டார். பெரிய மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. அவற்றின் கிளைகளிலும் பொந்துகளிலும் சிறு பறவைகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி மெல்லிய கொடிகள் மலர்ந்திருந்தன. அவற்றின் மலர்களைச்  சுற்றி வண்ணத்துப் பூச்சிகளும் வண்டுகளும் ரீங்காரமடித்துக் கொண்டிருந்தன.   இடையே குற்றுச் செடிகள்; மீதியிருக்கும் இடங்களில் பச்சைப் புற்கள். அங்கே முயல்களும் மான்களும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. சிங்கம் ஒன்று தூரத்திலிருந்த கற்பாறையிலிருந்து, இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தது. 

இதையெல்லாம் பார்த்த ராஜாவுக்கு ஆச்சர்யம். “ஆஹா…. எல்லோருமே மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறார்களே.. இதற்கெல்லாம் யார் காரணம்.” என்று யோசித்தார்.

சென்று பறந்து கொண்டிருந்த குருவியிடம் கேட்டார், “உங்கள் சந்தோஷத்திற்கு யார் காரணம்?”

அந்த குருவி சொன்னது, “இதில் என்ன சந்தேகம் ராஜா? நம் சூரியன்களால் தான் மரம் செடிகள் ஓங்கி வளர்கின்றன; எங்களுக்கும் உணவு கிடைக்கிறது. அதனால் சூரியன்கள் தான் எங்கள் மகிழ்ச்சிக்கும் காரணம்” என்று சொல்லிப் பறந்தது.

அடுத்து அது கேள்வியை மாமரத்திடம் கேட்டார். மாமரம் சொன்னது, “இதில் என்ன சந்தேகம் ராஜா? சூரியன்களால் தான் என் உணவைத் தானே உற்பத்தி செய்து இப்படி ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கிறேன். அதனால் சூரியன்கள் தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம்” என்றது.

ராஜாவிற்குக் கோபம் வந்தது. அங்கே ஓடிக்கொண்டிருந்த அணிலிடம் கேட்டாராம், “உன் மகிழ்ச்சிக்கு யார் காரணம்?” என்று. அதற்கு அணில் சொன்னது, “இதில் என்ன சந்தேகம் ராஜா? சூரியன்களால் வளர்ந்த மரங்கள்தான் எனக்கு தங்க இடமும் உண்ண உணவும் தருகின்றன. அதனால் இந்த சூரியன்களே என் மகிழ்ச்சிக்குக் காரணம்” என்றது.

ராஜாவிற்கு ரொம்பவே கோபம் ஏறியது, தூரத்தில் படுத்திருந்த சிங்கத்திடம் சென்று அதே கேள்வியைக் கேட்டார். சிங்கமும் எல்லோரையும் போல, “இதில் என்ன சந்தேகம் ராஜா? சூரியன்களின் ஒளியால் தான் என்னால் விலங்குகளை வேட்டையாட முடிகிறது. அதனால் சூரியன்களே என் மகிழ்ச்சிக்குக் காரணம்” என்றது.

ராஜாவின் கோபம் உச்சிக்குச் சென்றது. நான் ஆளும் இடத்தில் இருக்கும் எல்லோரின் மகிழ்ச்சிக்கும் எப்படி இந்த பொல்லாத சூரியன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று பொங்கி எழுந்தார்;

தன் வில்லையும் அம்புகளையும் தூக்கினார்; ஒவ்வொரு சூரியனாக வேட்டையாட ஆரம்பித்தார். சூரியன்களும் அவர் அம்பிற்குப் பயந்து பூமியைச் சுற்றி சுற்றி ஓடின. ஆனால் அவர்தான் பெரிய திறமைசாலி ஆயிற்றே.. ஒவ்வொரு சூரியனாகத் தன் அம்பால் வீழ்த்தினார். அவர் அம்பால் தாக்கப்பட்ட சூரியன்கள் தங்கள் சக்தியை இழந்து வெறும் கற்களாக மாறின.

சூரியன்கள் குறையக் குறைய பூமி ரொம்பவும் குளிர ஆரம்பித்தது. பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் கஷ்டப்பட ஆரம்பித்தன. பூமித்தாய் விழ்த்தெழுந்தாள். எஞ்சியிருப்பது ஒரே சூரியன், நம் ‘சன்’ தான். அதையும் வீழ்த்திவிட்டால் பூமியே இருளில் ஆழ்ந்து விடுமே..  என்ன செய்வது என்று யோசித்தார்கள்.

ராஜா வீட்டு கரப்பான் சொன்னது, “அந்தப் பொல்லாத ராஜாவால் தூங்காமல் வாழ முடியாது. அவர் எப்படியும் சில மணி நேரங்கள் தூங்குவார். அப்போது மட்டும் நீங்கள் வெளியே வாருங்கள்” என்றது.

“அவர் விழித்திருக்கும் போது நான் எங்கே தூங்கட்டும்?” என்றது சூரியன்.

“கவலை வேண்டாம் சூரியனே.. அவர் விழித்திருக்கும் போது நீங்கள் எனக்குள் ஒளிந்து கொள்ளுங்கள்.. அவர் தூங்கி விட்டார் என்று தெரிந்ததும் வெளியே வாருங்கள்!” என்றது கடல்.

“ஆனால் அவர் தூங்கிவிட்டாரா; விழித்து விட்டாரா, என்று எப்படி நான் அறிவது?”

ஆந்தை முன்வந்தது, “அவர் விழித்திருக்கும்   போது நான், ‘உஉஊஊஊஊ’ என்று சத்தமிடுகிறேன். அப்போது நீங்கள் வெளியே வராதீர்கள்” என்றது.

அடுத்து வந்த சேவல், “அவர் தூங்கியதும் நான் ‘கொக்கரக்கோ கோஓஓஓ’ என்று சத்தமிடுகிறேன். அப்போது நீங்கள் கடலுக்குள்ளிருந்து வெளியே வாருங்கள்” என்றது.

இதைக் கேட்டதும். சூரியனுக்கும் பூமிக்கும் சந்தோசம், “நல்ல ஐடியா! நாம் இப்படியே செய்யலாம்” என்று முடிவு செய்து அதன்படியே செய்யவும் ஆரம்பித்தன.

இதனால் தான் சேவல் கூவ சூரியன் உதித்து விடிய ஆரம்பித்தது.

kokkarakko1

என்ன குட்டீஸ்.. கற்பனைக் கதை கலக்கலாக இருந்ததா.. ஆனால் உண்மை என்ன தெரியுமா? சேவல் கூவ சூரியன் வருவதில்லை. சூரியன் வர, விழித்தெழும் சேவல் தன் நாளைத் தொடங்க சத்தம் எழுப்புகிறது. இருப்பதில் வலிமையான சேவல் உயரமான இடத்திற்குச் சென்று, “கொக்கரக்கோ கோஓஓஓஓ” என்று கூவி, “இது என் இடம். நான் விழித்திருக்கிறேன்.. இங்கே யாராவது வந்தால் அவ்வளவுதான்” என்று தன் இட உரிமையைப் பறைசாற்றுவதற்குத் தான் காலை எழுந்ததும் கூவுகிறது. அதன் பின்னும் தன் குழுவோடு பேச நாள் பொழுதில் அடிக்கடி கூவும்.

ஓகேவா குட்டீஸ்.. உங்களுக்கும் அப்படியா சேதி கதை தெரிந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்க. நம்ம பூஞ்சிட்டு இதழில் வெளியிடலாம்‌‌..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments