துருவனும் அவனுடைய நண்பர்களும் வனத்தின் உட்பகுதியில் ஒளிந்திருந்து அந்த மலையடிவாரத்தில் நின்று கொண்டிருந்த காவல் வீரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள்,”எப்படியாவது மலையடிவாரத்தை அடைந்து காவலாளிகளை ஏமாற்றி விட்டு மலையில் ஏற ஆரம்பிக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது?”  என்ற கவலையில் ஆழ்ந்தார்கள்.

அவர்களுடைய மனதில்  இரண்டு யோசனைகள் தோன்றின. முதல் யோசனை இரவு நேரத்தில் காவலாளிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இரகசியமாக மலை மேல் ஏறுவது. இரண்டாவது யோசனை காலை நேரத்திலேயே அவர்களுடைய அனுமதியுடன் மேலே ஏற என்ன வழியென்று யோசிப்பது.

இரவு நேரத்தில் மலை மேல் ஏறுவது பாதையில் இருக்கும் அபாயங்களைக் கூட்டலாம் என்பதாலும் மலைப்பாதையில் எதிர்கொள்ள நேரிடும் வனவிலங்குகளைத் தவிர்த்து ஏறுவது கடினமான செயல் என்பதாலும் பகல் நேரத்திலேயே காவலர்களின் அனுமதியுடன் ஏறுவது தான் நல்ல யோசனை என்று முடிவு செய்தார்கள்.

 அப்படியே ஏறுவதற்கு ஏதாவது வாய்ப்பு கிட்டுகிறதா என்று ஆராய்வதற்காகவே அன்று ஒரு நாள் முழுவதும் உயரமான ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு, துருவன் தனது நண்பர்களுடன் மலையடிவாரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

malaikottai 8

அவன் உணவருந்துவதற்காகவோ இறங்கும் போதோ இல்லை ஓய்வெடுக்கத் தேவையிருக்கும் போதோ சித்திரக்குள்ளன் அந்தப் பணியை மேற்கொண்டான்.

அவர்கள் அப்படித் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்ததில் சில விஷயங்கள் அவர்களுடைய கவனத்திற்கு வந்தன.

மலை மேல் இருக்கும் மாளிகையில் வசிப்பவர்கள் யாருக்குமே மாளிகையில் இருந்து வெளியேறிக் கீழே இறங்கி வர அனுமதி கிடையாது. அந்தக் காரணத்தால் அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்களுடைய உறவினர்கள் மேலே சென்று தந்து விட்டு அவர்களைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கம் இருந்தது.

அதைத் தவிர சில சமயங்களில் உணவு தயாரிக்கத் தேவையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவை மலையடிவாரத்தில் இருந்து வேலையாட்கள் தலையில் சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்தார்கள்.

மலைக்கோட்டை மாயாவி நிறைய சிறு குழந்தைகளைப் பிடித்துத் தனது மாளிகையில் சிறை வைத்திருக்கிறான். அதற்கான சரியான காரணம் யாருக்கும் தெரியாது. இந்தத் தகவலை ஏற்கனவே துருவனின் பெற்றோர் அவனிடம் சொல்லியிருந்தார்கள்.

அந்த மாதிரி சிறைப்பிடிக்கப் பட்ட சிறுவர், சிறுமியினரின் மனம் மகிழ்விக்கக் கலைஞர்கள் குழுக்களை அவ்வப்போது மலைக்கோட்டைக்கு வரவழைப்பதாகக் காவலர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை துருவன் கேட்டான்.

“காவலர்கள் பேசிக் கொள்வதில் இருந்து தெருக்கூத்து, நாடகம், நடனம், வித்தைகள் காட்டும் குழு ஒன்று விரைவில் மலை மேல் ஏறப் போவதாகத் தெரிகிறது. அதனால் நாம் எப்படியாவது அந்தக் குழுவில் இடம் பிடித்து அவர்களோடு சேர்ந்து மேலே ஏறினால் நமது திட்டத்திற்கு உதவியாக இருக்கும்” என்று துருவன் சொன்னான்.

“இரவு நேரத்தில் ஒளிந்து ஏறுவது நல்லதில்லையா?” என்று கிளி கேட்டது.

“முயற்சி செய்யலாம். ஆனால் வழியில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக இருக்கலாம். அவற்றோடு மாயாவியே ஏதாவது அபாயங்களை வழியில் செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கலாம். மாயக் கலைகளைக் கற்ற அவன்,  கண்களை ஏமாற்றி நயவஞ்சமாக மடக்கும் திட்டங்களை நிச்சயமாக யோசித்து செய்து வைத்திருப்பான். இல்லையென்றால் நிறைய மனிதர்கள் எளிதாக மேலே ஏறியிருப்பார்களே?” என்று துருவன் சொன்னது சரியென்று அவனுடைய நண்பர்களுக்குத் தோன்றியது.

 “அப்படியென்றால் அந்தக் குழு எப்போது வருகின்றது? எந்த வழியில் வருகின்றதென்று நாம் கவனித்து ஏதாவது திட்டம் போட்டு அவர்களுடன் இணைய வேண்டும்” என்று சித்திரக்குள்ளன் அபூர்வன் சொன்னான்.

அடுத்த நாள் காலையில் கிளி, மயில், அணில் மூன்றுமே மூன்று பாதைகளில்

தங்களால் முடிந்த அளவு விரைவாகச் சென்று ஏதாவது கலைஞர் குழு வருகிறதா என்று கண்டுபிடித்து வருவதாகவும், அப்படி ஏதாவது தகவல் தெரிய வந்தால் மலையடிவாரத்தை அந்தக் குழு அடைவதற்கு முன்னாலேயே அவர்களிடம் பேசி அவர்களுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

அன்று இரவு உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அதிகாலையில் மூன்று பாதைகளில் திட்டமிட்டபடி கிளி, மயில், அணில் மூன்றும் விரைந்து சென்றன. மூன்று பாதைகள் வேறு வேறு திசைகளில் இருந்து வந்து மலையடிவாரத்தில் சேர்ந்தன.

ஒரு வழி வனத்தின் ஊடே சென்றது. அது நடுவிலும் அதன் இரண்டு பக்கங்களிலும் வேறு இரண்டு வழிகளும் இருந்தன. துருவனும் அபூர்வனும் அங்கேயே அதே மரத்தடியில் வரப்போகும் தகவலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அணில் சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்து விட்டது. அணில் நடுவில் இருந்த பாதையில் சென்றது. கழைக் கூத்தாடிகள் , குரங்குகளை வைத்து வித்தை செய்பவர்கள் மற்றும் சில கலைஞர்களைக் கொண்ட குழுவொன்று வனத்தின் ஊடே ஓரிடத்தில் தற்காலிகமாகத் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஏதோ பரபரப்பாகத் தென்படுவதாகச் சொன்னது; அவர்கள் தங்களுக்குள் கவலையுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னது.

“அவர்களுக்கு ஏதோ பிரச்சினை திடீரென்று வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் இரண்டு பேரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள். அவர்களுக்கு உதவி செய்தால் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகலாம். அதை வைத்து எப்படியாவது அவர்களுடைய குழுவில் நாம் சேர்ந்து கொள்ளலாம். நான் போய் கிளி அண்ணாவையும், மயில் அண்ணாவையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்துவிடுகிறேன்” என்று சொல்லி விட்டு அந்தக் கூத்தாடிகள் தங்கியிருக்கும் இடத்தை அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லி விட்டுக் கிளி, மயிலிடம் சேதி சொல்லக் கிளம்பியது.

துருவன், அபூர்வன் இரண்டு பேரும் அந்தக் கலைஞர்கள் தங்கியிருந்த இடத்துக்கு விரைந்தார்கள். அந்த இடத்தை அவர்கள் அடைந்த சமயம் அந்த இடமே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஒரே ஆரவாரமாக இருந்தது. அந்தக் கலைஞர்கள் மிகுந்த கவலையுடன் தென்பட்டார்கள். துருவன் அந்தக் கூட்டத்தின் தலைவர் போலிருந்தவரை நெருங்கினான்

“ஐயா, நாங்கள் கானகத்தின் வழியே செல்லும் வழிப்போக்கர்கள். இங்கே உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? உங்கள் முகங்களைப் பார்த்தால் ஏதோ கவலையுடன் இருப்பதாகத் தோன்றுகிறது. எங்களிடம் சொன்னால் எங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்க்கிறோம்” என்று பணிவுடன் துருவன் கேட்டான்.

அந்தத் தலைவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். “சிறுவா, உன்னுடைய உதவி செய்ய முன்வரும் உள்ளத்தைப் பாராட்டுகிறேன். நீயோ வயதில் சிறியவன். எங்களைப் போன்ற வயான அனுபவசாலிகளாலேயே தீர்க்க முடியாத பிரச்சினையை உன்னால் எப்படித் தீர்க்க முடியும்? நீயும் சிறியவனாக இருப்பதோடு. உன்னுடன் இருக்கும் இந்தக் குள்ளனும் சிறியவனாக இருக்கிறான்” என்று சந்தேகத்துடன் பேசினார்.

“ஐயா, எங்கள் உருவத்தைப் பார்த்து எடை போட வேண்டாம். நீங்கள் உங்களுடைய பிரச்சினையை எடுத்துச் சொன்னால் எங்களால் உதவ முடியுமா என்று பார்க்கிறோம். சிறு துரும்பும் பல் குத்த உதவுமல்லவா? சொல்லித் தான் பாருங்களேன்” என்றான் துருவன். அபூர்வனும் தலையாட்டி அழகாக அவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்தான்.

“உங்கள் இருவரின் அன்பான சொற்களாலும், உதவிக்கரம் நீட்டும் குணத்தாலும் உங்களிடம் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் ஒரு பத்துப் பேர் ஒரு குழுவாக மலைக்கோட்டை மாயாவியின் மாளிகைக்குக் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காகப் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களது குழுவில் இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகளும் உண்டு. இரண்டு குரங்ககளும் உண்டு. நேற்று இரவு இந்த இடத்தில் தற்காலிகமாக ஒரு கூடாரத்தைத் தயார் செய்து இரவு தூங்கிக் கொண்டிருந்தோம். காலை எழுந்து பார்த்தால் எங்களுடைய இரண்டு குரங்குகளைக் காணவில்லை. சிறுவர்களில் ஒன்றைக் காணவில்லை. இன்னொரு சிறுவன் விடாமல் அழுது கொண்டிருக்கிறான். உடல்நிலை ஏதாவது சரியில்லையா, இல்லை எதையாவது பார்த்து பயந்து போயிருக்கிறானா என்றும் தெரியவில்லை. இந்தக் குரங்குகளோ குழந்தைகளோ இல்லாமல் எங்களால் வித்தைகளை முழுமையாக செய்ய முடியாது. குறித்த நேரத்திற்கு மலை மேலிருக்கும் கோட்டையை அடையா விட்டால் மாயாவியின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும். அதனால் தான் கவலையுடன் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அந்தத் தலைவர் தங்களது பிரச்சினையை விளக்கினார்.

உடனே சிறிது நேரம் யோசித்த துருவன் அழுது கொண்டிருந்த அந்தச் சிறுவன் அருகில் முதலில் சென்றான். நான்கு வயது இருக்கலாம் அவனுக்கு. துருவன் கௌதம ரிஷியின் ஆச்ரமத்தில் இருந்து கிளம்பியபோது அவனுக்கு முனிவர் சில மருந்துகளைக் கொடுத்திருந்தார். சிறுவன் நிறுத்தாமல் அழுவதில் இருந்து அவனுடைய வயிற்றில் வலி இருக்கலாம் என்று நினைத்து அந்தச் சிறுவனின் வயிற்றுப் பகுதியை மென்மையாகத் தடவிக் கொடுத்தான்‌. வயிற்றைத் தொட்டவுடன் சிறுவன் அதிகம் அழுததால் வயிற்றுவலி தான் என்று முடிவு செய்தான்.

பின்னர் தன்னிடம் இருந்த மூலிகைப் பொடியைத் தேனில் குழைத்து அந்தச் சிறுவனின் வாயில் தந்து விட்டு வயிற்றிலும் அதையே தடவினான். சிறிது நேரத்தில் குழந்தையும் அழுகையை நிறுத்த, சித்திரக்குள்ளன் குதித்து, உருண்டோடி, நடனமாடி, அங்குமிங்கும் துள்ளியோடி விளையாட்டு காண்பித்ததில் குழந்தையும் தனது வலியை மறந்து சிரிக்க ஆரம்பித்தான்.

தலைவரும் குழுவில் இருந்த மற்ற பெரியவர்களும் அகமகிழ்ந்து போனார்கள்.

“நன்றி தம்பி. நன்றி. ஒரு பிரச்சினை தீர்ந்தது‌. இனி மற்ற பிரசசினைகளைப் பார்க்கலாம். இங்கிருந்து மறைந்து போனவர்களைத் தேடத் தொடங்கலாம்” என்று கிளம்பினார்கள் ‌.

அதற்குள் அங்கு துருவனின் மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். வயிற்று வலியுடன் அழுது கொண்டிருந்த அந்தச் சிறுவனிடமே முதலில் காணாமல் போனவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று விசாரித்தார்கள்.

அந்தச் சிறுவனின் பெயர் அருணன். காணாமல் போன இன்னொரு சிறுவன் வருணன். இவனுடைய இரட்டைச் சகோதரன்.  அனாதைக் குழந்தைகளாக   வனத்தில் அழுது கொண்டு நின்ற பச்சிளம் குழந்தைகளை இந்தக் கலைக்குழு கண்டுபிடித்துத் தாங்களே வளர்த்து வருகிறார்கள். தங்களுடைய கலைகளையும் கற்றுத் தந்திருக்கிறார்கள். இரட்டை சகோதரர்கள் கயிற்றின் மேல் நடப்பதற்குப் பயிற்சி பெற்றவர்கள். அதைத்தவிர இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே இனிமையாகப் பாடுவதிலும் தேர்ந்தவர்கள்.

அருணன் ‘கின்னரம்’ என்று அழைக்கப்படும் இரண்டு தந்திகளைக் கொண்ட யாழை மீட்டவும், வருணன் சிறிய மத்தளம் ஒன்றை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றவர்கள். இரண்டு பேரும் சேர்ந்து வாசிக்கும் போது கேட்பவர்கள் அப்படியே மயங்கி நின்றிடுவார்கள்.

அருணன் தனக்குத் தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

“நேற்று நாங்கள் வனத்தில் ஒரு மரத்தின் அடியில் நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் அந்த மரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த சிவப்பு நிறப் பழங்களைப் பார்த்தோம். எங்களுடன் இருந்த குரங்குகள் மரத்தில் ஏறி அந்தப் பழங்களைப் பறித்துப் போடப் போட நாங்கள் இரண்டு பேரும் நிறையப் பழங்களை உண்டோம். அந்தப் பழங்களின் சுவை மிகவும் இனிப்பாகவும் புதிய ருசியாகவும் இருந்தது. நேற்று இரவு தூக்கத்தின் நடுவில் எழுந்த வருணன் அந்தப் பழங்களை மீண்டும் போய்ப் பறித்து வரலாமென்று கிளம்பினான். எனக்கு இரவில் போக பயமாக இருந்தது. அதனால் நான் அவனுடன் போக மறுத்து விட்டேன். அந்தக் குரங்குகளையும் கூட்டிக் கொண்டு நடு இரவில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகக் கிளம்பிப் போனான். காலையில் நான் எழுந்து பார்த்தபோது அவர்கள் திரும்பி வந்திருக்கவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருந்தது. வயிற்றில் வேறு பயங்கர வலி வந்து என்னால் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தேன்” என்று பயந்து கொண்டே சொன்னான்.

“காட்டில் கிடைக்கும் எல்லாப் பழங்களும் உண்பதற்குத் தகுந்ததல்ல. உண்ணத் தகாத பழத்தை உண்டதால் தான் வயிற்று வலி வந்திருக்கும்” என்று சொன்ன துருவன் அருணனைக் கூட்டிக் கொண்டு தொலைந்து போனவர்களைத் தேடக் கிளம்பினான். குழுவின் தலைவரிடம்,

“நான் அருணனுடன் கிளம்பிப் போய் வருணனையும் குரங்குகளையும் நிச்சயமாகத் தேடிக் கண்டுபிடித்து கூட்டிக் கொண்டு வருகிறேன். அருணன் வழிகாட்டுவான்.  என்னுடைய நண்பர்கள் எனக்கு உதவி செய்வார்கள். நீங்கள் எல்லோரும் பயணத்திற்குத் தயாராகுங்கள். நாங்கள் விரைவில் வெற்றியுடன் திரும்பி வருகிறோம்” என்று அவர்களுக்கு உறுதி கூறிவிட்டுக் கிளம்பினான்.

-தொடரும்.

(ஹலோ குட்டீஸ்! புது வருடம் 2021 எப்படியிருக்கு? உங்களுக்கெல்லாம் சீக்கிரமே இனி ஸ்கூல் திறந்துடுவாங்க. ஃப்ரண்ட்ஸை எல்லாம் நீங்க பாக்கலாம் ‌. ஜாலி தான். ஜாக்கிரதையா வெளியே போகும் போது மாஸ்க் போட்டுட்டுப் போங்க. துருவனோட கதையில என்ன ஆச்சுன்னு அடுத்த எபியில பாக்கலாம். பை குட்டீஸ்!)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments