வணக்கம் குட்டீஸ்!
ஒவ்வொரு மாதமும் நம்ம பூஞ்சிட்டு இதழ்ல நம்ம தமிழகத்துல இருக்குற ஒவ்வொரு ஊரு பத்தியும், அந்த ஊரோட பேருக்கு பின்னாடி இருக்கிற சுவாரஸ்யமான கதைகளை பத்தியும் கதை கதையாம் காரணமாம் பகுதில தெரிஞ்சிட்டு வரோம். அப்படி இந்த மாதம் நாம தெரிஞ்சுக்க போற ஊரு செங்கல்பட்டு .
செங்கல்பட்டு சென்னைக்கு பக்கத்துல இருக்கற பெரிய ஊர்.
விழுப்புரம் திருச்சி காஞ்சிபுரம் கல்பாக்கம் மகாபலிபுரம்ன்னு வெவ்வேறு திசைகள்ல இருக்கிற முக்கியமான பெரிய ஊர்களை அடையுற முக்கியமான வழியா செங்கல்பட்டு இருக்கு.
2ம் நூற்றாண்டு காலத்துல இருந்து வரலாறுல செங்கல்பட்டு பத்தின குறிப்புகள் நம்மக்கிட்ட இருக்காம். முதல்ல சோழர்கள் ஆட்சில இருந்த செங்கல்பட்டு 16ம் நூற்றாண்டு வாக்குல விஜயநகர ஆட்சிக்கு மாறினதோட மட்டுமில்லாம விஜயநகர பேரரசோட தலைநகரமாவும் ஆகி இருக்கு.
17ம் நூற்றாண்டுல பிரெஞ்சு ஆட்சியிலிருந்து திரும்ப 18ம் நூற்றாண்டுல ஆங்கிலேய ஆட்சிக்குள்ள வந்திருக்கு. அதோட சென்னைல இருக்கிற மிகவும் புகழ்பெற்ற ஜார்ஜ் கோட்டை இடம் கட்டறதுக்கான நிலத்தை வழங்கினது அப்போ செங்கல்பட்டில் ஆட்சி செஞ்சுட்டு இருந்த நாயக்கர்கள்ன்னு ஒரு வரலாறும் இருக்கு.
கொலைவாய் ஏரின்னு சொல்லப்படுற மிகப்பெரிய ஏரி , மலை, அடர்ந்த மரங்கள்ன்னு அழகா அமைஞ்ச வளங்களை மையப்படுத்தி அப்போ காய்கறி, அரிசி, மண் பானை வியாபரம்ன்னு சுற்றி பலதரப்பட்ட தொழில்கள் வளர்ந்ததாம்.
எல்லாம் சரி, ஊருக்கு எப்படி பேர் வந்ததுன்னு தானே கேக்கறீங்க ..
இருங்க இருங்க அதுக்கு தான் வரேன்.
செங்கல்பட்டுல ஒரு பெரிய ஏரி இருக்கு இல்லையா.. அந்த ஏரி கரையோரம், நிறைய செங்கழு நீர் பூக்கள் அடர்ந்து அடர்ந்து வளர்ந்திருக்குமாம். செங்கழு நீர் பட்டு போல ஏரில படர்ந்து இருக்கிறதால செங்கழுநீர்பட்டு செங்கல்பட்டு ஆகிருச்சு..
இந்த மாதிரி காரணப்பெயர் மருவி இருக்கிற ஊர்ப்பெயர்கள் நிறைய இருக்கு
உதாரணத்துக்கு,
அப்போ “இரு ஓடைகள்” இணைந்த ஊர் இப்போ ஈரோடு.
அப்போ மயில் ஏறிய புரம் இப்போ மயிலாப்பூர்.
அப்போ பூவிருந்தவள்ளி இப்போ பூந்தமல்லி
அப்போ வண்டல் ஆற்று மண் சேர்ந்த ஊர் இப்போ வண்டலூர்
இப்படிநிறைய சொல்லிட்டே போகலாம், அதுக்குள்ள அடுத்த பூஞ்சிட்டு இதழும் வந்துடும். எதுக்கு வம்பு ஒன்னொன்னா அசைப்போடலாம் ஒவ்வொரு இதழும். என்ன குட்டீஸ் சரி தானே ?!