நம் மாயவனத்தில் ஒரு யானையும், முயலும் தோழிகளா இருந்தாங்க.. ரெண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே தான் இருப்பாங்க.

முயல் யானையின் முதுகில் ஏறிக் கொண்டு உயரத்துல இருந்து கீழே பூமி எவ்வளவு அழகா இருக்கிறது என்று பார்க்கும்.

மேலே மரங்களில் இருக்கிற இலைகள், காய்கள் ,கனிகள் எவ்வளவு அழகா இருக்கிறது என்று  பார்க்கும்.

அதனாலயே அது எப்பவும் யானையின் முதுகில் ஏறி சவாரி செய்ய நிரம்ப விருப்பப்படும்.

ஒரு நாள் முயலுக்கு நதியில் விளையாட வேண்டும் என்று ஆசை வந்தது.

உடனே, அந்த முயல் தன் தோழி  யானையிடம் “நதிக்கரைக்கு போகலாமா மும்தாஜ்” என கேட்டது.

யானையும், “சரி, ஜெனிபர் நாம நதிக்கரைக்கு போய் விளையாடலாம்” என்று சொல்லி முயலை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றது.

நதியைக் கண்டதும் உற்சாகமான ஜெனிபர் முயல், “மும்தாஜ் மும்தாய், நதியில் இறங்கி விளையாடுவோமா?” என ஆவலோடு கேட்டது.

ஆனால், மும்தாஜ் வேண்டாம் என மறுத்தது. “நதி நீர் மிகவும் வேகமா வருது. இப்போது அதில் இறங்கினால் எங்காவது உன்னை அடித்துச் சென்றுவிடும்” என எச்சரித்தது.

ஆனால், நதியோட்டத்தைப் பார்த்த முயலுக்கு ஆவலை அடக்க இயலவில்லை. அழகான நதியின் ஆபத்தை உணராமல், தோழியின் வார்த்தைகளையும் அசட்டை செய்து நதிக்குள் பாய்ந்து விட்டது ஜெனிபர் முயல்.

மும்தாஜ் சுழித்தோடும் நதியில் இழுத்துச் செல்லப்படும் தன் தோழியைக் கண்டு எதுவும் செய்ய இயலாமல் தவித்தது. துயரத்தால் அதன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

நதியின் வேகத்தில் நீந்த முடியாமல் தவித்த ஜெனிபர் கத்தக்கூட இயலாமல் நதியோடு இழுத்துச் செல்லப்பட்டு மாயவனக் கடலுக்குள் சென்று சேர்ந்தது.

சுழித்து ஓடும் நீரோடு போராடி சோர்ந்து போன ஜெனிபர், தன் தோழி மும்தாஜை நினைத்து மிகவும் வருந்தியது ஜெனிபர் மெதுமெதுவாக  ஆழ்கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.

கடல் ஆழத்தில் தன் மாயகடிகாரத்தோடு நீர் மூழ்கிக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஷிவானி.

ஆழ்கடல், அமைதியாக அழகாக இருந்தது. அந்த தெளிவான கடலுக்குள் ஜெனிபர் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள் ஷிவானி.

ஜெனிபரைக் காப்பாற்ற வேண்டும் என தன் கடிகாரத்திடம் கேட்டாள் ஷிவானி. 

ஷிவானி ஜெனிபரிடம் செல்ல பாதுகாப்பு கவச உடைகளைக் கொடுத்து உதவியது கடிகாரம்.

தன் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு நீந்திச் சென்று ஜெனிபரை மீட்டுக் கொண்டு வந்தாள் ஷிவானி.

பின், அந்த முயலுக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளித்த பின், கண் விழித்த ஜெனிபர் முயல், தன் தோழி பேச்சை கேட்காமல் தான் நதிக்குள் விழுந்து நீரில் மூழ்கியதை கண்ணீரோடு சொன்னது ஜெனிபர்.

ஜெனிபரை ஆறுதல் சொல்லி தேற்றிய ஷிவானி நீர்மூழ்கிக் கப்பலை கடலின் மேற்பகுதிக்குச் செலுத்தினாள்.

கடல் பரப்பின் மேலிருந்து தன் தோழன் பறக்கும் குதிரை ஸ்டீபனை அழைத்தாள் ஷிவானி.

வண்ண வண்ண பலூன்களால் ஆன சிறகுகளை உடைய ஸ்டீபன் பறந்து வந்தது. அதனிடம் மும்தாஜிடம் தங்களை அழைத்துப் போகச் சொன்னாள் ஷிவானி.

தன் தோழியிடம் சம்மதம் தெரிவித்த ஸ்டீபன், ஷிவானியையும், ஜெனிபரையும் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வானத்தில் பறந்தது.

இன்னும் இன்னும் உயரத்தில் பறக்க, அங்கிருந்து உலகின் அழகை ரசித்தது ஜெனிபர். மூவரும் நதிக்கரையில் அழுது கொண்டிருந்த மும்தாஜிடம் வந்து சேர்ந்தனர்.

தன் தோழியைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சியோடு ஜெனிபரை தன் துதிக்கையால் கட்டிக் கொண்டது மும்தாஜ்.

தன் ஆருயிர் தோழியை காப்பாற்றியதற்கு நன்றி சொன்னது.

அவர்களிடம் விடைபெற்று தன் கடிகாரத்தில் பயணித்து கனவுலகில் விடை பெற்று துயில் எழுந்தாள் ஷிவானி.

ஹாய் பட்டூஸ், மாயவனம் பகுதி இதோடு நிறைவடைகிறது. ஷிவானி இன்னும் சில காலம் கழித்து தங்களிடம் வந்து சேர்வாள்.

அதுவரை காத்திருங்கள்.

நன்றி

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments