கதைப்போமா…
ஆன்லைன் வகுப்புகள், அசைன்மென்ட்டுகள் என்று பள்ளிப் படப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் சுட்டி மித்துவுக்கும் அவன் நண்பர்களுக்கும் இப்போது விளையாட அதிக நேரம் கிடைப்பதில்லை.
அதனால் புதிய விளையாட்டுகள் எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமின்றி, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஓடி விளையாட ஆவலாக இருந்தனர். ஆனால் அதற்கும் தடைவிதிப்பது போல அவர்களுடைய குடியிருப்புக்கு பக்கத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட ஆரம்பித்திருந்ததால் இவர்களுடைய குடியிருப்பு முழுதும் ஒரே சிமென்ட் புகையும் தூசியும் குப்பையுமாக இருந்தது. அதனால் இவர்களின் பெற்றோர், இவர்களை வெளியில் விளையாடக் கூடாதென்று தடை விதித்தனர்.
வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா.
எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது.
எப்போதும் செய்யும் வழக்கமாய், குழந்தைகள் கையில் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்து கொள்ளச் சொன்னார் தாத்தா.
“பட்டு! இன்னிக்கு என்ன வெளாட்டு?” மித்து தாத்தாவிடம் ரகசியமாகக் கேட்டான்.
“சஸ்பென்ஸ்!” என்று கண்ணை விரித்து மெல்லிய குரலில் சொல்லிச் சிரித்தார் தாத்தா.
“போங்க பட்டு! நீங்க எப்பவும் இப்டிதான்!” என்று செல்லமாய் சிணுங்கியவனின் கன்னம் தொட்டு கொஞ்சினாள் பார்வதிப் பாட்டி.
“இன்னிக்கு நானும் உன்னோட பட்டுவும் உங்க எல்லாருக்கும் கதை சொல்லப் போறோம்!” என்று சொன்னாள் பாட்டி.
“ஹை கதையா!” என்று சில குழந்தைகளும்,
“ஹையோ கதையா? போர்!” என்று சில குழந்தைகளும் தங்களின் மனநிலையை ளெிப்படுத்தினர்.
“நீங்க இந்தக் கதைய கேட்டா, டெய்லி டெய்லி இது மாதிரி கதை சொல்லுங்கன்னு எங்கள கேட்டுகிட்டே இருப்பீங்க!” என்றார் பட்டு தாத்தா.
“அப்டியென்ன கதை சொல்ல போறீங்க பட்டு!” என்று ஆச்சர்யமாய்க் கேட்டான் மித்து.
“கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க! இப்ப வந்திடறேன்!” என்று கூறி பார்வதி பாட்டி உள்ளறைக்குச் சென்றுவிட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்தாள்.
பட்டு தாத்தா, கையில் ஒரு பெரிய பொம்மையை மாட்டிக் கொண்டார்.
“என்ன பட்டு இது? டெடி பேர் பொம்மையா?” என்று கேட்டான் ஒரு வாண்டு.
“ஹா.. ஹா.. ஆமாடா.. ஆனா இது சாதா டெடி பேர் இல்ல! பேசும் டெடி பேர்!” என்று சொன்னாள் பாட்டி.
“பேசும் டெடி பேரா?” என்று குழந்தைகள் எல்லாம் ஆச்சர்யத்துடன் கேட்க,
“எல்லாரும் இங்க கவனிங்க! இப்ப நாங்க கதை சொல்லப் போறோம்!” என்று கூறிவிட்டு பாட்டியும் தன் கையில் ஒரு பொம்மையை மாட்டிக் கொண்டாள்.
“ஒரு ஊர்ல.. ஒரு ராஜா இருந்தானாம்..” தாத்தா ஆரம்பித்தார்.
“ஐய.. எப்ப பாத்தாலும் ராஜா கதை? ஒங்களுக்கு வேற கதையே தெரியாதா?” என்று பார்வதிப் பாட்டியின் கையிலிருந்த மங்கி பொம்மை கேட்டது.
இதைக்கேட்ட பட்டுவின் கையிலிருந்த டெடி பொம்மை,
“ஷ்! குறுக்க பேசாம கதைய கேளு!” என்றது.
“ராஜா கதை வேணாம்! வேற கதை சொல்ல சொல்லு!” என்றது மங்கி பொம்மை!
“ஷ்! தொந்திரவு பண்ணாம கதைய கேளுங்க!” என்றாள் பாட்டி!
“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா? அந்த ராஜாவுக்கு திடீர்ன்னு வயித்து வலி வந்துச்சாம்!” தாத்தா கதையை தொடர்ந்தார்.
குழந்தைகள் எல்லாம் தாத்தாவையும் பாட்டியையும் பொம்மைகளையும் மாறி மாறி கவனித்தனர்.
பொம்மைகள் இரண்டையும் தாத்தாவும் பாட்டியும் தங்கள் கைகளில் மாட்டி வைத்துக் கொண்டு குரல் கொடுத்துப் பேசினாலும் பொம்மைகள் பேசும் போது தாத்தா பாட்டி இருவரின் வாயும் அசையவேயில்லை என்பதை குழந்தைகள் கவனித்து ஆரவாரம் செய்தனர்.
“ஐயியோ! ராஜாவுக்கு வயித்து வலியா? அப்றம் என்னாச்சு? டாக்டர்ட்ட போனாரா?” என்று கேட்டது மங்கி.
“ஆமா.. டாக்டர்ட்ட போய் நாலு ஊசி போட்டுகிட்டு வந்தாரு.. ஒழுங்கா கதைய கேப்பியா?” என்று நக்கலடித்தது டெடி.
“ஷ்! சும்மா இரு டெடி!” என்றாள் பாட்டி.
“நீங்க சொல்லுங்க பட்டு!” என்றது மங்கி!
“ராஜாவோட வயித்த வலிய யார் சரி பண்றாங்களோ அவங்களுக்கு சரியான சன்மானம் வழங்கப்படும்னு தண்டோரா போட்டாங்க!”
“தண்டோராவா? அப்டீன்னா?” என்று டெடியும்,
“சன்மானம்ன்னா என்ன பாட்டி?” என்று மங்கியும் கேட்டன.
இதைக் கேட்ட குழந்தைகள் எல்லாம் கொல்லென்று சிரித்தனர்.
“தண்டோரான்னா, ரோட் ரோடா போய் பெரிய ட்ரம் கொட்டிகிட்டு அனௌன்ஸ்மென்ட் பண்றதுதான் தண்டோரா! இப்ப கூட கொரோனா லாக் டவுன்ல நிறைய வில்லேஜ்ல ட்ரம் கொட்டி வீட்ட விட்டு ஊர விட்டு யாரும் வெளிய வரக் கூடாதுன்னு சொன்னாங்களே! டீவில கூட காட்டினாங்களே!” என்றான் மித்து!
“சன்மானம்ன்னா கிஃப்ட்ன்னு அர்த்தம்!” என்றது மற்றொரு வாண்டு.
“பாத்தீங்களா? நம்ம குழந்தைங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு! ஏய் டெடி, மங்கி, உங்க ரெண்டு பேருக்கும்தான் ஒண்ணுமே தெரியல!” என்று தாத்தா தன் கையிலிருந்த டெடியின் தலையில் தன் மற்றொரு கையால் அடிக்க, அந்த டெடி தாத்தாவை கோபமாக முறைத்தது.
மங்கி உடனே தன் வாய் பொத்தி சிரிப்பதைப் பார்த்த பார்வதிப் பாட்டி,
“நீயும்தான்! ஒண்ணும் தெரியல! ஆனா வாய் மட்டும் இருக்கு!” என்று சொல்லிக் கொண்டே பார்வதிப் பாட்டி மங்கியின் வாய் மீது ஒன்று வைக்கப் போக, மங்கி பாட்டியின் விரலைக் கவ்விக் கொண்டது.
“ஆ.. விடு மங்கி! வலிக்கிது!” என்று பாட்டி அலற, டெடி தன் வாய் பொத்தி சிரிக்க, தாத்தா பாட்டியின் கையை மங்கியின் பிடியிலிருந்து விடுவிக்க முயல, இப்போது மங்கி பாட்டியின் விரலை விட்டு விட்டு தாத்தாவின் விரலைக் கவ்விக் கொண்டது.
இப்போது தாத்தா அலறினார்.
“ஆ.. மங்கி.. விடு.. விடு..”
பாட்டியும் தாத்தாவும் சேர்ந்து போராடி மங்கியின் பிடியிலிருந்து தாத்தாவின் விரலை விடுவித்தனர்.
இதையெல்லாம் பார்த்து குழந்தைகள் எல்லாருக்கும் ஒரே சிரிப்பும் கும்மாளமும் வேடிக்கையாகவும் இருந்தது.
“சரி! சரி! அந்த ராஜாவுக்கு வயித்துவலி சரியா போச்சா இல்லையா?” என்று கேட்டது டெடி.
“ஆ.. இருடா.. கை வலிக்கிது!” என்று தன் கையை உதறிக் கொண்டார் தாத்தா.
இதற்கும் குழந்தைகள் சிரித்தார்கள்.
“சரி! சொல்லுங்க பட்டு!” என்று மித்து செல்லமாகச் சிணுங்கினான்.
“ம்.. சரி சொல்றேன்!” என்று ஆரம்பித்த தாத்தா,
“கதைய எங்க வுட்டேன்!” என்று குழம்பினார்.
“ம்.. ராஜாவோட வயித்து வலிய யார் சரி செய்றாங்களோ அவங்களுக்கு சன்மானம் குடுக்கறதா தண்டோரா போட்டாங்கல்ல.. அங்க வுட்டீங்க..” என்று மங்கி எடுத்துக் கொடுத்தது.
“ம்.. ஆமாமா.. தண்டோரா போட்டாங்களா.. உடனே ஊர்ல இருக்கற பெரிய பெரிய வைத்தியருங்க எல்லாம் ராஜாவுக்கு வைத்தியம் பாக்க வந்தாங்க. ஆனா யாராலயும் அவரோட வயித்து வலிய சரி பண்ண முடில..
அப்ப கடைசியா ஒரு டுபாக்கூர் வைத்தியர் வந்தாரு.. அவருக்கு வைத்தியம்லாம் எதுவும் தெரியாது.. சும்மா வைத்தியம் தெரியும்னு ஊர ஏமாத்திகிட்டு இருக்கறவரு..
அவரு என்னால ராஜாவோட வயித்து வலிய குணப்படுத்த முடியும்னு வராரு! வந்து ராஜாவ கவனிக்காம அந்த அரண்மனைய சுத்தி பாக்கறாரு..
முழுசா சுத்தி பாத்துட்டு, ராஜா.. ராஜா.. உங்க அரண்மனை பூராவும் சிங்கம், புலி, கரடி, எருமைக்கடா மாதிரி பெரிய காட்டு விலங்குகளோட தலைய பாடம் பண்ணி மாட்டி வெச்சிருக்கீங்க.. உங்க ரூம்ல நடுல புலித் தோலை கார்பெட் மாதிரி விரிச்சி வெச்சிருக்கீங்க..
இவ்ளோ விலங்குகளோட மாமிசம் சாப்பிட்டதுனாலதான் உங்களுக்கு வயித்து வலி வந்திருக்கு..
இதுக்கு மருந்தா இந்த சூரணத்தை கஷாயம் பண்ணி குடிங்கன்னு சொல்லி ஒரு பொடியை எடுத்து ராணி கையில குடுத்தார்.
ராணி அந்த பொடியை கவனமா வாங்கி பணிப் பெண் கிட்ட குடுத்து கஷாயம் வெக்க சொன்னாங்க.. அந்த பணிப் பெண்ணும் கஷாயம் பண்ணி எடுத்துட்டு வந்து ராணி கிட்ட தரும்போது ராஜமம்மி, அதாவது ராஜாவோட அம்மா அங்க வந்தாங்க.
ராஜமம்மி அந்த கஷாயத்தை வாங்கி முகர்ந்து பாத்துட்டு, அதைக் கொண்டு போய் கொட்டிட்டு அந்த வைத்தியரை கைது செய்ய சொல்றாங்க..
ராஜாவுக்கும் ராணிக்கும் ஒண்ணுமே புரியல.. என்ன அம்மான்னு ராஜா கேக்கறாரு! அதுக்கு ராஜமம்மி, இந்த வைத்தியர் உன்ன நல்லா ஏமாத்தறான்! அதக்கூட உன்னால கண்டுபிடிக்க முடிலயா? இது கஷாயம் இல்ல.. காபி டிகாஷன்! பால் கலக்காத ப்ளாக் காபி! இதக் குடுத்து உன்ன ஏமாத்தறான்! அப்டீன்னு சொல்லிட்டு ராஜாவோட வயித்தில விளக்கெண்ணை தேய்ச்சி விட சொல்றாங்க.
வேல வேலன்னு ஓயாம வேல செய்யறதுனால உன் உடம்பு சூடாயிடுச்சி. ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட்டு சரியானபடி ஓய்வெடுத்துக்கிட்டு வேல செய்ன்னு சொல்றாங்க..
ஒரு மணி நேரத்தில ராஜாவோட வயித்து வலி சரியாயிடுது..
ராஜாவும் ராணியும் ராஜமம்மிக்கு தேங்க்ஸ் சொல்றாங்க..” என்று சொல்லி பட்டு தாத்தா கதையை முடிக்கிறார்.
கேட்டிருந்த குழந்தைகளும் டெடியும் மங்கியும் சிரிக்கிறார்கள்.
“கதை எப்டி இருந்துச்சு?” தாத்தா கேட்க,
டெடியும் மங்கியும்,
“நல்லாவேல்ல!” என்று ஒரே குரலில் கூற,
“ரொம்ப நல்லா இருந்துச்சு..” என்று குழந்தைகள் எல்லாம் கோரசாகச் சொன்னார்கள்.
“பட்டு! இது எப்டி? டெடி பேசும் போது உங்க குரல் கேக்குது! மங்கி பேசும்போது பாட்டி குரல் கேக்குது! ஆனா உங்க ரெண்டு பேர் வாயும் அசையவேயில்லையே?” என்று மித்து கேட்டான்.
அது எப்டீன்னு அடுத்த இதழ்ல தெரிஞ்சுக்கலாமா குட்டீஸ்!
அது வரைக்கும் சமத்தா இருங்க!
பை! பை! டாட்டா!
👋👋👋👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.