வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது.

nilavum vaanamum

”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.

“ஹூகும்; தரமாட்டேன்; அது எனக்கு வேணும்” என வானம் சொன்னது.

“அப்படீன்னா, அந்தக் கரடி பொம்மையைக் கொடு; வெளையாடிட்டுத் திருப்பித் தந்துடறேன்,” என்று நிலா கெஞ்சியது.

“ஹூகும். மாட்டேன்” என்றது வானம்.

“நீ தான் நெறையா பொம்மை வைச்சிருக்கியே! ஒன்னே ஒன்னு, தந்தா என்னா?”என்றது நிலா.

“என்னோட எந்தப் பொம்மையையும், யாருக்கும் தர மாட்டேன்” என்று வானம் சொன்னது. 

“இனிமே ஒங்கூட, வெளையாட வர மாட்டேன் போ! ஒங்கூட டூ!” என்று நிலா கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டது.

மறுநாள் இரவு, நிலா வரவில்லை.  அதனால் வானம் பயங்கர இருட்டாக இருந்தது. 

பூமியில் நிலாவைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சோறூட்டலாம் என்று வந்த, அம்மாக்களுக்கு ஏமாற்றம்.

 “இன்னிக்கு நிலா இல்லாம, வானம் ஒரேயடியா இருண்டு கெடக்குது; வானத்துக்கு என்ன கேடு வந்துச்சோ, தெரியலை” என்று அவர்கள் வானத்தைத் திட்டினார்கள்.

விளையாட நிலா இல்லாமல், வானத்துக்கும் பொழுதே போகவில்லை

“நீ தான், நெறையா பொம்மை வைச்சிருக்கியே! நிலா கேட்டதைக்   கொடுத்தா என்ன?” என்று விண்மீன்கள், வானத்திடம் சண்டை போட்டன.. 

 “சரி! வரச் சொல்லுங்க; அது கேட்ட யானை பொம்மையைத் தரேன்” என்றது, வானம்.

விண்மீன்கள் கோபமாய் இருந்த நிலாவைச் சமாதானம் செய்தன. முதலில் வரவே மாட்டேன் என நிலா மறுத்தது. 

மூன்று நாட்கள் கழித்துக் கோபம் கொஞ்சம் குறைந்தவுடன், நிலா லேசாக எட்டிப் பார்த்தது.

“ஆஹா! மூணாம் பிறை தெரியுது;  இனிமே நிலா வரும்; வானம் வெளிச்சமாயிடும்” என்று பூமியில் இருந்தவர்கள், மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.

அதற்குப் பிறகு நிலா வந்தது. வானம் பகல் போல ஒளி வீசியது.

பூமியில் எல்லாரும், மொட்டை மாடிக்குச் சென்று நிலாச்சோறு சாப்பிட்டார்கள். குழந்தைகள் நிலா ஒளியில் மகிழ்ச்சியாக விளையாடினார்கள்.

“எந்தப் பொம்மை வேணும்னாலும், எடுத்துக்கோ! இனிமே எங்கூட டூ விடாதே” என்று வானம் நிலாவிடம் கெஞ்சியது. 

போனால் போகிறதென்று, நிலாவும் பழம் விட்டது.

இரண்டும் சேர்ந்து, மேக பொம்மைகளை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக நீண்ட நேரம் விளையாடின.  

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments