குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகமாகும் பறவையின் பெயர் மரங்கொத்தி. மரத்தினைக் கொத்துவதால் இது காரணப்பெயர்.
இதில் 12 வகைகள் இருந்தாலும், பொன்முதுகு மரங்கொத்தி. (Black-rumped flameback) என்ற வகை தான் பரவலாகக் காணப்படுகிறது. இது மைனாவை விட, அளவில் சற்றுப் பெரியது. முதுகு பொன் நிறத்திலும், வால் கறுப்பாகவும் இருக்கும். வயிற்றுப்பகுதியில், வெள்ளை, கறுப்பு திட்டுகள் காணப்படும். உச்சந்தலையில் கொண்டை போல, சிவப்பு நிற இறகுகளைக் கொண்டிருக்கும். இதை வைத்து, எளிதாக இப்பறவையை அடையாளம் காணலாம்.
மரத்தின் நடுப்பகுதியில் செங்குத்தாக அமர்ந்து, உளி போன்ற தன் வலிமையான அலகால் ‘டக்.. டக்.’.என்ற ஓசையுடன் கொத்தும். மரப்பட்டைகளைக் கொத்திக் கிளறி, அதற்கு அடியில் இருக்கும் பூச்சி, புழுக்களைத் தன் நீளமான நாக்கால் பிடித்துத் தின்னும். இதனால் பூச்சி அரிப்பிலிருந்து மரங்களைக் காப்பாற்றுகின்றது.
பட்டுப் போன மரங்களைக் குடைந்து, பொந்து உண்டாக்கி, அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் இறக்கை முளைத்துப் பறந்த பிறகு காலியான பொந்துகளில் மைனா, கிளி போன்ற பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். எனவே இவை இனப்பெருக்கம் செய்யவும், மரங்கொத்தி உதவுகின்றது.
இப்பறவையை நீங்கள் அடையாளம் கண்டால் அது பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.
எழுத வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.