“வணக்கம் பூஞ்சிட்டூஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னிக்கு நானும் ரோபோ பிண்டுவும் உங்களுக்கு சூப்பரான ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு காட்டப் போறோம். பிண்டு நீயே அது என்னன்னு கொஞ்சம் சொல்லிடேன்” என கோலி குண்டு கண்களை உருட்டி சொன்னாள் அனு.

“ஷ்ஷ்! நம்ம செய்யப் போற விஷயத்தை ரகசியமா கத்துக்கிட்டு உங்க நண்பர்களுக்கு செஞ்சு காட்டி அசத்துங்க, சரியா. இன்னிக்கு நம்ம செய்யப் போறது பலூன் வண்டி” என்று உற்சாகத்துடன் சொன்னது பிண்டு .

“அதுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். நீங்களும் எடுத்து வெச்சுக்கோங்க நண்பர்களே!” என்று சொல்லிவிட்டு வீட்டினுள்ளே ஓடினாள் அனு.

தேவையான பொருட்கள்:

பழரசம் வாங்கும் டெட்ராபேக்( பத்து ரூபாய்க்கு வாங்கும் ஜுஸ் பெட்டி) – 1

ஒன்று போல் இருக்கும் ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மூடி – 4

பல் குத்தும் குச்சி – 2

பலூன் சிறியது – 1

ரப்பர் பேண்ட் – 1

மடக்கும் வசதியுள்ள ஸ்ப்ரிங் டைப் ஸ்ட்ரா – 1

ஸெல்லோடேப் – 1

செய்முறை:

1. பாட்டில் மூடியின் மையப் பகுதியில் சிறு துளை போட்டுக் கொள்ளவும். இதைப் பெரியவர்கள் உதவியோடு தான்‌ செய்ய வேண்டும்.

2. பிறகு பல் குத்தும் குச்சியின் இரு புறமும் ஒவ்வொரு மூடியை நன்கு நுழைத்துக் கொள்ளவும். இதே போன்று மற்றொரு குச்சியிலும் மூடியை நுழைத்துக் கொள்ளவும். இப்போது நான்கு சக்கரங்களும் அதன் அச்சாணியில் சேர்ந்துவிட்டது.

3. டெட்ராபேக்கின் அடிப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்களில் இருப்பது போன்ற டயர் அமைப்பின் படி இந்த குச்சிகளை டேப்பின் மூலம் ஒட்டிக் கொள்ளுங்கள்

4. சக்கரம் நன்றாகச் சுழல வேண்டும். அதனால் டேப்பினை ரொம்பவும் இறுக்கமாக ஒட்டக் கூடாது.

balloon car

5. பிறகு டெட்ராபேக்கின் மேல் பகுதியில் ஸ்ட்ராவை ஒட்டிக் கொள்ளுங்கள். ஸ்ட்ராவின் சிறிய வளைந்த பகுதியில் ரப்பர் பேண்ட்டின் மூலம் பலூனை நன்கு இறுக்கமாக கட்டிவிடுங்கள்.

6. பிறகு ஸ்ட்ராவின் பெரிய பகுதியை ஜுஸ் அட்டையின் மேல் நீள வாக்கில் வைத்து ஒட்டவும். ஸ்ட்ரா அட்டைப்பெட்டியையும் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

(ஒருவேளை இந்தப் பெட்டியைத் தரையில் வைக்கும் போது அது மேலே எழும்பினால், பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்டினால் வண்டி சீராகும்).

7. அடுத்து ஸ்ட்ராவின் துளை மூலம் பலூனை நன்கு ஊதிப் பெரிதாக்கி விட்டு, வண்டியை தரையில் விடுங்கள். நீங்கள் உருவாக்கிய வண்டி வேகமாக முன்னோக்கி ஓடும்.

அறிவியல் உண்மைகள்:

பலூனில் இருந்து வெளிவரும் காற்று ஏற்படுத்தும் அழுத்தமே வண்டி முன்னோக்கி செல்ல தேவைப்படும் உந்துசக்தியைத் தருகிறது.

நியூட்டனின் மூன்றாம் விதி.

நாம் ஆற்றும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டாகும் என்பதே நியூட்டனின் மூன்றாம் விதியாகும். அது போல் இங்கே பலூனில் இருந்து காற்று பின்புறமாகக் கசிவதால், வண்டி முன்னோக்கிப் பயணிக்கிறது.

பிண்டு: “என்ன குட்டீஸ் இது ரொம்பவே ஈசியான விஷயம் தானே செஞ்சு பார்த்து உங்க வண்டி எப்படி ஓடுச்சுன்னு சொல்றீங்களா?”

“ஆமாம் நண்பர்களே, வண்டியை ஓட்டி நல்லா விளையாடுங்க நானும் பிண்டுவும் அடுத்த மாதம் வேறொரு அறிவியல் விஷயத்தோட வரோம். பாய்! பாய்!” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் அனு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments