(சூடான் நாட்டு நாடோடிக் கதை)
சூடான் நாட்டின் ஒரு கிராமத்தில் ஹஸன் என்ற ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். மிகவும் பலசாலியான அவனைத் தோற்கடிக்க அந்த ஊரில் யாரும் இல்லை. தினமும் அவனது தாயிடம், “அம்மா! நான் தானே இந்த உலகத்திலேயே பெரிய பலசாலி?” என்று கேட்பான்.
“ஆமா.. நீ தான் இந்த உலகத்திலேயே பெரிய பலசாலி” என்று அவனது அம்மாவும் பதிலளிப்பார். இதுவே பல நாட்கள் தொடர்ந்தது. ஹஸன் எந்த வேலைக்கும் போவதாக இல்லை. அவன் தாயே அவனுக்கும் சேர்த்து உழைத்து உணவு கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் வேலைக்குப் போகவில்லையே என்ற கவலையில் இருந்த அவரிடம் ஒருநாள் ஹஸன் வழக்கம் போல, “அம்மா! நான் தானே உலகத்திலேயே பெரிய பலசாலி?” என்றான்.
அவன் அம்மா அன்று பதிலே சொல்லவில்லை. “ஏன் அம்மா? நான் பலசாலி இல்லையா?” என்று அவன் மீண்டும் கேட்க, “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உன் பலத்தைப் பத்திப் பெருமை பேசிக்கிட்டே இருக்காம நீ வேலைக்கு போகலாமே..” என்றார் அவனது அம்மா.
“என்னை விட பலசாலி இந்த உலகத்துல இருக்க முடியாது. நான் இந்த ஊர விட்டுப் போறேன்.. உலகம் பூரா சுத்தப் போறேன். ஒரு வேளை என்னை விட பெரிய பலசாலியைப் பார்த்தா நான் திரும்பி வரவே மாட்டேன்” என்று கூறி கோபித்துக் கொண்டு கிளம்பினான். அவனது அம்மா தடுத்துப் பார்த்தும் அவன் கேட்கவில்லை.
தன் குதிரையில் ஏறிப் பயணம் செய்தான். நீண்ட தூரம் போனபின் ஒரு காடு குறுக்கிட்டது. ஓய்வுக்காக ஒரு ஆற்றின் அருகில் நிறுத்தும்போது இரண்டு மனிதர்களைப் பார்த்தான். ஹஸன் குதிரையில் வந்திருக்க, அந்த இருவரில் ஒருவன் சிங்கத்தின் மேலேயும், இன்னொருவன் சிறுத்தையின் மேலேயும் ஏறிச் சவாரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
‘என்னால குதிரையைத் தான் ஓட்ட முடியுது. இவங்க ரெண்டு பேரும் சிங்கத்தையும் சிறுத்தையும் அடக்கி அதுமேல பிரயாணம் பண்றாங்களே.. இவங்க என்ன விட பலசாலிகளாக இருப்பாங்களோ?’ என்று நினைத்துக் கொண்டவன், அவர்களுடன் இணைந்து கொண்டான். மூவரும் அன்று இரவு அங்கேயே தங்க முடிவு செய்தனர்.
மறுநாள் அவர்களில் ஒருவன், “நான் இன்னைக்கு என்கிட்டே இருக்கிற பொருட்களை வச்சு ரொட்டி தயார் பண்றேன். அது கூட வச்சு சாப்பிட மாமிசத்தைத் தேடி நீங்க ரெண்டு பேரும் போங்க” என்று அனுப்பி வைத்தான்.
அதன்படியே ஹஸனும் இரண்டாமவனும் வேட்டையாடி மாமிசம் கொண்டு வர, முதல் மனிதன் சோகத்துடன் அமர்ந்திருந்தான். “நான் செஞ்சு வச்சிருந்த ரொட்டிய ஒரு பெரிய பலசாலியான பூதம் மாதிரியான மனுஷன் வந்து திருடிட்டுப் போயிட்டான்” என்று கூறினான்.
மறுநாள் இரண்டாமவன் ரொட்டி தயாரிக்க, அன்றும் அதுவே நடந்தது. மூன்றாவது நாள் ஹசனின் முறை. அவன் ரொட்டிகளைத் தயார் செய்துவிட்டு நண்பர்களுக்காகக் காத்திருந்தான். அப்போது அந்த பூதம் போன்ற பெரிய மனிதன் வந்தான்.
“உன் நண்பர்களை மாதிரி நீயும் ரொட்டியைக் குடுத்தேன்னா உயிர் பிழைச்சுப் போயிடலாம்.. இல்ல உயிரைவிட வேண்டியதிருக்கும்” என்று அந்த மனிதன் மிரட்ட, ஹசன் பயப்படவில்லை. “மத்தவங்களோட உணவைத் திருடி சாப்பிடுறதுக்கு வெக்கமா இல்ல?” என்று கூறியபடி அந்தப் பெரிய மனிதன் எதிர்பாராத நேரத்தில் தன் சிறிய கத்தியால் அவன்முன் சென்று தாக்கி அவனை நிலைகுலையச் செய்தான். அவனது கால்களுக்குள் புகுந்து அவனைக் கீழே தள்ளி விட அந்த மனிதன் சோர்வடைந்து, விட்டால் போதும் என்று ஓடியே விட்டான்.
அந்த மனிதனின் சட்டைப்பையில் இருந்து ஒரு சிறிய கூண்டு கீழே விழுந்திருந்தது. அது என்னவென்று ஹசன் திறந்து பார்க்க, அதில் ஏழு சிறிய தங்கப் பறவைகள் இருந்தன. அப்போது நண்பர்கள் இருவரும் திரும்பி வரவே, தன் சாகசத்தைக் கூறினான் ஹசன்.
மூவரும் அன்று திருப்தியாக உண்டு முடித்து தங்கள் வழிகளில் திரும்பினர். ஹஸன் தன் வீட்டை நோக்கிக் கிளம்பினான். “உலகம் பூரா சுத்தப் போறதா சொன்னியே? ஏதோ ஒரு கேள்விக்கு பதில் தேடணும்னு சொன்ன? இப்ப வீட்டுக்குக் கிளம்பறே?” என்று அவனது புதிய நண்பர்கள் இருவரும் கேட்க, “அம்மா சொன்னது சரின்னு புரிஞ்சுகிட்டேன்.. என் கேள்விக்கும் விடை கிடைச்சுடுச்சு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. என்னை விட நீங்க ரெண்டு பேரும் பலசாலியாக இருந்தீங்க. உங்களை அந்தப் பெரிய பூத மனிதன் ஜெயிச்சுட்டான். ஆனா அவனை நான் ஜெயிச்சுட்டேன். இப்படி ஒவ்வொரு விதத்திலயும் ஒருத்தர் இன்னொருத்தரை விட வல்லவர்களா தான் இருக்காங்க. நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு அம்மாகிட்ட போய் சொல்லப் போறேன்” என்று மகிழ்ச்சியுடன் கிளம்பினான்.
வீட்டுக்குச் சென்றவன், தன் தாய்க்குத் தான் கொண்டு வந்திருந்த தங்கப் பறவைகளைப் பரிசாக அளித்து, தான் உணர்ந்து கொண்டதைப் பற்றியும் சொன்னான். அவனது அம்மாவும் மனமகிழ்ந்தார்.
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.