பல வருடங்களுக்கு முன்னால் நம் பூமி இப்போது இருப்பது போல இருக்கவில்லை. பூமி முழுக்க நெருப்பு மனிதர்கள்தான். அவர்கள் சூரியனில் இருந்து பூமிக்கு வந்த படை வீரர்கள்.
அவர்கள் வாயைத் திறந்தால் நெருப்பு தான்; மூச்சு விட்டால் நெருப்பு தான்; கண்களைத் திறந்தால் கூட நெருப்பு தான். இப்படி நெருப்பு மனிதர்களின் பயங்கரமான பிடியில் இருந்த பூமிக்கு புதிதாய் ஓர் ஆசை பிறந்தது.. அது என்ன ஆசை தெரியுமா? இந்த நெருப்பு மனிதர்கள் மட்டும் இல்லாவிட்டால் தன் மேல் செடி கொடிகள் வளரும், மானும் முயலும் துள்ளிக் குதிக்கும். எப்படியாவது இந்த நெருப்பு மனிதர்களைத் துரத்தி விட்டால் உயிர்க்கோளமாக ஜொலிக்கலாம் என்பதுதான்.. ஆனால் கஷ்டப்படாமல் ஆசைப்பட்டது எப்படி கிடைக்கும்.
பூமி நெருப்பு மனிதர்களோடு தன் போரைத் தொடங்கியது. ம்கூம்.. ஜெயிக்க முடியவில்லை. அயராத பூமி, வானத்திடம் உதவி கேட்டது. வானம் நெருப்பு மனிதர்களோடு போராடியது; வெற்றி பெறமுடியவில்லை.
பூமி காற்றிடம் சென்று உதவி கேட்டது. காற்றும் தன் பங்கிற்குப் போராடியது. வெற்றி பெறமுடியவில்லை. மன உறுதியுடைய பூமி நீரிடம் சென்று உதவி கேட்டது. நீரும் மழையெனப் பெய்து பார்த்தது. வெற்றி கிட்டவில்லை.
என்ன செய்வது என்று நால்வரும் யோசித்தார்கள். காற்று சொன்னது, “நாம் நால்வரும் தனித்தனியாக சண்டை போட்டதால் தான் வெற்றியடைய முடியவில்லை. நாம் ஏன் சேர்ந்து நெருப்பு வீரர்களோடு போரிடக் கூடாது?”
இதைக் கேட்டதும் மற்ற மூவரும் துள்ளி எழுந்தார்கள். “சரியான யோசனை!” என்று நீர் ஆர்ப்பரித்தது. “வாருங்கள்! வெல்லலாம்!” என்று முழக்கமிட்டது வானம். நம்பிக்கையோடு எழுந்தது பூமி.
அடுத்து என்ன நடந்தது? ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற வார்த்தைகளை உண்மையாக்கும்விதமாக நால்வரும் வெற்றியடையத் தொடங்கினார்கள். நெருப்பு வீரர்கள் சோர்வடையத் தொடங்கினார்கள்; சில கோடி வருடங்களில் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
தோல்வியடைந்த நெருப்பு வீரர்களை என்ன செய்வது? பூமி அதற்கு ஒரு தீர்வு கண்டது. தனது அடி ஆழத்தில் சிறை ஒன்றைத் தயார் செய்து அந்த வீரர்களை அங்கே சிறை செய்தது. அவர்களை எச்சரிக்க வேண்டும் என அடி ஆழத்தில் அவர்களை வைத்துப் பூட்டிக் கொண்டது.
இன்றும் பூமியின் அடி ஆழத்தில் நெருப்பு மனிதர்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். நம் பூமிப்பையன் எப்போதாவது எங்காவது அயர்ந்தால், தங்கள் பலத்தால் பூமியை உடைத்துக் கொண்டு வெளியே வருவார்கள். அப்படி வந்தால் எங்கும் நெருப்புதான், செடி கொடிகள் எல்லாம் சாம்பலாகி விடும்.
சரியாகக் கண்டுபிடிச்சிட்டீங்களே! ஆம்; அப்படி எப்போதாவது வெடித்து வெளியேறும் நெருப்பு மனிதர்களைத் தான் நாம் எரிமலைகளில் பார்க்கிறோம்.
உண்மைக் காரணம்:
நம் பூமிப் பந்தின் மேல் ஓடு இரண்டு அடுக்குகளைக் கொண்டது. மேலே உள்ளது- அடர்த்தியான கற்கோளம்;
அதன் அடியில் உள்ளது- அடர்த்தி குறைந்த மென்பாறைக் கோளம். கற்கோளம் மென்பாறைக் கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கிறது. இந்தக் கற்கோளத்தில் எட்டுத் தட்டுக்கள் உள்ளன. இந்தத் தட்டுக்கள் ஒன்றை விட்டு விலகியபடியோ அல்லது ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்தபடியோ இருக்கின்றன. அப்படி நகரும் தட்டுக்களால்தான் பூகம்பம், எரிமலைகள், மலைத்திட்டுக்கள் உருவாகின்றன. ஒன்றை விட்டு ஒன்று விலகும்போது மேல்தட்டு பலவீனமடைந்து கீழே உள்ள நெருப்புக் குழம்பு வெடித்து வெளியேறுகிறது.
நெருப்புக் குழம்பினால் பாறைகளில் ஏற்படும் வேதிவினைக் கூற்றினால் வெளியேறும் வாயுக்கள் அந்த நெருப்புக் குழம்பை வெடிப்பாக வெளியேற்றுகின்றன. இதுவே எரிமலையாக வெளிவருகிறது.
நான்அனிதா செல்வம். தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.