முதல் நாள் சாயந்திரம் ஆரம்பித்த அவிராவின் பிரச்சினை ஓயவேயில்லை. வரவரப் பிடிவாதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்று ஆனந்தன் மனதில் சலித்துக் கொண்டான்.
ஆனந்தன், ஆதிரா தம்பதியின் ஆறு வயது செல்ல மகள் அவிரா. வீட்டின் குட்டி இளவரசி. ஆனந்தன் நல்ல வேலையில் இருந்ததால் முடிந்த அளவு அவிராவின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றி விடுவான்.
நேற்றில் இருந்து தனக்கு விளம்பரத்தில் பார்த்த புது டிரஸ்ஸை உடனடியாகக் கடைக்குப் போய் வாங்க வேண்டும் என்று ஒரே பிடிவாதம். ‘கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து நாம் தான் குழந்தையைக் கெடுக்கிறோமோ?’ என்று ஆனந்தனின் மனதில் திடீரென்று சில நாட்களாக சந்தேகம் தோன்றியதால் இப்போது அவளுடைய பழக்கத்தை மாற்றி அவளைத் திருத்த நினைத்தான்.
“என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும், இந்தப் புது டிரஸ்ஸை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் இதே மாதிரி ஒடனே வாங்கித் தாங்க. அடுத்த வாரம் என் ஃப்ரண்டோட பிறந்தநாள் பார்ட்டிக்கு இதைப் போட்டுட்டுப் போகணும்” என்று ஒரேயடியாக அடம் பிடித்தாள்.
இப்போதெல்லாம் குழந்தைகளுக்குப் பெரிய பெரிய புகழ் பெற்ற தனியார் பள்ளிகளில் பணக்காரக் குழந்தைகளோடு படிக்கும் போது உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பார்த்து நடுத்தர வர்க்கக் குழந்தைகளும் பிராண்டட் கம்பெனியின் டிரஸ், பிராண்டட் கம்பெனியின் பொம்மை, பிராண்டட் கம்பெனியின் விளையாட்டு சாமான் என்று வாங்கத் துடிக்கிறார்கள். அவர்களின் எல்லா ஆசைகளும் அந்தஸ்தின் அடையாளங்களாக மாறி நிற்கின்றன.
ஆனந்தன், குழந்தையின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து இந்த முறை வாங்கித் தர மறுத்துவிட்டான்.
“அம்மாவே நல்லா டிசைன் செஞ்சு எவ்வளவு அழகா டிரஸ் தைக்கறாங்க? சரி, அது பிடிக்கலைன்னாலும் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கற கடையில போயி வாங்கிட்டு வரலாம். இவ்வளவு அதிகமா வெலை போட்டு வாங்க வேண்டாம். நீயும் வளந்துட்டு வர வயசில இருக்கே! இப்ப வாங்கற டிரஸ் ஆறே மாசத்தில முட்டியில ஏறி நிக்கப் போவுது. காசைக் கரியாக்கக் கூடாது” என்று சொல்லித் திட்டவட்டமாக மறுத்துவிட்டான் ஆனந்தன்.
அதற்காக அவிரா அழுது புரண்டு பார்த்தாள். ஆனந்தனும், ஆதிரையும் மசியவேயில்லை. நேற்று மாலையில் இருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உம்மென்று வலம் வந்து கொண்டிருக்கிறாள்.
“குழந்தைகள் அடம் பிடிப்பது பத்தி எத்தனையோ கதை படிச்சிருக்கோமே! தெனாலிராமன் கதையில கூட ஒடைஞ்ச மண்பொம்மையை ஒட்டணும்னு குழந்தை அழற கதையும், அப்புறம் யானையைப் பானைக்குள் புகுத்தணும்னு அழறது பத்தின்னு எவ்வளவோ கதை படிச்சிருக்கோமே! அது மாதிரி தானே இதுவும். தானாப் புரிஞ்சுக்குவா ஒருநாள். நாம கவலைப்பட வேண்டாம்” என்று ஆதிரையும் சொன்னாள்.
அவிராவின் அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் சமாதானப் படுத்திக் கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்தார்கள். அவிராவின் பிடிவாதம் குறையவேயில்லை. சரியாக சாப்பிடவில்லை. அம்மா, அப்பாவிடம் முகம் கொடுத்துப் பேசவுமில்லை.
ஒரு வாரம் கழிந்தது. இரண்டு நாட்களுக்கு அப்புறம் அவிராவின் தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்குப் போகவேண்டியிருந்தது.
‘நாளை ஒரு நாள் தான் பாக்கி இருக்கு. இன்னைக்கு சாயந்திரமோ இல்லை நாளையோ அப்பாவை அந்த எக்ஸ்பிரஸ் மாலுக்குக் (mall) கூட்டிட்டுப் போய் எப்படியாவது வாங்கித் தர வைக்கணும். நம்ப ஃப்ரண்ட்ஸ் எல்லாம் புது டிரஸ்ஸில வரும்போது நாம மட்டும் எப்படி நமக்குப் பிடிக்காத டிரஸ்ஸில போறது?” என்று யோசித்துக் கொண்டே நடந்ததில், வீட்டுக்குத் திரும்பும் சந்தில் போகாமல் நேராகக் கடற்கரைப் பக்கம் போய்விட்டாள்.
அவிராவின் ஸ்கூல் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால் தானே நடந்து முக்கால் வாசி நாட்கள் வந்து விடுவாள்.
சில நாட்கள் அம்மா வந்து கூட்டிப் போவாள்.
‘சரி, இதுவும் நல்லதுக்குத் தான். நல்லாத் தேடட்டும். அப்பத் தான் நாம கேக்கறதை வாங்கித் தருவாங்க’ என்று மனதிற்குள் நினைத்த அவிரா, அசட்டுத் துணிச்சலுடன் கடற்கரை பக்கம் நடந்து சென்று ஒரு படகின் நிழலில் உட்கார்ந்திருந்தாள்.
கடற்கரையில் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. ஒரு சிறுமி கிழிந்த உடையுடன் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்த இடத்திற்கு ஒரு புதியவன் வந்தான்.
“பாப்பா, யாரு நீ? எங்கே போகணும்? ஸ்கூல் யூனிஃபார்மோட இருக்கயே? வீட்டுக்குப் போக வழி மறந்து போச்சா? வா பாப்பா, நான் கொண்டு போய்விடறேன்” என்று அருகில் வந்து அவளுடைய கையைப் பிடித்தான்.
‘யாரா இருக்கும்? இவனைப் பாத்தாலே பயமா இருக்கே? புது ஆட்கள் கூடல்லாம் பேசக் கூடாது. அவங்க தர எதையும் சாப்பிடக் கூடாதுன்னு அம்மா, அப்பா சொல்லிருக்காங்களே! புள்ளை பிடிக்கற பூச்சாண்டியா இருப்பானோ?’ என்று அந்தக் குழந்தை மனது நினைத்துப் பார்த்துத் தவித்துப் போனது.
அவனிடமிருந்து கையை விடுவிக்கப் பார்த்தாள் அவிரா. அவளால் முடியவில்லை. இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“என்னை விடு, என்னை விடு” என்று கத்தினாள். அந்தச் சுண்டல் விற்கும் சிறுமி அவிராவின் குரல் கேட்டு அந்தப் பக்கம் ஓடி வந்தாள்.
“ஏய் யாரு நீ? பாப்பாவை ஏன் பிடிச்சிருக்கே? விட்டுரு” என்று அவளும் கத்த, அவனுடைய கவனம் கொஞ்சம் திரும்பியது. அந்த சந்தர்ப்பத்தில் அவிரா அவனுடைய கையை உதறிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினாள். அவனும் அவிராவைத் தொடர்ந்து ஓடி வந்தாள்.
அங்கே மனிதக் கழிவுகளும், கெட்டுப் போன காய்கறிகளும், அழுகிய மீன்களும் மொத்தமாகக் கிடந்த குப்பையில் அவிரா கால் தடுமாறி விழ, அவளுடைய உடையெல்லாம் அழுக்கானது. நாற்றமெடுக்க ஆரம்பித்தது. ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
அதற்குள் அங்கே கூட்டம் சேர்ந்து விட, அவிராவைத் துரத்தியவன் ஓடி மறைந்து போனான்.
அந்தச் சுண்டல் சிறுமியின் பெயர் தமிழ்ச்செல்வி. அவள் அவிராவை அருகில் இருந்த தனது வீட்டிற்குக் கூட்டிப்போய் அவளைக் குளிக்க வைத்துத் தனது உடையையும் மாற்றிக் கொள்ளத் தந்தாள். அவிராவைக் கூட்டிக் கொண்டு அவளுடைய வீட்டில் விடுவதற்காக அவளுடனேயே வந்தாள். அவிரா மிகவும் பயந்து போயிருந்தாள்.
வீட்டில் அவிரா ஸ்கூலில் இருந்து வந்து சேராததால் ஆதிரை பயந்து போய் விட்டாள். ஸ்கூலில் போய்த் தேடினாள். ஸ்கூலில் அவிரா ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டதாகச் சொன்னதும் அவள் மனதில் கவலை அதிகமாகி விட்டது. ஆனந்தனுக்கும் ஃபோன் செய்து அவனும் கிளம்பி வந்திருந்தான்.
இரண்டு பேரும் கவலையுடன் உட்கார்ந்திருந்த சமயம், அவிராவும் தமிழ்ச்செல்வியும் அங்கே போய்ச் சேர்ந்தார்கள். அவிரா அழுதுகொண்டே நடந்ததைச் சொல்ல, அவர்கள் தமிழ்ச்செல்விக்கு மனதார நன்றி கூறினார்கள்.
பயந்து போயிருந்த அவிரா, தமிழ்ச்செல்வியின் பழைய உடையில் அடையாளமே தெரியாமல் இருந்தாள். அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“இந்த அக்கா மட்டும் ஹெல்ப்புக்கு வரலைன்னா என்னை அவன் புடிச்சிட்டுப் போயிருப்பான்” என்று அழுது கொண்டே சொன்னாள்.
“என்னால அக்கா வித்துக்கிட்டிருந்த சுண்டல் பொட்டலமெல்லாம் கீழே கொட்டிப் போச்சு” என்று அவிரா வருத்தத்துடன் சொல்ல, ஆனந்தனும் ஆதிரையும் தமிழ்ச்செல்வியை வீட்டுக்குள் அழைத்துப் போய் அவளைப் பற்றி விசாரித்தார்கள்.
தமிழ்ச்செல்வியின் அப்பா கடலில் மீன் பிடித்து வருகிறவர். அம்மா அதைக் கடை போட்டு அருகிலுள்ள மீன் சந்தையில் விற்கிறார். தமிழ்ச்செல்வியும் அவளுடைய தம்பியும் அருகிலுள்ள அரசாங்கப் பள்ளியில் படிப்பதோடு மாலையில் கடற்கரையில் சுண்டல் விற்பது, பலூன் விற்பது போன்ற சின்னச் சின்ன வேலைகள் செய்து பெற்றோர்க்கு உதவி செய்கிறார்கள்.
மீனவர்களுக்காக அரசாங்கம் கட்டித் தந்திருக்கும் மீனவர் குடியிருப்பில் வசிக்கிறார்கள்.
தமிழ்ச்செல்விக்குப் பணம் கொடுத்த போது வாங்கிக் கொள்ள மறுத்து விட்டாள்.
“அவிரா பாப்பா எனக்குத் தங்கச்சி மாதிரி. என்னோட தங்கச்சின்னா நான் போய்க் காப்பாத்த மாட்டேனா? என்னோட தங்கச்சியைக் காப்பாத்தினதுக்கு நான் பைசா வாங்கிக்குவேனா?” என்று சொல்லி விட்டாள்.
ஏழையாக இருந்தாலும் அவளுடைய சுய மரியாதையை மதித்த அவிராவின் பெற்றோர் அவளுக்கு எதிர்காலத்தில் படிப்பிற்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம் என்று மனதில் முடிவு செய்தார்கள்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு அவிராவின் மனப்போக்கு வெகுவாக மாறிவிட்டது. ‘உண்மை அழகு உடையில் இல்லை. நல்ல எண்ணங்களிலும், அழகான மனதிலும் தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்து கொண்டாள்.
அடுத்த நாள் தனது தோழியின் பிறந்தநாளுக்கு அவிரா எளிய உடையில் தான் சென்றாள். அதன் பிறகு வேறு எந்த சாமானையும் பார்த்த உடனே வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் பழக்கத்தையும் விட்டு விட்டாள்.
அவிரா, தமிழ்ச்செல்வியின் நட்பும் பல வருடங்கள் தொடர்ந்தது.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.