வணக்கம் பூஞ்சிட்டூஸ் ,
ஆரவாரமில்லாத அழகான ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது. வாரம் முழுவதும் ரொம்ப சுறுசுறுப்பா அலுவலக வேலை பார்த்த நம்ம ஆரவ் அம்மாவுக்கு, ஞாயிற்றுக்கிழமை ரொம்பப் பிடிக்கும். காலையிலேயே ஆரவுக்காக வித விதமான வடிவங்களில், சதுர பூரி, முக்கோண பூரி, அரை வட்ட பூரி, இதய வடிவ பூரின்னு செஞ்சு மகிழ்ச்சியா சாப்பிட்டாங்க.
சாப்பிட்டு முடிச்சதும் ஆரவ் கூட வீதி உலா போலாம்னு நெனச்சாங்க, ஆனா இந்த வாரம் சரியான வெயிலு.
‘சரி! நாம ஹோம் டூர் போலாமா?’ அப்படின்னு கேட்டாங்க. ஆரவும் ரொம்ப ஜாலியா, ‘சூப்பர் மா, போலாம்’னு சொன்னான்.
வீட்டுக்குள்ள சுத்தி பார்க்கும் போது ஆரவுக்கு நிறைய பழைய பொம்மைகள் கிடைக்கும், நிறைய புதுசு புதுசா தெரிஞ்சிக்கலாம், மேல உள்ள பொருட்களைப் பார்க்கும் போது அம்மா தூக்கிக்குவாங்க. ஆரவுக்கு ஜாலி.
கிச்சன்ல இருந்து சுத்தி பார்க்க ஆரம்பிச்சாங்க.. இது பிரிட்ஜ், தமிழ்ல குளிர்சாதன பெட்டி அப்டினு ஆரவ் சொன்னான், அடிக்கடி அம்மா இப்படித்தான் சொல்ல ஆரம்பிப்பாங்கனு இந்த தடவை ஆரவே சொல்லிட்டான்.
சிரிச்சிக்கிட்டே அடுத்து பார்க்க ஆரம்பிச்சாங்க, இது கபோர்டு, தமிழ்ல அலமாரி, இதுக்குள்ள இருக்கிறது சீரகம் இங்கிலீஷிலே கியூமின், இது கடுகு அப்டினு அம்மா சொல்றதுக்குள்ள, ஆரவ் சர்க்கரை டப்பாவை பார்த்துட்டான், ‘அம்மா ஆ குடுங்க, எனக்கு சர்க்கரை ரொம்ப புடிக்கும்’னு கேட்டான், அடுத்த தடவை ஹோம் டூர் போறதுக்கு முன்னாடி இதல்லாம் ஒழிச்சு வச்சிரணும்னு அம்மா மனசுக்குள்ள நெனச்சிட்டு இப்போ கொஞ்சம் சர்க்கரையை ஆரவ் வாயில போட்டாங்க.
“சூப்பர் மா, இனிப்பா இருக்கு” அப்டினு சொன்னான்.
உடனே அம்மா சர்க்கரை இனிக்கும், புளி புளிக்கும், மிளகாய் தூள் கார்க்கும் அப்டினு சொல்லி ஒன்னு ஒண்ணா திறந்து ஆரவ் கிட்ட காமிச்சாங்க.
சமையல் அறைக்கு டூர் போனா சுவைகள் கத்துக்கலாம்.
டப்பாக்களை குலுக்கிப் பார்த்து விதவிதமான ஓசைகள் கேட்கலாம். சீரக டப்பாவை குலுக்கும் போது ஒரு சத்தம், கடுகு டப்பாவை குலுக்கும் போது ஒரு சத்தம், மிளகு டப்பாவை குலுக்கும் போது ஒரு சத்தம்.
ஆரவ் கண்ணை மூடச் சொல்லி, அம்மா ஒவ்வொரு டப்பாவை குலுக்க ஆரவ் அந்த சத்தத்தை வைத்து அது என்ன பொருள்னு கண்டு புடிச்சான். ஹோம் டூர்ல ஒரு புது விளையாட்டு விளையாடிட்டாங்க.
அப்புறம் புக் பக்கம் வந்தாங்க, ஒரு புத்தகத்துல கலரு பத்தி படிச்சதுனால ஆரவ் வண்ணங்கள் மேல ஆர்வமானது ஞாபகம் வந்தது ஆரவ் அம்மாவுக்கு.
உடனே, ‘நம்ம வீட்ல வெள்ளை நிறம் எங்கலாம் இருக்கு. கண்டுபிடிக்கலாமா?’னு அம்மா கேக்க ஆரவும் ஆர்வமா கண்டு பிடிச்சான் , தாத்தாவோட வெள்ள சட்டை , சாதம் வெள்ளை கலரு, ஜன்னல் கம்பி, ஸ்விட்சு போர்டு வெள்ளை கலருன்னு கண்டு புடிச்சதும் ஆரவ் அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் பையனோட கவனிப்புத் திறமையைப் பார்த்து.
நீங்களும் ஒரு முறை ஹோம் டூர் போயி வேற என்னலாம் தெரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க குழந்தைகளே…
.
Super story