மாயக் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு அந்த கோகுலமே மயங்கி நின்றது போல, துருவனின் குழலிசையில் அந்தக் கூட்டத்தினர் அனைவருமே மயங்கி நின்றனர்.
மயில் தனது தோகையை விரித்து அற்புதமாக நடனம் ஆடிக் காட்டியது. அபூர்வன் தனது அற்புதமான சக்திகளைப் பயன்படுத்திச் சில வித்தைகளைச் செய்து அவர்களை மகிழ்வித்தான். உருண்டும் புரண்டும் தாவித் தாவிக் குதித்தும், அந்தரத்தில் நடந்தும், நகைச்சுவை ததும்பும் வசனங்களைப் பேசியும் அபூர்வன் கோமாளித்தனமாகச் செய்த செயல்களைக் கண்டு அந்தக் குழுவில் இருந்த குழந்தைகளே மனமகிழ்ந்து கைகொட்டிச் சிரித்தனர்.
கிளி தனது பங்கிற்கு, மனிதர்களைப் போல, குழந்தைகளைப் போல விதவிதமாகத் தனது குரலை மாற்றிப் பேசிக் கொண்டு அங்குமிங்கும் பறந்து அவர்களைச் சிரிக்க வைத்தது.
அடுத்ததாக அணில் செய்த செயல் தான் எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அணில் அவர்கள் முன்னால் தனது உருவத்தைப் பெரிதாக்கி அதனுடைய ஆற்றலை வெளிப்படுத்தவில்லை.
வருணனுக்கு மட்டும் அந்தத் தகவல் ஏற்கனவே தெரிந்திருந்தது. நாகங்களின் தேசத்தில் குகையில் சிறைபட்டுக் கிடந்த வருணனை துருவன் விடுவிக்கச் சென்றிருந்த போது அணிலின் உரு மாற்றும் ஆற்றலை அவன் அறிந்திருந்தான். அவனிடம் அந்த விஷயத்தை இரகசியமாக வைத்திருக்கச் சொல்லி ஏற்கனவே துருவன் சொல்லியிருந்தான். வருணனும் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தத் தகவலை இரகசியமாகவே வைத்திருந்தான்.
கிளி தன்னுடைய அலகில் ஒரு மரக் குச்சியைக் கவ்விக் கொண்டது. அணில் அந்தக் குச்சியில் தலைகீழாகத் தொங்கி வித்தை காட்டியது. தாவித் தாவி மேலும் கீழுமாக வேகவேகமாகத் தனது பிடியை மாற்றிக் கொண்டதுடன் நடுவில் கிளியின் உடலில் ஏறித் தாவியது. மீண்டும் அங்கிருந்து வேகமாக அந்தக் குச்சிக்குத் தாவியது. அதிவிரைவாக அடுத்தடுத்து அணில் காட்டிய வித்தைகள், பார்க்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன.
எல்லோருமே தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியவுடன் அந்தக் குழுவின் தலைவரால் துருவனின் கோரிக்கையை மறுக்க முடியவில்லை. மகத்தான உதவி செய்து வருணனின் உயிரையே அல்லவா மீட்டெடுத்து வந்திருக்கிறான் துருவன்!
“நீங்கள் எல்லோரும் எங்கள் குழுவுடன் சேர்வதில் எங்களுக்கு மிகவும் ஆனந்தம் தான். எங்களுடைய வழக்கமான வித்தைகளுடன் இந்த முறை உங்கள் உதவியுடன் புதுமைகளையும் நாங்கள் புகுத்தலாம்” என்று அவர்களை இரு கை நீட்டி வரவேற்றுத் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொண்டார்.
“ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்டது. உடனடியாகக் கிளம்பவேண்டும். தாமதமாகச் சென்றால் மாயாவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். எல்லோரும் உடைமைகளைச் சேகரித்துக் கட்டுங்கள். உடனடியாகக் கிளம்பலாம்” என்று தலைவர் கட்டளையிட்டார். அவசர அவசரமாக அவர்கள் தயாரித்த உணவை உண்டு விட்டு, அங்கிருந்த பொருட்களை மூட்டையாகச் சுமந்து கொண்டு அந்தக் கலைஞர் குழு விரைவாக நடந்து மாயாவி இருந்த மலையின் அடிவாரத்தை அடைந்தது.
அங்கே அடிவாரத்தில் காவலுக்கு நின்ற காவலாளிகள், கலைக் குழுவினரைப் பார்த்ததும் சினந்து கொண்டார்கள்.
“ஏன் வருவதற்கு இவ்வளவு தாமதம் செய்தீர்கள்? எங்களுடைய தலைவர் கோபமாக இருக்கிறார். விரைந்து மலையில் ஏறுங்கள். எங்களுடைய காவலர் உங்களுக்கு வழி காட்ட உங்களுடன் வருவார்” என்று சொன்ன காவலர் தலைவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் மனதில் எழுந்ததால் அவர்களை மேலே முன்னேற விடாமல் நிறுத்தினான்.
“இந்த முறை சில புதியவர்கள் உங்கள் குழுவில் இணைந்திருக்கிறார்களே? யார் இவர்கள்? இவர்களை உங்களுடன் அனுப்புவதற்கு எனக்கு அனுமதி இல்லை” என்று சொல்லி, துருவனையும் அவனுடைய நண்பர்களையும் நிறுத்தி விட்டான்.
“இவர்களும் எங்கள் குழுவினர் தான். போனமுறை நாங்கள் இங்கே வந்து சென்ற சில நாட்களுக்குப் பிறகு இவர்கள் எங்கள் குழுவில் இணைந்ததால், நீங்கள் அவர்களைப் பார்த்ததில்லை. நீண்ட நாட்களாகவே எங்களுடன் தான் இருக்கிறார்கள். ஏற்கனவே தாமதமாகி விட்டது. இவர்கள் புதிய வித்தைகள் நிறையக் காட்டுவார்கள். அதை வைத்துத் தான் தலைவரின் மனதைக் குளிர்விக்க நினைத்திருக்கிறோம். இவர்களை நிறுத்தினால் நாங்களும் இங்கிருந்தே திரும்பி விடுகிறோம். நாங்கள் மலைக்கோட்டைக்குப் போகாமல் திரும்புவது தெரிந்து தலைவர் கோபித்துக் கொண்டால் நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு அந்தக் குழு அங்கிருந்து திரும்புவது போல நடித்தது. உடனே அந்தக் காவலாளிகள் பயந்து போனார்கள்.
‘ஏற்கனவே கலைக்குழு இன்னும் வரவில்லையென்று பொறுமையில்லாமல் தலைவர் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவர்கள் திரும்பி வேறு போய்விட்டால் தலைவரின் முழுக் கோபத்திற்கும் நாம் அல்லவா ஆளாக நேரிடும்!’ என்று நினைத்துப் பார்த்த காவலாளி நடுங்கிப் போனான்.
“சரி சரி, வெட்டியாகப் பேசிக்கொண்டு நிற்காமல் விரைந்து மேலே செல்லுங்கள். நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்” என்று சொல்லி அவர்களை மலை மேல் ஏற அனுமதித்த அந்தக் காவலர் தலைவன், அவர்களுக்கு வழிகாட்ட ஒரு காவலாளியை அவர்களுடன் அனுப்பினான்.
அடர்ந்த வனத்தின் ஊடே இருந்த கடினமான பாதையில் புதர்களையும் செடிகொடிகளையும் விலக்கிக் கொண்டு கலைஞர்களின் குழு வேக வேகமாகக் காலடிகளை வைத்து, மலையின் உச்சியில் இருந்த கோட்டையை நோக்கி விரைந்தது. பலமுறை அங்கு நிகழ்ச்சி தருவதற்காக வந்து திரும்பிய அனுபவம் இருந்த கலைக் குழுவினர், மலை மேல் ஏறும் பாதையைப் பற்றியும் அதில் இருக்கும் அபாயங்களைப் பற்றியும் நன்றாக அறிந்தவர்கள் என்பதால் காவலாளி முன்னால் வழிகாட்டிக் கொண்டு நடந்த பாதையில் கவனமாகப் பின்தொடர்ந்தார்கள்.
ஆனால் துருவனுக்கோ முதல் அனுபவம் என்பதால் வழிகாட்டியாக வந்த காவலாளியைத் தனது கேள்விக் கணைகளால் துளைக்க ஆரம்பித்தான். அந்த வழியில் இருக்கும் அபாயங்களைப் பற்றி சரியான படி தெரிந்து கொண்டால் நல்லது என்று துருவன் நினைத்தான். தாங்கள் வந்த வேலையை முடித்து விட்டுத் திரும்பி வரும்போது அந்த அபாயங்களை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வதற்கு அந்தத் தகவல்கள் தேவை என்று நினைத்தான். அவனுடைய முன்னெச்சரிக்கை உணர்வால் வந்த ஆர்வம் தான் அவனைக் கேள்விகளைக் கேட்க வைத்தது.
“அண்ணாச்சி, நாங்களே தனியாப் போய்க்குவோம் இல்லையா? நீங்க வேற எதுக்கு இப்படி வெட்டியா எங்க கூட வந்துட்டுத் தனியாத் திரும்பணும்? எங்க கூட்டத்தில இருக்கறவங்க, இங்கே அடிக்கடி வந்துட்டுப் போறவங்க தானே? அவங்களுக்கு வழி தெரியாதா என்ன?” என்று அப்பாவித்தனமாக துருவன் கேட்டான்.
உடனே அந்தக் காவலாளி, “நீ சின்னப் பையன். புதுசா இருக்கே! இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுவாங்க. அது உன்னோட விஷயத்தில சரியாத் தான் இருக்குப்பா. இதோ, நாம நடந்துட்டு இருக்கற இந்தப் பாதை மட்டும் தான் பாதுகாப்பானது.
இரண்டு பக்கமும் அடர்த்தியா நிறைய மரங்கள் தெரியுது பாக்கறயா? இதில இருக்கற ஒவ்வொரு மரமும் ஆட்கொல்லி மரம். பக்கத்தில போறவங்களை அப்படியே விழுங்கிடும். இந்த மரங்களில் பூதங்கள், பிரம்ம ராக்ஷஸர்கள் எல்லாம் இருக்காங்க. எல்லாருமே மாயாவியோட அடியாட்கள்.
மலைக்கோட்டை மாயாவியோட ஆணைக்குக் கட்டுப்பட்டு இந்தப் பகுதியைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்காங்க. யாராவது இதைப் பத்தித் தெரியாமல் அந்தப் பக்கம் போனா, அவங்க கதி அதோகதி தான். அப்படியே பிடிச்சு முழுங்கிடுவாங்க” என்று சொன்னதும், துருவன் அவன் சொன்னதை நம்பாமல் பார்த்தான்.
“நான் சொல்லறதை உன்னால நம்ப முடியலை. இல்லையா? இரு, நான் நிரூபிச்சுக் காண்பிக்கிறேன்” என்று சொல்லி விட்டு, சுற்றும்முற்றும் பார்த்தான். ஒரு சிறிய முயல் அருகில் ஓடிக் கொண்டிருந்தது. அதைத் தன் கைகளால் இலாவகமாகப் பிடித்துப் பாதையின் பக்கவாட்டில் இருந்த ஒரு மரத்தின் மேல் தூக்கி எறிந்தான்.
ஒரே சமயத்தில் அருகிலிருந்த எல்லா மரங்களில் இருந்தும் பெரிய பெரிய பூதங்களும், பிரம்ம ராக்ஷதர்களும் வெளியே வந்தனர். அவர்களுடைய தோற்றமும் பார்க்க பயங்கரமாக இருந்தது. அவர்கள் எழுப்பிய ஓலங்கள் செவிகளில் நாராசமாக இருந்ததோடு அச்சத்தை உண்டு பண்ணின. அந்தக் காட்சியைப் பார்த்து, அந்தக் கலைக் குழுவினர் பயத்துடன் விக்கித்துப் போய் நின்றார்கள். கூட்டத்தில் இருந்த குழந்தைகள் பயந்து அலற ஆரம்பித்தன.
எல்லா பூதங்களும் அந்த முயலைப் பிடிக்க விரைந்தன. ஆனால் அந்த பயங்கர பூதங்களில் ஒன்றின் கையில் சிக்கி அந்த முயல் உயிரிழப்பதை துருவனால் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க இயலவில்லை.
அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து முயலை முதலில் நெருங்கிய பூதத்தின் மேல் எறிய, அதன் கவனம் சிதறியது. முயல் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தது. அந்த ஒரு சிறிய இடைவெளியில் மயில் பறந்து சென்று அந்த முயலைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டது. முயலின் உயிர் தப்பியது. எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
“என்ன இப்படி செஞ்சுட்டீங்க? அந்த பூதங்களுக்குக் கோபம் வந்தா, நம்மைத் தாக்க ஆரம்பிச்சுருமே?” என்று அந்தக் காவலாளி பதறினான்.
அவன் பயந்த மாதிரியே அந்த பூதங்கள் கோபத்துடன் அவர்களை நோக்கிப் பறந்து வர ஆரம்பித்தன. காவலாளி உடனே தனது கழுத்தில் கட்டியிருந்த ஒரு சிறிய மணியை ஆட்டி ஒலிக்க வைத்தான். உடனே வந்து கொண்டிருந்த பூதங்கள் அப்படியே உறைந்து நின்று விட்டன.
“பூதங்களே! இந்த முறை தெரியாமல் தவறு செய்த இந்தச் சிறுவனையும், மயிலையும் மன்னித்து விட்டு விடுங்கள். இவர்கள் எல்லோரும் நமது தலைவர் மாயாவியின் விருந்தாளிகள். அவருடைய அழைப்பை ஏற்றுக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வித்தைகளைச் செய்து தலைவரையும் மற்றும் கோட்டையில் வசிக்கும் மக்களையும் மகிழ்விக்க வந்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் வந்து சேரத் தாமதமானதால் தலைவர் கோபமாக இருக்கிறார். இப்போது நீங்கள் ஏதாவது இடையூறு செய்தால் இன்னமும் அதிகத் தாமதமாகி விடும். தயவுசெய்து இந்த ஒருமுறை மன்னித்து இவர்களைப் போக விடுங்கள். திரும்பி வரும்போது இவர்கள் ஏதாவது தவறான செயல் செய்து உங்களுக்குக் கோபத்தை மூட்டினால், நீங்கள் இவர்களைப் பிடித்து விழுங்கி உங்கள் பசியைப் போக்கிக் கொள்ளலாம்” என்று பணிவுடன் வேண்டினான்.
மலைக்கோட்டை மாயாவியின் பேரைக் கேட்டதும் அமைதியான அந்த கொடூரத் தோற்றம் கொண்ட பூதங்களும் வந்த வழியே திரும்பிச் சென்று தங்களுடைய மரங்களில் தஞ்சம் புகுந்தன.
மீண்டும் அந்தக் குழு தங்களுடைய பயணத்தைத் தொடங்கியது. “இப்போதாவது நான் சொல்வதில் நம்பிக்கை வருகிறதா? இனியாவது சந்தேகப்படாமல் நான் சொல்வதைக் கேட்டு நடப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றான் அவன். துருவனும் பயந்து நடுங்குவது போல நடிக்க, அவன் மேலே சொல்ல ஆரம்பித்தான்.
“இந்த ஆட்கொல்லி மரங்களைப் போன்று ஆட்கொல்லிச் செடிகளும், கொடிகளும் கூட வனப்பகுதியில் இருக்கின்றன. பார்க்க சாதாரணமாகக் காட்சி அளிக்கும் இந்தச் செடி, கொடிகளில் கண்ணைக் கவரும் நிறங்களில் மணம் பரப்பும் மலர்களும், கனிகளும் தென்படும். அவற்றைப் பார்த்து அவற்றைப் பறிக்கத் தங்கள் அருகில் நெருங்கும் உயிரினங்களைத் தங்கள் கொடிகளாலும் கிளைகளாலும் கயிற்றைப் போலச் சுற்றி இறுக்கி அந்தத் தாவரங்கள், உயிரை உறிஞ்சி விடும்” என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் நடுங்க ஆரம்பித்தார்கள்.
“இவற்றைத் தவிர சில மரம், செடி, கொடிகளும் காய்களும், கனிகளும் பார்க்கவே அழகாகவும், மணத்துடன் உண்பதற்கு ஏற்றவை போல இருக்கும். அந்தத் தோற்றத்தில் ஏமாந்து பறித்து உண்டால் மயங்கி விழ வேண்டியது தான். சில சமயம் உயிரைப் பறிக்கும் விஷத்தன்மை கொண்ட கனிகள், சில சமயம் போதை தரும் கனிகள், சில சமயம் மயங்க வைக்கும் கனிகள் என்று பல்வேறு வகைகள் உண்டு. மயங்கி விழுந்தால் வனவிலங்குகளுக்கு இரையாக வேண்டியது தான்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ கொடிய வனவிலங்குகள் உறுமும் சத்தம் கேட்கக் குழந்தைகள் பயந்து அலறின.
“பயப்பட வேண்டாம். அதற்காகத் தான் நான் உங்களுடன் வருகிறேன். என் கழுத்தில் இருக்கும் இந்த மணி நம்மை எல்லாவித அபாயங்களில் இருந்தும் காப்பாற்றும். இது தான் மலைக்கோட்டை மாயாவியின் கீழ் வேலை செய்வதற்கான அடையாளச் சின்னம்” என்று பெருமையாகத் தனது கழுத்தில் இருந்த மணியைத் தொட்டு அந்தக் காவலாளி காண்பிக்க, துருவனும், அபூர்வனும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையசைத்துக் கொண்டார்கள். அர்த்தமுள்ள புன்னகை ஒன்று துருவனின் முகத்தில் பூத்தது.
மகிழ்ச்சியுடன் எல்லோரும் சற்று வேகமாக அடிகளை வைத்து மலையுச்சியில் இருந்த மாளிகையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
-தொடரும்.
ஹலோ குட்டீஸ், அடுத்த பகுதியில் துருவன், மலைக்கோட்டை மாயாவியை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறான். அவ்வளவு பலசாலியான மாயாவியை உருவத்தில் சிறிய துருவன் எதிர்கொள்ளப் போறான். தனது நண்பர்களின் உதவியுடன் தனது அறிவாலும் வீரத்தாலும் எப்படி துருவன் ஜெயிக்கிறான்னு பாக்கலாமா? தொடர்ந்து படிங்க குழந்தைகளா!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.