என்ன குட்டீஸ் .. எல்லாரும் எப்படி இருக்கீங்க..
ஊர சுத்தலாம்ன்னு வந்தாலும் வந்தோம்.. நடுவுல இந்த கொரோனா வந்து படாத பாடு படுத்தி மீண்டு வரதுக்குள்ள ஒரு வழியாகிருச்சு.. ஆனாலும் இந்த கொரோனாவுக்கெல்லாம் அடிபணியும் கூட்டமா நாம?! நல்ல சாப்பாடு, சுகாதாரமான சமூக இடைவெளி எல்லாத்துக்கும் மேல தடுப்பூசி’ன்னு பல அடுக்கு பாதுகாப்போட எத்தனை தடைகள் வந்தாலும் அயராது முன்னேறும் பறவைகள் தானே நாம.. !

அதே தெம்போட வாங்க ஊர் சுத்தலாம் பூஞ்சிட்டுகளே..

கெட்டியா என் சிறகுகள பிடிச்சிக்கோங்க.. இன்னைக்கு நான் பறக்குற வேகத்துல பருந்தே பஸ்பமாகிடும் பாத்துக்கோங்க.. என்ன குட்டீஸ் ரெடியா..

ரெடி ஒன் .. டூ ..

என்ன திரு திருன்னு முழிக்கறீங்க..

ஓ எங்க போரோம்ன்னு நான் சொல்லவே இல்லைன்னு தானே..

அது சர்ப்ரைஸ்.. இறங்கனதுக்கு பிறகு சொல்றேன்.. ஆனா ஒண்ணு .. இன்னைக்கு நாம போகப்போற இடத்தை போல உலகத்துல வேற எங்கேயுமே நீங்க பாக்கவே முடியாது.. அப்படி ஒரு அழகு கொட்டிக்கிடக்கிற இடம்..

என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கே இடம் புஸ்ஸுன்னு போகிடுமோன்னு குறுகுறுன்னு பாக்கறீங்க தானே..

புஸ்ஸுன்னு போகுற இடத்துக்கு உங்கள கூட்டிட்டு போவேனா..

இப்படியே பேசிட்டு இருந்தோம்ன்னா உண்மையிலேயே நம்ம திட்டம் புஸ்ஸுன்னு ஆகிரும்.. அதனால வாங்க கிளம்பலாமா..

ரெடி ஒன்.. டூ.. த்ரீ…

வ்ரூம்.. ஷ்ரூம் .. ஷ்வீய்க்..

ஹையா குழந்தைகளே.. நாம இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு..

பொறுமையா உங்க கண்களை திறந்து பாருங்க..

என்ன குழந்தைகளே.. இப்படி ஒரு பச்சை பசேலான்னு தான யோசிக்கிறீங்க..

பச்சை பசேல் மட்டுமில்ல இயற்கை என்கிற வார்த்தையை நம்ம மனசுக்குள்ள நினைச்சதும் உடனே ஞாபகத்துக்கு வர
காடு ..மலை.. ஆறு..நதி ..கடல் ..தீவு.. அருவி.. அமைதி.. வயல்,.. கிராமம்.. அவ்வளவு ஏன் எரிமலை வரைக்கும் இயற்கையின் அத்தனை அம்சங்களும், அமைப்புகளும், பகுதிகளும், சூழலுமாக விரிந்து கிடக்கும் ஒரு இடம் தான் ஹவாய் தீவுகள். இது அமெரிக்காவின் வடக்கு பசுபிக் பெருங்கடல்ல இருக்கிற ஒரு அழகான தீவுக்கூட்டம். அதுமட்டுமில்ல கடைசியாக அமெரிக்காவோட ஐம்பதாவது மாகாணமாக இணைந்தது ஹவாய் தான்.

எந்த பக்கம் பாக்கறதுன்னே தெரியாத அளவுக்கு இயற்கை பொங்கி வழியுற இடமா இருக்கிற ஹவாய்ல மக்கள் ஹவாயியன் மொழி பேசுறாங்க.. பழமை விரும்பிகளான ஹவாயியன் மக்கள் இன்னமும் தங்களது முன்னோர்களோட பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், இசைக்கருவிகள், நடனங்கள், உடைகள்ன்னு தங்களோட அன்றாட வாழ்க்கை முறையோட பாரம்பரியத்தையும் கூடவே கடத்திட்டு வராங்க..

அந்த காலத்துல இங்கு புலம் பெயர்ந்து வந்த பலதரப்பட்ட மக்களின் கோர்வை தான் ஹவாயியன் மொழி. அலோஹா என்னும் ஹவாயியன் வார்த்தை உலகப்புகழ் பெற்றது.. அலோஹா அப்படின்னா வணக்கம் அப்படின்னு அர்த்தம்.

ஹவாயியன் மக்களோட மிகப்பெரிய சொத்து, ஹவாயியன் இயற்கை வளம் தான்.

தீவுகள், எரிமலைகள், பல்லுயிர் வகைமைகள்ன்னு நிறைந்த ஹவாய் இயற்கை தாயோட செல்ல குழந்தைன்னே சொல்லலாம் தானே..

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *