five children and it
இந்த சிறுவர் புதினம் 1902ஆம் ஆண்டு எடித் நெஸ்பிட் என்ற ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்டது. ‘ஸ்ட்ராண்ட்’ என்ற பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த இந்தக் கதையைத் தொடர்ந்து ‘ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும்’, ‘அமூலெட்டின் கதை’ என்ற பெயர்களில் இன்னும் இரு பாகங்களையும் எழுதியுள்ளார் ஆசிரியர். எழுதப்பட்ட நாள் முதல் இன்று வரை உலகெங்கும் அச்சிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது இந்த சுவாரசியமான கதைப் புத்தகம்.
  1. அது!

ராபர்ட், சிரில், ஆந்த்தியா, ஜேன், ஹிலாரி ஐந்து பேரும் ஒரே வீட்டைச் சேர்ந்த சகோதர சகோதரிகள். அதில் ஹிலாரி ஒரு வயதே உடைய குழந்தை. அவனை ‘லேம்ப்’ (Lamb) என்று செல்லமாக அழைப்பார்கள். ஒரு சமயம் இவர்களது பெற்றோர் சில நாட்களுக்கு வெளியூர் சென்றுவிட, பணிப்பெண்ணான மார்த்தாவின் கவனிப்பில் ஐந்து பேரும் இருந்து வந்தார்கள். அது விடுமுறை சமயம் என்பதால் காலை உணவை முடித்துக் கொண்டு நான்கு பெரிய குழந்தைகளும் தங்கள் சிறிய தம்பியைத் தூக்கியவாறு பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு சிறிய சுற்றுலா செல்வது வழக்கம்.

 அப்படி ஒரு இனிமையான நாள் அன்று காலையிலேயே கடற்கரைக்குச் சென்றார்கள். இனிமையான காற்று வீச, கடற்கரை மணலில் கோட்டை கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரியதாகக் கோட்டை கட்டி முடித்தவுடன் ராபர்ட், சிரில், ஜேன் மூவரும் ஓய்வெடுக்க, ஆந்த்தியா மட்டும் தொடர்ந்து கோட்டையைச் சுற்றி அகழி போல் அமைத்துக் கொண்டு இருந்தாள்.

 திடீரென்று, “என்னைத் தொல்லை செய்யாதீங்க. விட்டுடுங்க!” என்று அவள் தோண்டிய குழிக்குள் இருந்து ஒரு சத்தம் கேட்டது.

“இங்கே வாங்களேன்.. யாரோ பேசுற சத்தம் கேட்குது” என்று ஆந்த்தியா மற்றவர்களை அழைக்க, லேம்பை ஓரமாக அமர வைத்து விட்டு வந்த மற்ற மூவரும், “ஒண்ணும் தெரியலையே?” என்றனர்.

ஆந்த்தியா இன்னும் கொஞ்சம் அந்தக் குழியைத் தோண்ட, மீண்டும் அதே குரல் கேட்டது. இப்போது நன்றாக கவனித்துப் பார்த்தனர். உருண்டையான வித்தியாசமான வடிவம் கொண்ட ஒரு உயிரினம் கண்களுக்கு தெரிந்தது.

“என்னை ஓய்வெடுக்க விடுங்க.. தொந்தரவு பண்ணாதீங்க!” என்றது அந்த உருவம்.

“யார் நீ?” என்று சிறுவர்கள் கேட்க,

“என் பேர் சாமீட்! (Psammead)” என்றது அந்த உருவம்.

 அதன் உடல் ஒரு சிலந்தியின் உடலைப் போல உருண்டையாக இருந்தது. அதன் மேல் இன்னொரு உருண்டையைப் பிடித்து வைத்த மாதிரியான தலை, வெளியே தெறித்து வந்து விழுந்து விழுவது போல் நீட்டிக் கொண்டிருந்த கண்கள், மேல் நோக்கி இரண்டு பக்கமும் நீட்டிய காதுகள் என்று பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. கை கால்கள் ஒரு குரங்கினுடையது போல் இருந்தன. உடலெல்லாம் மணல் நிறத்தில் புசுபுசுவென்று முடி வளர்ந்திருந்தது.

“சாமீடா? அந்தப் பேரை இதுவரை நான் நாங்க கேள்விப்பட்டதே இல்லையே? என்ன மாதிரியான உயிரினம் நீ?” என்று ராபர்ட் கேட்க,

 “மணல் தேவதைன்னு  கேள்விப்பட்டு இருக்கீங்களா? நாங்க எல்லாம் அந்த வகைக்குக் கீழே வருவோம். பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி உங்களை மாதிரி குழந்தைகள் காலையில கடற்கரைக்கு வந்து மணல் தேவதை கிட்ட வேண்டிக்குவாங்க.. அப்ப மணல் தேவதை அவங்களுக்கு வேண்டிய வரமும் குடுத்து, ஆசைப்பட்ட உணவுவகைகளும் குடுக்கும். அந்த உணவோட மிச்சங்களை குழந்தைகள் உருட்டி உருட்டி மணல்ல வச்சிருவாங்க. அந்த உருவங்கள் தான் நாங்க. நாளாக, நாளாக நாங்க குட்டி மணல் தேவதைகளா ஆயிடுவோம். அப்படியே மண்ணுக்குள்ளேயே புதைஞ்சு இருப்போம். எப்பவாவது உங்கள மாதிரி யாராவது தோண்டி எடுத்தா நீங்க கேக்குற சின்னச் சின்ன வரங்களை எங்களால குடுக்க முடியும்” என்றது அந்த மணல் தேவதை.

“அப்படியா? நம்பவே முடியலையே!” என்றனர் சிறுவர்கள்.

“நீங்க வேணா ஏதாவது வரம் கேட்டுப் பாருங்களேன்” என்று சாமீட் மணல் தேவதை கூற,

“நாங்க நாலு பேரும் ரொம்ப அழகானவங்களா மாறணும்” என்று சிரில் கேட்டான். அப்போது அவர்களது சிறிய தம்பி லேம்ப் மட்டும் தள்ளி உட்கார்ந்திருந்ததால் அவனை சேர்த்துக்கொள்ளவில்லை. மற்ற நான்கு பேரை மட்டும் காட்டிக் கேட்டான்.

“இதோ ஒரு நிமிஷத்துல!” என்றது அந்த மணல் தேவதை. சட்டென்று நான்கு பேரும் உயரமானவர்களாகவும் அழகானவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

ஜேனுக்கு கூந்தல் நீளமாகவும் கண்கள் நீல நிறமாகவும் மாறிவிட்டது. சிரிலுக்கு தங்க நிறக் கூந்தல் கிடைத்தது. ராபர்ட், ஆந்த்தியா இருவரும் சினிமா நடிகர்கள் போல மாறிவிட்டனர்.

  தங்கள் தோற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த நான்கு பேரும் மகிழ்வுடன் தங்கள் தம்பியைத் தூக்கச் செல்ல, அவனுக்கு இவர்களை அடையாளம் தெரியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்தான்.

“நான் தான் உன் அக்கா!” “நான் தான் உன் அண்ணன்!” என்று கூறினாலும் அவன் புரிந்துகொள்ளவில்லை. அழுது கொண்டிருக்கும் சிறுவனை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டார்கள்.

மணல் தேவதை, “ஞாபகம் வச்சுக்கோங்க. ஆறு மணி வரை தான் இந்த வரம் வேலை செய்யும்!” என்று கூறிவிட்டு மீண்டும் தன்னுடைய குழிக்குள் தூங்கப் போனது.

“நாளைக்கு வந்து இன்னொரு வரம் கேட்கிறோம்” என்று அவர்கள் மணல் தேவதையிடம் கூறிவிட்டு அந்தக் குழி இருந்த இடத்தில் அடையாளத்துக்காக வட்டமாகக் கற்களை அடுக்கி வைத்து விட்டுக் கிளம்பினார்கள்.

 சிறுவர்கள் அழுதுகொண்டிருந்த தங்கள் தம்பியைச் சுமந்தவாறு வீட்டுக்குச் செல்ல, வீட்டில் இருந்த பணிப்பெண் மார்த்தாவுக்கும் இவர்களை அடையாளமே தெரியவில்லை. ஆனால் குழந்தையை அடையாளம் தெரிந்துவிட்டது. “யார் நீங்க? எங்க வீட்டுக் குழந்தையை கடத்திட்டு போக வந்திருக்கீங்களா?” என்று கூறி லேம்ப்பை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.

அழுது கொண்டிருந்த லேம்ப் அவளைப் பார்த்தவுடன் அமைதியாகி விட்டான்.

“நாங்கதான் இந்த வீட்டுக் குழந்தைங்க.. மணல் தேவதையோட வரத்தினால் இப்படி அழகா மாறியிருக்கோம்” என்று நால்வரும் விளக்கியும் மார்த்தா நம்பவே இல்லை. அவர்களை வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டாள்.

பசியுடனும் சோர்வுடனும் நான்கு பேரும் வீட்டின் வெளியே காத்திருந்தார்கள். மாலை நேரம் நெருங்கியது. ஆறு மணி ஆனவுடன் அவர்கள் இயல்பான உருவத்திற்கு மாறிவிட்டார்கள். ஜேன் தான் அதை முதலில் கவனித்தது.. “ஏய்! இங்க பாருங்க.. நாமெல்லாம் பழையபடி சாதாரணமா ஆயிட்டோம்!” என்றாள்.

“அட ஆமா!” என்று மகிழ்ச்சியடைந்து மீண்டும் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். இப்போது மார்த்தாவுக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது.

“சேட்டைக்காரக் குழந்தைங்களா? வெளியே போயிட்டு எவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க? கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோங்க. உங்க தம்பியை இன்னிக்கி யாரோ கடத்திட்டுப் போகப் பாத்தாங்க, தெரியுமா? உங்க மேல பாருங்க.. ஒரே மண்ணு! போய் குளிங்க” என்று அவர்களைக் கடிந்து கொண்டாள்.

“சே! இன்னிக்கு வரம் வேஸ்ட்டாப் போச்சே! நாளைக்கு மணல் தேவதையைப் பார்த்து வேற ஒரு நல்ல வரமாகக் கேக்கணும், அந்த வரம் நம்ம மார்த்தாவோட கண்ணுக்கு மட்டும் தெரியாத மாதிரி இருக்கணும்னு கேப்போம்” என்று நான்கு பேரும் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டார்கள்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments