kutti yaanai

இன்று புவனாவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு எங்காவது கூட்டிப்போக சொன்னாள். அம்மா பாட்டி வீட்டுக்கு சென்றிருப்பதால் இன்னொருநாள் போகலாம் என்று சொல்லிவிட்டு அப்பா காலை வேலைக்கு சென்றுவிட்டார்.

புவனா வீட்டில் வேலைக்கார பாட்டியுடன் தனியாக டிவி பார்த்தாள்.  பள்ளி விடுமுறையாக இருந்ததால் அந்த கொண்டாட்டமும் இல்லாதது அவளுக்கு கவலையாக ஆகிவிட்டது. பள்ளி நாளாக இருந்தால் இன்று கலர் டிரஸ் போட்டுப்போயிருக்கலாம். நண்பர்களுக்கு சாக்லேட் தரலாம். அத்துடன் டீச்சர்ஸ் எல்லாம் இன்று நன்றாக கொஞ்சுவார்கள். திட்டவே மாட்டார்கள். நான்காவது படித்தாலும், அவளது சுட்டித்தனங்களால் அவளை சிறுகுழந்தையாகவே அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். அந்த வாய்ப்பு இல்லாதது வேறு அவளுக்கு வாட்டியது. அத்துடன் வீட்டிலேயே இருந்ததும் அவளுக்கு மிக போரடித்தது.

என்ன நினைத்தாரோ அப்பா சுரேஷ், மதியம் பாதியிலேயே வந்து விட்டார். அவளுக்கு மிகவும் சந்தோஷமாக ஆகிவிட்டது. அப்பா, மதியம் ஆகிவிட்டதால் பக்கமாய் எங்காவது கூட்டிப்போகிறேன் என்றார். அவர்கள் வீட்டில் இருந்து ஒருமணி நேரம் பைக்கில் சென்றால் காட்டுப்பகுதி வரும். அது வன இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. ஆனாலும் பாதுகாப்பானது. சிறுசிறு முயல்கள், பறவைகள் அங்கே சுற்றிவரும். சிலநேரம் மான்கள் கூட.

“அப்பா… அங்கே பெரிய மிருகங்கள் எல்லாம் வராதா…?” என்றாள் புவனா.

“இல்லம்மா… அதெல்லாம் உள்ளதான் இருக்கும். நாம போறது காட்டு ஓரமாதான்… ஜாலியா இருக்கும்” என்றார் சுரேஷ்.

பைக் தார் ரோடில் இருந்து மண் ரோட்டுக்கு மாறியது. அப்பா மெதுவாக ஓட்டிச்சென்றார். கொஞ்ச தூரம் போனதும் சின்ன சின்ன கடைகள் வந்தன. அதன்பின் மரங்கள் சூழ்ந்த பகுதியினை அடைந்தார்கள். அங்கே புவனாவும், சுரேஷும் இறங்கினார்கள். அவர்களைப்போல் இன்னும் சிலரும் வந்திருந்தார்கள். கீழே இறங்கியதும் அவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு சிறு ஓடை போல் தண்ணீர் ஓடுவதைப்பாத்தாள் புவனா.

“இதென்னப்பா … ஆறா….?” என்றாள் புவனா.

“இல்ல புவனா… இது ஓடை… மலைமேல மழைதண்ணி , ஊறி மெதுவா வடிஞ்சு ஓடையா வரும். அப்படியே ஏரியில போய் சேகரமாயிடும்.” என்றார் சுரேஷ்.

“ஓ… இதான் ஏரிக்கு தண்ணி வர வழியா…”

“ஆமாம்மா…. “ என்ற சுரேஷ், பக்கத்தில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பார்த்தார். புவனாவுக்கு எதுவும் வாங்காமல் வந்தது ஞாபகம் வர,

“புவனா … வா… போய் தீனி எதுவும்  வாங்கி வரலாம்”

“நீங்க போய் வாங்கி வாங்கப்பா… நான் இந்த தண்ணில கால் நனைச்சுட்டு இருக்கேன்.”

“தனியாவா… பயந்திடபோற…..”

“அய்ய… இவ்வளவு பேர் இருக்காங்க…நீங்க நடந்துபோய் வாங்கிட்டு வாங்க… கொஞ்ச நேரம்தானே…”

அப்பா அவளது தைரியத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார். இருந்தாலும், திரும்பி திரும்பி பார்த்தவாறு பக்கத்தில் இருந்த கடைக்கு நடந்து சென்றார். புவனா அந்த ஓடையில் கால் நனைத்தாள். ஜில்லென்று இருந்தது. அவளுக்கு முழங்கால் வரை இருந்தது ஆழம். வேகமே இல்லாமல் பூ மாதிரி அந்த தண்ணீர் அவளது காலை வருடிச்சென்றது. அத்துடன் சிறுசிறு மீன்களும் வந்து காலை முத்தமிட்டு ஓடியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

திடீரென்று ஏதோ ஒரு நிழல் தெரிய நிமிர்ந்தாள் புவனா. சட்டென்று அவளுக்கு அதிர்ச்சியாய் ஆகிவிட்டது. அது ஏதோ கருப்பு உருவம் . அவளுக்கு பயம் பிடித்துக்கொண்டது. திரும்பிப்பார்க்க, கூட இருந்த அந்த கும்பல் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்பா அந்த கடையில் இன்னும் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தார். புவனா மறுபடி பார்க்க அது ஒரு சிறு யானைகுட்டி. நன்றாக பார்க்க, அது ஒரு பாறையின் மறைவில் பயந்து பயந்து ஒதுங்கி, அந்த சிறு ஓடையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. புவனாவுக்கு அதன் பயம் ஆச்சரியமாக இருந்தது. அவள் அப்பாவை மறந்து அந்த குட்டியை பார்க்க ஓடினாள். அது பயந்து அந்த பாறையின் பக்கம் ஓடியது. அதை புவனா துரத்த, அது ஓடி ஒரு அகன்ற மரத்தின் பின் மறைந்தது.

புவனா அதை தொடர, மரத்தை தாண்டியதும் ஆச்சரியமாக ஆகிவிட்டது. அங்கே ஒரு சிறு பையன் அமர்ந்திருந்தான். அவன் தனியாக அந்த மரத்தடியில் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தான். ஏதோ சத்தம் கேட்க புவனா திரும்பி பார்த்தாள். அப்பா பதறியபடி ஓடி வருவது தெரிந்தது.

“புவனா… என்னம்மா இது… இங்க ஏன் வந்த… சின்னப்பிள்ளைன்றது சரியாபோச்சு பாத்தியா… நான் உன்னை விட்டு போயிருக்ககூடாது.”

“அப்பா… பக்கமாதாம்பா வந்தேன். ஒரு அதிசயம் பாருங்க.. ஒரு குட்டியானை இங்க வந்ததா…அது திடீர்னு ஒரு பையனா மாறிடுச்சு”

அப்போதுதான் அப்பா அந்த பையனை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்து அந்த பையனை தூக்கினார்.

“தம்பி… உன் பேரென்ன.. இங்க எப்படி வந்த…”

“அப்பா… இது யானைகுட்டி… பேசாது…”

“அட புவனா… ஏதோ பார்த்து நீ யானைன்னு நெனச்சிட்ட… இது பையன். “

ஆனால் அந்த பையன் இவர்களை பார்த்து வெகுளியாய் சிரித்தானே தவிர பேசவில்லை. சட்டென்று அப்பா, திரும்பிபார்க்க… அவர் கண்ணிலும் அந்த யானைகுட்டி தெரிந்தது. அவர் அதிர்ச்சியாய், புவனாவையும் கையில் தூக்கிக்கொண்டு பயமாய் பார்த்தார்.

“பயப்படறியா அப்பா… அது குட்டி…”

“அதில்ல புவனா… இது ஒண்ணும் செய்யாது. ஆனா பெரிய யானை பக்கமா இருக்கும். அது பார்த்தா வம்புதான்…” என்று சொல்லிய அப்பா மெதுவாக அங்கிருந்து நகர்ந்தார்.

“யானை நல்லதுதாம்பா…”

“எல்லா மிருகமுமே நல்லவைதான். அதுங்களுக்கு எதுனா நாம கெடுதல் செய்தாதான் அதுங்க நம்மை பயப்படுத்தும்”

 என்றபடி அப்பா மெதுவாக அந்த ஓடையில் நடந்து வெளிவர, அவரை யாரோ தொட்டது போல் திரும்பிபார்த்தார். அது அந்த யானைகுட்டி. அது அப்பாவின் இடுப்புவரைதான் இருந்தது. அது அப்பாவின் தோள் மீது தும்பிக்கையால் தடவியபடி அவரை தொடர்ந்து வந்தது. அப்பாவுக்கு பயம் வந்தது போல் இருந்தது. ஆனால் புவனாவுக்கு ஜாலியாக இருந்தது. அவர்கள் ஓடையைவிட்டு வெளியே வர, அங்கே ஒரு ஜீப் வந்து நின்றது.

அதிலிருந்து வனஅதிகாரி போல் ஒருவர் இறங்கி வேகவேகமாக ஓடிவந்தார் வந்தவர், அந்த சின்னபையனை அப்பாவிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.

“ரொம்ப நன்றிங்க……சார்…” என்றார் அவர்.

“என்ன நடக்குதுன்னே புரியலைங்க… இது யாரு….”

“இது என் பையன்ங்க… காது கேட்காது. பேசமுடியாது. இங்க பக்கத்திலதான் எங்க வீடு. அவனா நடந்து இங்க வந்திட்டான் போல…. ஊரெல்லாம் தேடிட்டு இருந்தோம். ஒரே பையன்ங்க…” என்று அவர் அழ ஆரம்பித்தார்.

“அழாதீங்க… இனிமே ஜாக்கிரதையா இருங்க… இது பாருங்க இந்த யானைகுட்டி வேற இங்க சுத்திட்டு இருக்கு… போக மாட்டேங்குது… தொடர்ந்து வந்து தொந்தரவு குடுக்குது… இங்க யானைலாம் இல்லியே… இதென்ன புதுசா இருக்கு…” என்று கேட்டார் அப்பா. அந்த யானைகுட்டி கீழே கிடந்த புற்களை பறித்து தலையில் போட்டு விளையாடிக்கொண்டிருந்தது.

“ஆமாங்க சொல்ல மறந்துட்டேன். இதோட தாய் யானை பக்கத்து ஊர்பக்கம் சுத்திட்டிருக்கு. குட்டியை காணாம அது அங்க பெரிய ஆர்ப்பாட்டம் பன்ணுது. இதை கூட்டிப்போய் அதோட சேர்க்கணும்..” என்றார் அவர்.

“இதெப்படி வழிமாறிச்சு…”

“யானைகளுக்கு காட்டுப்பக்கம் வழிதடம் உண்டு. ஒவ்வொரு சீஸனிலும் அது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு போகும். அது காலகாலமா வரது…இப்போ அந்த வழிகளையெல்லாம் அடைச்சு, கட்டிடம் அது இதுன்னு காட்டுக்குள்ள கட்டிவச்சிடுறாங்க… இந்த பெரிய யானை வந்த வழி மாறி குழம்பிடுச்சு. அது வேற திசை போக அந்த குழப்பத்தில் குட்டியை தவறவிட்டுடுச்சு… பாவம் இது…’

“இதெல்லாம் தப்புதானே.. அதுங்க இடத்தில் நாம போய் இடம் புடிச்சுட்டு, யானைகள் அத்துமீறி ஆர்ப்பாட்டம் பண்ணுதுன்னு நியூஸ் சொல்றாங்க…” என்றாள் புவனா.

“ஆமா பாப்பா… உனக்கு இருக்கும் அறிவுகூட பெரியவங்களுக்கு இல்ல. அதான் பிரச்சினை. நானே பாரேன். இது மாதிரி தப்பு நடக்கறப்போ கண்டுக்காம இருந்திருக்கேன். இன்னிக்கு என் குழந்தை தவற… அந்த வலி என்னன்னு தெரிஞ்சது…”

அவர்கள் அந்த குட்டியானையை பார்க்க, அது வெகு சினேகிதமாய் அவர்களை பார்த்து தலையாட்டியது. அழகாக இருந்தது. அந்த வன அதிகாரி ஃபோன் செய்ய ஒரு சின்ன லாரி போல் வந்து அந்த குட்டியை ஏற்றிக்கொண்டார்கள்.

“அம்மாவை பார்க்க போறியா?” என்றாள் புவனா.

அது புரிந்தமாதிரி தலையாட்டியது.

“முதல் வேலையா யானை வழிதடங்களில் இருக்கும் ஆக்ரமிப்புகளை காலி செய்யணும். அதுங்களும் வாழணும். அப்போதான் நாமளும் வாழமுடியும்” என்றார் அந்த அதிகாரி.

அவரிடமும், அந்த சின்னபையனிடமும் விடைபெற்றுக்கொண்டு திரும்புப்போது புவனாவுக்கு அம்மாவை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது.

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments