ஒரு ஊரில் ஒரு இளவரசன் தன் அரண்மனையில் சில முயல்களைப் பிரியமாக வளர்த்து வந்தான். அந்த வெள்ளை முயல்களுக்குக் கண்களும், காதுகளுல் ரோஸ் நிறத்தில் இருக்கும். ஒரு நாள் காலை அவன் கண்விழித்து எழுந்த போது, அந்த முயல்களைக் காணவில்லை. அவை எங்கோ போய்விட்டன. இரவு முழுதும் விழித்திருந்த ஆந்தைக்குக் கூட, அவை எங்கே போயின எனத் தெரியவில்லை. முயல்கள் காணாமல் போனதில் இளவரசனுக்கு மிகுந்த வருத்தம்.
“என்னோட வெள்ளை முயல்களைக் கண்டுபிடித்துத் தந்தா, நீங்க என்ன கேட்டாலும் தருவேன். என் தலையில இருக்கிற கிரீடம் வேணும்னு கேட்டாலும் தருவேன்” என்று அவனைப் பார்க்க வருகிற ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட உடனே, எல்லோரும் அந்த முயல்களைத் தேட ஆரம்பித்தார்கள்.
அரண்மனையில் இருந்த மற்ற இளவரசர்கள், இளவரசிகள், மந்திரிமார்கள், அவர்களுடைய மனைவிகள், ஆண்கள், பெண்கள் என எல்லோரும் முயல்களைத் தேடுவதற்காக வண்டியில் கிளம்பி நகரத்துக்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எங்குத் தேடியும் முயல்கள் கிடைக்கவில்லை. ஒரு மிட்டாய் கடைக்குச் சென்று மிட்டாய்கள் வாங்கி வந்தனர். இளவரசனுக்கு மிட்டாய் வாங்கி வந்ததில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த முயல்களை விட இந்த மிட்டாய்கள் மிகவும் இனிப்பானவை என்று அவனிடம் சொன்னார்கள். ஆனால் இளவரசன் அப்படி நினைக்கவில்லை. “இவை தின்பதற்கு மட்டுமே லாயக்கு” என்று சொல்லிவிட்டுப் பொருட்கள் உள்ள அறைக்கு அனுப்பிவிட்டான்.
.இளவரசரின் படைவீரர்கள் பக்கத்து நாட்டு அரசன் தான் அந்த முயல்களை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினர். எனவே முயல்களைக் கொண்டு வருவதற்காக அவர்கள் பம் பம் பம் என்று டிரம் அடித்தபடி, மலையில் ஏறிச் சென்றார்கள் சேவலின் கொண்டை போல அவர்களுடைய யூனிபார்ம் உடை சிவப்பாக இருந்தது. சிங்கம் போல தைரியத்துடன் கர்ஜித்துச் சென்ற அவர்கள், முயல்கள் கிடைக்காமல் ஊருக்குத் திரும்பினர்.
நரிகள் முயல்களைக் குகைக்குத் தூக்கிப் போயிருக்க வேண்டும் என வேட்டையாடுபவர்கள் சொன்னார்கள். நாங்கள் போய்க் கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டுத் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு காட்டுக்குப் போனார்கள். ஆனால் அங்கேயும் அந்த முயல்களைப் பார்க்க முடியவில்லை.
வேலையாட்கள் பூங்காவுக்குச் சென்று, அங்கிருந்த காவலாளியிடம் முயல்களைப் பற்றிக் கேட்டார்கள். ரோஸ் நிறத்தில் காதுகளும், கண்களும் உள்ள வெள்ளை முயல்களைப் பூங்கா உள்ளே விட மாட்டேன் என்று காவலாளி கோபமாகச் சொல்லவே, அவர்களும் மற்றவர்களைப் போல் வெறும் கையுடன் வீட்டுக்குத் திரும்பினர்.
அரசரின் தோட்டக்காரர் தோட்டத்துக்குச் சென்று தேடிப் பார்த்தார். அங்கிருந்த செடிகளில் ஒரு இலை கூட குறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. வெயிலில் ரோஸ் நிற ரோஜாக்களின் இதழ்கள் அப்போது தான் ஒவ்வொன்றாக விரியத் துவங்கியிருந்தன. தென்றலில் வெள்ளையும் ரோஸும் கலந்த ரோஜாக்கள் ஆடிக்கொண்டிருந்தன ஆனால் ரோஸ் நிறக் கண்களையும் காதுகளையும் உடைய முயல்கள், அங்கிருப்பதற்கான அறிகுறியே இல்லை.
தோட்டக்காரரின் சின்ன மகள் பெக்கி, முயல் கூண்டுக்குச் சென்று பார்த்தாள். அங்கு முயல்கள் இல்லை என்று அவளுக்குத் தெரியும் ஆனால் அங்கிருந்து தேட ஆரம்பிக்கலாம் என்று முதலில் அங்குச் சென்றாள். இளவரசனை விட பெக்கி அந்த முயல்களை மிகவும் நேசித்தாள். அவற்றின் பெயர்களும், வயதும் அவளுக்குத் தெரியும், அவைகளுக்கு மிகவும் பிடித்த தீனி எதுவென்றும் தெரியும்.
பெக்கி ஒரு குடிசையில் தன் அப்பாவுடனும், அம்மாவுடனும் வாழ்ந்து வந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் காலை உணவைச் சாப்பிட்ட பிறகு, முயல்களுக்காக லெட்டூஸ் கீரையையும் முட்டைக்கோஸையும் எடுத்து வருவாள். காலியாக இருந்த கூண்டைப் பார்த்தவுடன், அவளுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது அவள் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் திரண்டது.
கண்ணீர் அவள் கன்னங்களில் வழிவதற்குள், அவள் பார்த்த ஏதோ ஒன்று, அவளை ஆச்சரியப்படுத்தியது. முயல் கூண்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த வேலியின் மூலையில், பெக்கி ஒரு ஓட்டை இருந்ததைக் கவனித்தாள். அதைப் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கேட் வழியே வேகமாக பண்ணைக்குப் பின்புறம் இருந்த தெருவுக்கு ஓடினாள். அங்கும் முயல்கள் இல்லை ஆனால் அந்தத் தெருவில் படிந்திருந்த தூசியில் பதிவாகியிருந்த கால் தடங்கள், முயலின் கால் தடங்கள் போலவே இருந்தன.
“ஓ இந்த வழியாத் தான் அவை போயிருக்கின்றன” என்ற பெக்கி அந்தக் காலடி வழியைத் தொடர்ந்து போனாள். நடந்து, நடந்து பசுமையாக இருந்த ஒரு சந்துப் பக்கம் வந்துவிட்டாள். இது தான் முயல்களுடைய இடமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவற்றின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டாள். ஆனால் அங்கு ஒரு முயல் கூட கண்ணில் படவில்லை
தொடர்ந்து அவள் சென்ற வழியில் ஒரு கொத்து தீவனப் புல்லின் இலைகள் மிதிக்கப்பட்டுக் கிழிந்து கிடந்தன. முயல்கள் தான் இவற்றைக் கடித்திருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாகக் கத்திய பெக்கி, அந்தச் சந்தில் வேகமாகச் சென்றாள். ஒவ்வொரு திருப்பத்திலும் முயல் தென்படுகிறதா என்று தேடினாள். ஒவ்வொரு மரத்தின் பின்னாலும், ஒவ்வொரு மூலையிலும் தேடிப் பார்த்தாள் ஆனால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்தச் சந்தின் முடிவில் இரண்டு தெருக்கள் பிரிந்தன. ஒன்று மலை வழியாகப் பக்கத்து நாட்டுக்குச் சென்றது.. அதில் நிறைய காலடித் தடங்கள் இருந்தன. ஆனால் அவை முயல்களைத் தேடிப் போன அந்தப் படைவீரர்ளின் காலடித் தடங்கள்.. அடுத்த தெரு, வேட்டைக்காரர்கள் முயல்களைத் தேடிக் காட்டுக்குச் சென்ற பாதை. அதில் புற்கள் வளர்ந்து, பூக்கள் பூத்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு இலை கூட கடிக்கப்படாமல் இருந்தது. அதனால் முயல்கள் அங்கிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.
“எந்த வழியா நான் போகணும்?” என்று பெக்கி தனக்குள் கேட்டுக் கொண்ட அதே சமயம், ஏதோ தோட்டத்து வழியாக வீசிய காற்று அவள் மீது பட்டது. “எனக்கு முட்டைகோஸின் வாசனை அடிக்கிறது” என்று பெக்கி மகிழ்ச்சியாகக் கத்திக் கொண்டே மரங்களும், பூக்களும் நிறைந்து இருந்த வழியாகத் தொடர்ந்து ஓடினாள். ஒரு கிழவியின் முட்டைக்கோஸ் தோட்டத்துக்குச் செல்லும் வரை, அவள் ஓட்டம் நிற்கவில்லை. அங்கு வயிறு முட்ட முட்டைகோஸ் இலைகளைத் தின்றுவிட்டு, இளவரசனின் முயல்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றைப் பார்த்தவுடன் பெக்கி திரும்பி, வந்த வழியே வேகமாக வீட்டுக்கு ஓடினாள். அரண்மனைக்குச் சென்று செய்தியைச் சொன்னவுடன் அங்கிருந்த எல்லாரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
“நீ எது கேட்டாலும் நான் தருவேன், என்னுடைய தலையில் இருக்கும் கிரீடத்தைக் கேட்டாலும் தருவேன்” என்று இளவரசன் சொன்னான். அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அவளைச் சுற்றிச் சமூகத்தின் மேல்தட்டு ஆண்களும், பெண்களும் குழுமி இருந்தார்கள்,
“ஒரு வண்டியும் குதிரைகளையும் கேள்” என்று ஒருவர் இரகசியமாக அவளிடம் சொன்னார். “ஒரு பை நிறைய தங்கம் கேள்” என்றார் இன்னொருவர்..
“ஒரு வீடும், நிலமும் கேள்” என்றார் மூன்றாமவர். இளவரசரிடம் என்ன கேட்க வேண்டும் என்பதில் அவளுக்கு உதவ வேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் மற்றவர்கள் உதவியின்றி, இளவரசரிடம் என்ன கேட்க வேண்டும் என்று பெக்கிக்குத் தெரிந்திருந்தது.
“மாட்சிமை பொருந்திய இளவரசரே! தயவு செய்து, நானே வைத்துக் கொள்ள எனக்கு ஒரு வெள்ளை முயல் தர முடியுமா?” என்று கேட்டாள் பெக்கி
நீங்கள் நம்புவீர்களா? இளவரசன் அவளுக்கு இரண்டு முயல்களைக் கொடுத்தான்!
ஆங்கில மூலம் –மாட் லிண்ட்சே (Maud Lindsay)
தமிழாக்கம்- ஞா.கலையரசி
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.