என்ன சுட்டீஸ்? எல்லாரும் எப்டி இருக்கீங்க? போன மூணு எபியும் படிச்சீங்களா? நோட்புக்ஸ் எல்லாம் காணாம போச்சே? அத யார் எடுக்கறாங்கன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா? 

ஸ்கூல்ல போலீஸ்காரங்கல்லாம் வந்து பாத்துட்டிருக்கும் போது என்ன நடந்துச்சு? இந்த எபிசோட்ல பாக்கலாமா? 

பள்ளியில் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அடுத்தடுத்து காணாமல் போனதால் பள்ளி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாட, காவலர்கள் மாறு வேடத்தில் பள்ளிக்கு வந்திருந்து இரண்டு நாட்கள் தீவிரமாகக் கண்காணித்தனர். அந்த இரண்டு நாட்களும் எந்தத் திருட்டும் நடக்காமல் இருந்தது. திருட்டு நடக்கவில்லையென்றால் திருடனை எப்படி பிடிப்பது? அதனால் மேலும் இரண்டு நாள் கண்காணிப்புப் பணியில் காவலர்கள் இருந்தனர். 

அப்போது பள்ளிகளுக்கிடையேயான சுழற்கோப்பைக்காக போட்டிகள் அந்தப் பள்ளியில் நடைபெற்றன. 

அதனால் அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுடன் மற்ற பள்ளி மாணவ மாணவிகளும் வந்திருந்தனர். பள்ளியில் அதிகமான கூட்டம். 

ஆனால் காவலர்கள் மிகக் குறைவான அளவினரே இருக்க, திருட்டு அழகாய் அரங்கேறியது. 

இம்முறை நோட்டுப்புத்தகங்களுடன் வாட்டர் பாட்டில்கள்,  தின்பண்டங்கள், மதிய உணவுகள், மற்றும் கிரிகெட்ட் மட்டைகள், பந்துகள் போன்ற பல விளையாட்டுக் கருவிகளும் கூட காணாமல் போயின. 

எல்லா பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியப் பெருமக்களும் பெற்றோர்களும் இந்தப் பள்ளியின் மேல் புகார் வாசித்தனர். 

காவல்துறைக்கு இது மிகப் பெரிய சவாலாக உருவாகியது. 

பள்ளியில் காணாமல் போன அத்தனை பொருட்களின் பட்டியலையும் தயார் செய்தபோது அவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. 

அதிர்ச்சியா? ஏன் என்று தோன்றுகிறதா? 

ஆமாம்! அதிர்ச்சியேதான்! ஏனெனில் நோட்டுப்புத்தகங்கள், தின்பண்டங்கள், மதிய உணவுகள், தண்ணீர் பாட்டில்கள், கிரிக்கெட் பேட்,  பால் போன்ற விலை குறைந்த அதிகம் செலவில்லாத பொருட்கள்தான் காணாமல் போயிருந்ததே தவிர, பணம், நகைகள் போல விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் காணாமல் போகவேயில்லை!

police
படம் : அப்புசிவா

 காவலர்களுக்கு இது அதிர்ச்சியாகவும் இருந்தது. அதே நேரத்தில் ஆச்சர்யமாகவும் இருந்தது. 

அப்படியென்றால் இதையெல்லாம் திருடுபவர்கள் பெரியவர்கள் அல்ல! குழந்தைகள்தான் என்று அவர்களுக்குப் புரிந்தது. 

ஏனெனில் பெரியவர்களுக்குதான் பணம் நகையெல்லாம் வேண்டும். குழந்தைகளுக்கு இதெல்லாம் எதற்கு? அவர்களுக்குதான் இதெல்லாம் இல்லாமலேயே மகிழ்ச்சியாக இருக்கத் தெரியுமே!? 

காவலர்கள் இப்போது கொஞ்சம் நிம்மதியாகவே உணர்ந்தார்கள். 

“அப்ப குழந்தைங்கதான் உங்க ஸ்கூல்ல இது மாதிரி பொருட்களை எடுக்கறது.. நாம கொஞ்சம் கவனமா இருந்தா அந்த பசங்க யார்ன்னு கண்டு பிடிச்சிடலாம்!” என்று பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மியிடம் சொன்னார் காவல்துறை உயரதிகாரி. 

“எப்டியாவது கண்டுபிடிங்க சார்! இல்லன்னா எங்க ஸ்கூல் மானமே போய்டும்!” என்று அழாத குறையாகக் கூறினார் ஜெயலக்ஷ்மி. 

மறுநாள் பள்ளியில் எல்லாரும் கூடியிருக்க, வழக்கம் போல பள்ளியில் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. 

இன்றும் பல பேருடைய மதியஉணவுகள் திருட்டுப் போயின. ஆனால் இன்று திருடப்பட்ட எல்லாம் மாணவர்களுடையது அல்ல! ஆசிரியர்களுடைய பொருட்கள்! 

‘இதென்னடா வம்பாப் போச்சு?!’ என்று காவலர்களும் ஆசிரியர்களும் தலையில் கை வைத்துக் கொண்டனர். 

அதற்கு மறுநாள் இன்னும் மோசம்! 

காவலர்களுடைய மதிய உணவுகளும் காணாமல் போய்விட்டன! 

“போச்சுடா! கடைசில அந்த திருடங்க போலீஸ்காரங்களோட லஞ்ச் பாக்ஸையே ஆட்டையப் போட்டானுங்களா?!” என்று மாணவர்களும் ஆசிரியர்களும் கேலி பேசிக் கொண்டனர். 

இப்படி நாளுக்கு நாள் திருட்டு நடந்து கொண்டே இருந்தது. ஆனால் அது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. இது எப்படி சாத்தியம்? 

அடுத்த எபில பாக்கலாமா? 

அதுவரைக்கும் சமத்தா இருக்கணும் சுட்டீஸ்! சரியா!? 

பை! பை! டாட்டா! 

👋👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments