தன்னைக் கண்டு கொஞ்சம் கூட அச்சமில்லாமல் நிற்பது மட்டுமல்லாமல் கை கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்த துருவனை எரிச்சலுடன் பார்த்தான் மாயாவி. அவனது முகம் சினம் கொண்டு சிவந்து போயிருந்தது. விழிகளில் கோபத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

” சிறுவனே, கூண்டில் சிறைப்பட்ட பின்னர் கூட உனது கொட்டம் அடங்கவில்லையா? என் முன்னே நிற்பதற்கே நடுங்கும் சிறுவர்களின் மத்தியில் என்னைக் கண்டு அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் உனது துணிவைப் பாராட்டத் தான் வேண்டும். உனக்கு அதீத பயத்தால் மூளை கலங்கி விட்டதோ? உனது அறிவில்லாத செயலால் உனக்கு மட்டுமல்லாமல் உன்னைச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களுக்கும் சேர்த்து அபாயங்களை வரவழைத்து விட்டாய்! அந்தக் குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் இருக்கிறாய்?” என்று மாயாவி உறுமினான்.

malaikottai

” நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று தான் நினைத்து நாங்கள் இங்கு வந்தோம்.‌ எனது நண்பர்களும் எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னுடைய முயற்சியைத்  திருவினை ஆக்குவதற்காக எனக்கு உதவ வேண்டுமென்றே வந்தார்கள். தவறே செய்யாதவர்களுக்கு நீ தண்டனை ‌கொடுக்க எவ்வளவு  முயன்றாலும, அது தோல்வியில் தான் முடியும். நீ, இன்று எங்கள் முன்னால் தோற்று ஓடத் தான் போகிறாய்” என்று துருவன் வீரத்துடன் முழங்கினான்.

” சிறுவா, எனது பொறுமை எல்லை மீறி விட்டது. நீ திருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டால், உனக்கும் உனது நண்பர்களுக்கும் போனால் போகிறதென்று உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். உனது நண்பர்களையும் உன்னையும் விடுதலை செய்து இந்த மலைக்கோட்டையிலேயே என்னுடைய பணியாட்களாக நியமிக்கிறேன். என்ன சொல்கிறாய்?” என்றான்.

” தயை கூர்ந்து மாயாவி சொல்வதைக் கேட்டு உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இவர் சர்வ வல்லமை பொருந்தியவர். உங்கள் அனைவரையும் மன்னிக்க அவர் முன்வந்ததே பெரிய செயல். நீங்கள் அனைவரும் தண்டனை பெற்று உயிரிழப்பதை என்னால் காண இயலாது” என்று இளவரசி ஐயையும் கண்ணீர் மல்க துருவனிடம் வேண்டினாள். துருவன் மறுத்து விட்டான்.

கோபத்துடன் மாயாவி தனது வீரர்களைப் பார்த்துக் கையசைத்தான். அந்தக் கூண்டு அப்படியே நகர்ந்து வந்தது. ஒரு பெரிய குழியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கூண்டு தீக்குழிக்கு அருகில் வந்ததும் பயங்கர வெம்மை துருவனையும் அவனுடைய நண்பர்களையும் சுட்டெரிக்க ‌ஆரம்பித்தது. இளவரசி ஐயை, தனது கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அவர்கள் அனைவரும் தீக்குழிக்குள் விழுவதைக் காண இளவரசி விரும்பவில்லை.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அந்தத் தருணத்தில் அபூர்வனுக்கு அவனுடைய மந்திர சக்திகள் திரும்பவும் கிடைத்தன. அவற்றைச் செயல்படுத்த அவன் சொல்ல வேண்டிய மந்திரங்களும் அவனுக்கு நினைவுக்கு வந்து விட்டன. தனது தாய், தந்தையை மனதில் வேண்டிக் கொண்டு கையை நீட்டினான்.‌ அவன் கையில் ஒரு மந்திரக்கோல் வந்தடைந்தது.

அந்த மந்திரக்கோலால் அபூர்வன் அந்த இரும்புக் கூண்டின் கம்பிகளைத் தொட்டான். அவை அனைத்துமே பட்பட்டென்று தெறித்து விழுந்தன. துருவனும் நண்பர்களும் மலர்ந்த முகங்களுடன் கூண்டை விட்டு வெளியே வந்தார்கள். திகைத்துப் போய் நின்ற மாயாவி, ஒரு நொடியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கையில் நீண்ட வாளுடன் துருவன் மேல் பாய்ந்தான். துருவன் தனது கழுத்தில் இருந்த மணியை வருடியதும் அவனைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் உருவாகி விட, மாயாவியால் அதற்குள் நுழைய முடியவில்லை.

அதற்குள் அபூர்வன் பறந்து பறந்து மற்ற காவலாளிகளைத் தாக்க ஆரம்பித்தான். அணில், பெரிதாகித் தனது பிரம்மாண்ட உருவத்தை எடுத்து அதுவும் காவலாளிகளைத் தாக்கியது. சரியாக அதே சமயத்தில் நாக தேசத்து நாகங்களும் மாளிகையின் உள்ளே நுழைந்து அவர்களுடைய உதவிக்கு வந்து விட்டன.

மயிலும், கிளியும் சென்று இளவரசியின் அருகே நின்று கொண்டன. அருகே தாக்க வரும் எதிரிகளைப் பார்த்துப் பார்த்து துருவன், அபூர்வன், அணில் மூவருக்கும் எச்சரிக்கை தந்தன. அணில் அந்தக் காவலாளிகளை விரட்டி விரட்டித் தீக்குழிக்குள் தள்ளின. அவர்கள் எரிந்து போவதை துருவன் விரும்பாததால், அபூர்வன் தனது மந்திர சக்தியால் அந்தத் தீக்குழியைத் தண்ணீர்க் குளமாக மாற்றி விட,  வீரர்கள் உயிர் பிழைத்தனர். குழியை விட்டு வெளியே வர முடியாமல் தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.

துருவன் மற்றும் அவனுடைய நண்பர்கள், மாயாவியின் வீரர்கள் மீது கூடக் கருணை காட்டினார்கள். அபூர்வன், தனது மந்திரக் கோலைச் சுழற்றி, அங்கிருந்த வீரர்களை எலிகளாக மாற்ற, அந்த எலிகளை நாகங்கள் வாயால் கவ்விக் கொண்டு சென்று கோட்டைக்கு வெளியே வனத்துக்குள் விட்டுவிட்டு வந்தன.

மாயாவியின் வீரர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. துருவனின் படையின் கை ஓங்கிவிட்டது. மாயாவி பயங்கரக் கோபத்துடன் துருவனின் எதிரே தனியாளாக நின்றான். அவனைத் தவிர அவனுடைய வீரர்கள் யாருக்கும் மந்திரசக்தி இல்லாததால் அபூர்வனிடமும், நாகங்களிடமும் நன்றாக மாட்டிக் கொண்டார்கள்.

இப்போது அபூர்வனும், அணிலும் வந்து துருவனின் அருகே நின்று கொண்டார்கள். நாகங்கள் சென்று தங்கள் இளவரசரை விடுவித்ததோடு, கூண்டுகளில் மாயாவியால் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு தேசத்து இளவரசர், இளவரசிகளையும் விடுவித்தன. அணிலின் உதவியுடன் அவர்கள் அனைவரும் கோட்டைக்கு வெளியே கொண்டு விடப்பட்டனர்.

துருவன் மீது ஏவி விட்ட மந்திரசக்திகள் எதுவுமே பலிக்காமல், அவனுடைய பாதுகாப்பு வளையத்தில் மோதித் திரும்பி வர, மாயாவியோ கோபத்துடன் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது கிடைத்த அந்தச் சிறிய இடைவெளியில் துருவன், அபூர்வனை அழைத்துச் சில வேலைகளை

உடனடியாகச் செய்யச் சொன்னான்.

விடுதலை செய்யப்பட்ட அனைவரையும் நாகங்கள் மற்றும் அணிலின் உதவியுடன் மலைக்குக் கீழே கொண்டு போய் விட்டு விட்டு வரச் சொன்னான். வழியில் பூதங்கள் தாக்காமல் இருக்கத் தன்னிடம் இருக்கும் சில வேர்களைக் கொடுத்தான்.

” நாம் மேலே வரும்போது நம்மை அழைத்து வந்தானே, அந்தக் காவலாளியைத் தேடிக் கண்டுபிடித்து அவனை உடன் அழைத்துச் செல்லுங்கள் அவனிடமிருக்கும் மணியும் அந்த பூதங்களை ஒன்றும் செய்ய விடாமல் தடுத்துவிடும். அதைத் தவிர உனக்கும் தான் இப்போது மந்திர சக்திகள் திரும்பக் கிடைத்து விட்டனவே? அவற்றை வைத்தும் நீ சமாளித்துக் கொள்ளலாம். மலையின் கீழே அடிவாரத்தில் இருக்கும் காவலாளிகளையும் செயலிழக்கச் செய்து விட்டு இவர்கள் அனைவரையும் பத்திரமாக அனுப்பி விட்டு நீயும் அணில் அண்ணாவும் திரும்பி வாருங்கள். அதுவரை நான் இங்கு சமாளிக்கிறேன்” என்று சொல்லி அவர்களைப் பொறுப்பாக அனுப்பி வைத்து விட்டு மீண்டும் மாயாவியைத் துணிச்சலோடு எதிர்கொண்டான்.

” சிறுவா, ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் ஒளிந்து கொண்டு கோழைத்தனமாகப் போர் புரிகிறாயே? துணிச்சல் இருந்தால் அதை விட்டு வெளியே வந்து என்னுடன் நேருக்கு நேர் மோதிப் பார்” என்று சவால் விட்டான்.

அதற்குள் நாக இளவரசனை நாகங்களுடன் பத்திரமாக மலை அடிவாரத்துக்கு அனுப்பி விட்டு, நாகங்களின் குருவான மலைப்பாம்பும் அங்கு வந்துவிட்டது. அந்த குரு மலைக்கோட்டை மாயாவியைப் பார்த்து அதிகக் கோபத்துடன் பேசியது.

” யாரைப் பார்த்து நீ கோழையென்று சொல்கிறாய்? சிறுவனாக இருந்தாலும் மனதில் கொஞ்சம் கூட பயமில்லாமல் உன்னை உனது கோட்டையிலேயே வந்து எதிர்க்கிறான். நீ தான் மோசமானவன். சிறு  குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரித்து, சிறை வைத்த கொடியவன் நீ. தனக்கு சம்பந்தமில்லாதவர்களையும் காப்பாற்ற வந்திருக்கும் இந்தச் சிறுவன் உன்னை விட எவ்வளவோ உயர்ந்தவன்” என்று சீறினார்.

” பரவாயில்லை குருவே! மாயாவி சொல்வது போல இந்தப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து அவரை எதிர்கொள்ள நான் சம்மதம் தெரிவிக்கிறேன். எந்த உதவியும் இல்லாமல் எனக்குத் தெரிந்த கலைகளை வைத்து அவருடன் போர் புரிகிறேன்” என்று துருவன் சொல்லி விட்டான்.

” பார்த்தாயா மாயாவி! உன்னை விட உடல் வலிமை குறைந்தவன். உன்னை விட வயதில் சிறியவன். உன்னளவு அனுபவமும் இல்லை இவனுக்கு. இருந்தாலும் நேர்மையான முறையில் ‌உன்னுடன் போர் புரிய முன் வந்திருக்கிறான். இது சம வலிமை உள்ளவர்களுக்கு நடுவிலான போட்டி இல்லை. வேங்கைக்கும் மானுக்குமான போட்டி. இருந்தாலும் துருவனே சம்மதம் தெரிவித்து முன் வந்திருப்பதால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஆனால் நீயும் நேர்மையான முறையில் அவனுடன் போர் புரிய வேண்டும். ஏமாற்ற நினைப்பதோ, தகாத முறைகளைக் கையாள்வதோ கூடாது. நான் இந்த யுத்தத்திற்கு நடுவராக நின்று பார்க்கிறேன். நீ ஏதாவது தவறு செய்தால் உனக்கு தண்டனை கொடுக்க நானும் இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன். அதை மறந்து விடாதே” என்று சொல்லி விட்டு, அவர்கள் இருவரையும் மோத விட்டு விட்டு ஓரமாக ஒதுங்கி நின்று அவர்களுடைய மோதலைப் பார்க்க ஆரம்பித்தார்.

மாயாவி அகங்காரச் சிரிப்புடன் துருவனைப் பார்த்தான். துருவன் தனது குருவை மனதில் வேண்டிக் கொண்டு கழுத்தில் அணிந்திருந்த பாதுகாப்பு மணியைக் கழற்றி மலைப்பாம்பிடம் கொடுத்தான். அவனைச் சுற்றியிருந்த பாதுகாப்பு வளையம் அகன்றது.

முதலில் வாட்சண்டை. மாயாவி வலுவானவனாக இருந்தாலும், துருவனின் துடிப்பும் சுறுசுறுப்பும் கலந்த தாக்குதலுக்கு எதிரே அவனால் அதிகநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அடுத்து வில்லில் அம்பை நாணேற்றி ஒருவரை நோக்கி ஒருவர் எய்தார்கள். மாயாவியின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளைத் தனது அம்புகளால் தடுத்த துருவன், அதிவிரைவாக செயல்பட்டுத் தனது அம்புகளை மாயாவியின் மீது ஏவினான். துருவனுடைய சரமாரியான அம்புத் தாக்குதலில் மாயாவி திணறிப் போனான்.

இரண்டு யுத்தங்களுமே வெற்றி, தோல்வியின்றி முடிந்தது. அடுத்த போட்டி மாயாஜால வித்தைகளை வைத்து மோத ஆரம்பித்தார்கள். இதன் முடிவில் நிச்சயமாக வெற்றியாளர் யாரென்று தெரிந்து விடும். நாக குரு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments