– ஹரிவர்சினி

2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள்.

அந்தக் காடு ஒரு வித்தியாசமான காடு. அந்தக் காட்டு ராஜா சிங்கம் எப்பவுமே தூய்மையாய் இருக்கணும் என்பதை நினைத்துக் கொண்டே இருக்கும்.

 அதே மாதிரிதான் நடந்து கொண்டு இருக்கும். எல்லா விலங்குகளையும் தூய்மையாய் இருக்கச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்.

 சுத்தமாக  இருக்க   பல திட்டங்களையும் செய்யும். எப்பவும் இடத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, தங்களையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, காட்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேணும் எனச் சொல்லிகிட்டே இருக்கும்.

 ஒவ்வொரு சமயமும் விலங்குகள் எப்படி  சுத்தமாக  இருக்குன்னு சுற்றிப்பார்க்க சிங்கம்  போகும்.

சிங்கம்  வருவதற்குள் விலங்குகள் அந்த இடத்தைச் சுத்தம் பண்ணி வச்சிடுங்க.

 என்னிக்குமே விலங்குகள் உடலில் சேறு சகதி இருக்கவே கூடாது என்பதில் சிங்கம் கவனமா  இருக்கும்.

 “எங்கெல்லாம் குப்பைகள்  இருக்கோ அங்கெல்லாம்  கொசுக்கள் வரும். அதனால குப்பைகள் இருக்கவே கூடாது” அப்படின்னு சொல்லிட்டே இருக்கும்.

சிங்கமும்  தன்னுடைய இடத்தையும் சுத்தமாக  வச்சிக்கும்.  தன்னோட இடத்தை ஒவ்வொரு  விலங்கும்  சுத்தமாக  வச்சிட்டதால்   காடு தானாகவே சுத்தமாயிற்று. ஆனா ரெண்டு முயல்கள் மட்டும் அந்தக் காட்டுக்குள்ள குளிக்கிறதே இல்ல.

 முயல்களுக்குக் குளிக்கிறதுன்னா ரொம்ப பயம். ஏதாச்சு விலங்கு காலைல  ஓடையில் போய் குளிக்கலாம் எனக் கூப்பிட்டால் ஆத்துக்குப் போய் குளிக்கிறோம் எனச் சொல்லும்.

ஆத்துகிட்ட  இருக்கிற விலங்குகள் குளிக்க கூப்பிட்டால் ஓடைக்குப் போய் குளிக்கறோம்  எனச் சொல்லும்.

எதாவது  சொல்லி  அந்த இடத்தில் இருந்து தப்பிச்சு ஓடிக்கொண்டே இருக்கும். முயல்கள் குறித்து யாருமே கவனித்ததில்லை.

ஆனால் அதுங்க கிட்ட எப்பவுமே ஒரு நல்ல வாசனை வந்துகிட்டே இருக்கும். அதுக்குக் காரணம்  அந்தக் காட்டுக்குள்ள ஒரு இடத்தில ரெண்டு மூணு எலுமிச்சம் பழச் செடிகள் முளைச்சு இருந்துச்சு.

  அந்த எலுமிச்சம் பழ இலைகளை இந்த முயல்கள் தன்னோட உடம்பு முழுவதும் தேய்த்துக் கொள்ளும். அதனால் அதைச் சுத்தி எப்பவுமே வாசனை இருந்துகிட்டே இருக்கும். அதனால இதுக ரெண்டும் குளிக்கவே குளிக்காது.

  ஆனா தினமும் இரண்டு  முயல்களும்  சிங்கத்தைப் போய் தவறாமல் பார்க்குங்க. தான் தவறு செஞ்சிருக்கோம் அப்படிங்கறத மறைக்கிறதுக்கு ஏதாவது ஒரு பொருளைத் தினமும் பரிசாகக் கொடுத்து சிங்கத்துகிட்ட நல்ல நட்பாகவும் இருந்துச்சுங்க.

 முயல்கள் மேல எந்த ஒரு குத்தமும் இல்லாத மாதிரி எல்லா விலங்குகிட்டேயும்   நடந்துகுச்சுங்க.  அப்போ ஒரு சமயம் இந்த முயல்கள் எலுமிச்சம் பழச் செடிகள் பக்கத்துல இருந்து அந்த எலுமிச்சம் பழ இலையை எடுத்து தேச்சுகிட்டு இருந்ததைப் புலி பார்த்துருச்சு.

 அந்தப் புலிக்குக் கோபம் தாங்கவே முடியல. “காட்டுக்குள்ள இருக்கக்கூடிய அனைத்து விலங்குகளும் குளிச்சுட்டு வரும்போது இந்த முயல்கள் மட்டும் குளிக்காமல் இத்தனை நாள் எல்லாத்தையும் ஏமாற்றி இருக்குதே!”

 “இதை எப்படி ஆச்சும் சிங்கராஜாகிட்ட  சொல்லணும்” அப்படின்னு சொல்லி திரும்பும்போது முயல்களும் பார்த்துருச்சு.

 உடனே முயல்களைப் பார்த்து “என்ன பண்ணிட்டு இருக்கீங்க? குளிக்காமல் எலுமிச்சம் பழ  இலையை எடுத்து தேச்சு குளிச்ச மாதிரி நடிச்சுட்டு இருக்கீங்களா?”

 “இதோ நான் இப்பவே போய் சிங்கராஜா கிட்ட சொல்றேன்” அப்படின்னு புலி சொல்லிட்டு  போச்சு.

உடனே இந்த முயல்கள் புலியின் காலைப் புடிச்சிட்டு “புலியாரே! புலியாரே! தயவுசெய்து சொல்லிறாதீங்க!”

 “இன்னையிலிருந்து கண்டிப்பாக குளிப்போம்” என்று சொல்லின.

  “இல்ல கண்டிப்பாக சொல்லியே ஆவேன்” அப்டின்னு சொல்லிட்டு புலி போச்சு.

 இந்த முயல்கள் “இன்னைக்கு எப்படி நம்ம போய் ராஜாவ பாக்குறது?” அப்படின்னு சொல்லி ஒரு இடத்தில் சும்மா உட்கார்ந்தன.

 மற்ற விலங்குகளிடம் பேசிக் கொண்டே போனதால்  முயல்கள் விஷயத்தை புலி முற்றிலும் மறந்தே போச்சு. சிங்கத்திடம் பேச வேண்டிய காட்டு விசயங்கள் மட்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தது.

 குகைக்குள்ள  சிங்கம் தூங்கிட்டு   இருப்பதாக நரி சொல்லுச்சு. “குகைக்குள் போய் சிங்கத்தைத்  தொந்தரவு பண்ணக் கூடாது. சிங்கம் எந்திரிச்சு வெளியே வர வரைக்கும் பொறுமையா இருக்கணும்” என்று நினைச்சுச்சு.

 ஆனால் குகைக்கு முன்னாடி  எந்த ஒரு மரமும் கிடையாது. அதனால கொஞ்சம் தூரம் நடந்து வந்து பார்க்கும் போது எலுமிச்சை பழ மரத்துக்குப் பக்கத்துல நல்ல நிழல் இருந்துச்சு.

 அதனால இங்கேயே படுத்துக்கொள்ளலாம் என்று படுத்துகிச்சு புலி.

 முயல்கள் இதையெல்லாம்  அங்கிருந்து பார்த்துக்கிட்டு இருந்தன. “இந்தப் புலிக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்கணும்”

 “அதோட வேலையை அது பாத்துக்க வேண்டியது தானே! இப்ப போய் நம்மைப் போட்டுக் கொடுக்கிறதுக்கு என்ன இருக்கு?”

 “மத்த விலங்குகளைக் குறை சொல்லி நல்ல பெயர் வாங்குவதற்காக புலி நம்மளை எப்படியாச்சும் மாட்டிவிட நினைக்குது”

“ஆனால் நம்ம இதை எப்படி ஆச்சு மாட்டி விடணும்” அப்படின்னு சொல்லி முயல்கள் அங்கும் இங்கும் தாவி கொண்டிருந்தன.

  எலுமிச்சம் பழச்செடி பக்கத்துல ஒரு திராட்சைக் கொடி இருந்துச்சு. அப்ப உடனே முயலுக்கு ஒரு யோசனை வந்தது.

 அந்தத் திராட்சைக் கொடியில் இருந்து திராட்சையை எடுத்துச்சு. இன்னும் ரெண்டு மூணு இலையோட சாரையும் சேர்த்து ஒருவிதமான வண்ணப்பூச்சு செஞ்சு  புலியோட மூஞ்சியில் பூசுடுச்சு.

animals
படம் : அப்புசிவா

  புலியோட முகத்துல மயிலிறகு வச்சு வண்ணங்கள் பூசி விட்டுச்சு.    புலியோட முகம் முழுவதும் வண்ணக் கலவை இருந்துச்சு.

  சிங்கம் வெளிவரும் சத்தம் கேட்டு உடனே புலி எழுந்து போச்சு. அந்த வழியா போகும்போது முயல்களைப்  பார்த்துச்சு  புலி.அப்போ தான் புலிக்கு முயல்கள் பத்தி ஞாபகம் வந்துச்சு.

    அங்கிருந்த மயில் புலியைப் பார்த்து பயந்தது. இப்படியேச சிங்கத்திடம் போனா கண்டிப்பாக சிங்கராஜா புலியைத்திட்டுவார் என நினைச்சுச்சு.  புலிகிட்ட  போய்  “தயவுசெய்து சிங்கத்துகிட்ட போகாதீங்க!” எனச் சொல்லுச்சு.

  “இந்த முயல்கள் என்ன பண்ணுதுன்னு? நான் சொல்லியே ஆகணும்” அப்படின்னு சொல்லி வேக வேகமாக சென்றது புலி.

 “இந்த முயல்கள் என்ன பண்ணுனா நமக்கென்ன? நம்ம தடுக்கிறது  புலியைத்  தானே! முயல்கள் பத்தி ஏதோ பேசிட்டு போறாங்க” எனச் சந்தேகப்பட்டது மயில்.

மானும்  புலியைத்   தடுத்தது.  மான்கிட்டேயும் முயல்கள் பண்றது  கண்டிப்பா சொல்லியே ஆகணும் அப்படின்னு சொல்லுச்சு. மானுக்கும் முயல்கள் அப்படி என்ன தான் பண்ணின எனச் சந்தேகம் வந்தது.

 புலி போய் சிங்கத்துகிட்ட முயல்கள் பத்தி சொல்லியது. ஆனால்  சிங்கத்துக்கோ புலி மீது ரொம்ப கோவம் வந்துருச்சு.

 “என்ன புலியாரே! நீங்க  இவ்ளோ அசிங்கமா வந்து இருக்கீங்க? தூங்கி  எழுந்ததும்  முகம் கழுவிட்டு வரலாம் என்று தெரியாதா?”

 “எந்திரிச்சு உடனே  வந்துட்டீங்களா?  மத்தவங்கள பத்தி சொல்றதுக்கு முன்னாடி  உங்கள நினைச்சு பாருங்க!” என்று சொல்லி திட்ட ஆரம்பிச்சிருச்சு.

 அப்ப புலிக்கு  வேதனையா போச்சு. “என்ன நடந்தது?  முயல்கள் பண்றத  சொன்னா  சிங்கம் நம்பவே இல்லையே!”

  “முயல்கள் அப்படி பண்ணி இருக்காது. அவை வெகுளி, சூதுவாது தெரியாத உயிரினங்கள் என முயலுக்கு ஆதரவா பேசுதே!” என்று புலி வேதனை அடைந்தது.

  புலிக்கு எதுக்காக சிங்கம்  தன்னைத் திட்டியது  என்று  புரியாமல் நடந்து வந்துட்டு இருந்த போது பக்கத்தில் ஓடையில் தண்ணீர் குடிக்கப் போச்சு.

அப்ப  அந்தத்  தண்ணீரில்  பார்க்கும்போது முகம் முழுவதும் வண்ண வண்ண கோடுகளாக இருந்தது. இது கண்டிப்பா அந்த   முயல்களோட  வேலைன்னு  நினைச்சுச்சு. என்னைக்காவது  ஒரு நாள் இது சிங்கத்துக்குத் தெரிய வரும் என நினைத்தது.  வருத்தத்தோட  தன்னோட குகைக்குப் போச்சு.

 ஒரு முயல் மட்டும்  “எப்படியாவது புலியைக் காட்டை விட்டு விரட்டணும்,  காட்டுக்குள்ள வரவே விடக் கூடாது” அப்படின்னு நினைச்சிட்டு தினமும் சிங்கத்துகிட்ட போய் புலியைப் பத்தி சொல்லிக்கிட்டே இருந்தது.

 மயிலுக்கும் மானுக்கும்  நடந்ததை எல்லாம் பார்க்க சந்தேகம் வந்துச்சு.  உடனே மயிலும் மானும் , முயல்கள் இருக்கிற இடத்துக்குப் போய்   முயல்கள் என்ன பண்ணுது எனப் பார்த்தன.முயல்கள் தான் தப்பு பண்ணுதுக எனப் புரிந்தது.

  ஒரு நாள்  ரெண்டு  முயல்களில்  ஒரு முயலுக்குச் சந்தேகம் வந்துருச்சு. “ புலியைக்  காட்டுக்குள்ள வர விடாம எதுக்குப்  பண்ணனும்? தப்பு பண்ணுனது  நாம தானே!” என்று யோசிக்க ஆரம்பித்தது.

நேரடியாக அடுத்த  முயலிடம் கேட்டது.

“ நீ! இந்தக் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவன்.  அதனால உனக்கு அந்தப் புலி நல்லதா தெரியுது. நான்  பக்கத்துக் காட்டிலில் இருந்தவன்”

 “நான்,  என் குடும்பத்தோட ரொம்ப சந்தோசமா இருந்தேன். எனக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி என எல்லாருமே இருந்தாங்க. நாங்க எங்க வளையில் ரொம்ப பாதுகாப்பா சந்தோசமா இருந்தோம்”

 “ஒரு சமயம் இந்தப் புலி தான் அங்க வந்துச்சு.  எங்க குடும்பத்துல இருக்கக்கூடிய எல்லோரையும் கொன்னுருச்சு.  நான் மட்டும் வந்தது தப்புச்சோம் பொழச்சோம் என அந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்கு வந்து விட்டேன்”

 “அந்தப் புலி இங்க  இருந்தா கண்டிப்பா நம்மளை மாதிரி விலங்குகளை நிம்மதியா வாழ விடாது. அதனால தான் நான் இந்தக் காட்டுக்குள்ள வந்ததிலிருந்து  தினமும் சிங்க ராஜாவைச் சந்தித்து நல்ல பெயர் வாங்கிட்டு இருந்தேன்”

“ புலியைப் பத்தி எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்  என நினைச்சிட்டே இருந்தேன். புலியே அதற்கு வழி செஞ்சிருச்சு!” என மிகவும் சோகமாவும் வெறுப்பாவும் பேசிட்டு இருந்துச்சு  புதிய முயல்.

புதிய முயலின் கதையைக் கேட்ட பழைய முயலுக்குப்  பாவமா இருந்துச்சு. தானும் இந்த முயலுக்கு உதவ வேண்டும் என முடிவு செய்தது.

  “புதிய முயல் சொல்வதும் சரிதான். எப்படியாவது புலியைக் காட்டை விட்டு அனுப்ப வேண்டும். அந்தப் புலி போனால்தான் நாம குளிக்காமல் தப்பிக்க முடியும்” என  குளிக்கிறதுக்குப் பயந்த பழைய முயல், புதிய முயலுக்கு  ஆதரவாக பேசியது.

“இந்தப் புலியைக் காட்டைவிட்டு அனுப்புறதுக்கு  என்ன பண்ணலாம்?” அப்படின்னு இரண்டு முயல்களும் ஒரு நாள் முழுக்க யோசிச்சுகிட்டே இருந்தன.

 அப்போ பழைய முயல்  ஒரு யோசனை சொல்லுச்சு.  இரண்டு முயல்களும் செயல்பட தொடங்கின.

முயல்கள், புலி பார்க்கும் போதெல்லாம் அதுகளோட இடத்தைக் குப்பைக் கூளங்களாக வச்சு இருக்கும்.

 ஒவ்வொரு நாளும் புலி போய் முயல்களைப் பத்தி சிங்கத்துகிட்ட சொல்லிகிட்டே  இருக்கும்.

 ஆனால் சிங்கம் நம்பறதுக்குள்ள  அடுத்து முயல்கள் போயி புலியைப் பத்தி சொல்லிக்கிட்டே இருந்தன. சிங்கத்திற்கு ஒரே குழப்பமா இருந்துச்சு. புலியும்  முயல்களும் இப்படி  ஒன்றை மாற்றி  ஒன்று  குறை கூறுவதைக் கேட்ட சிங்கத்துக்கு  என்னதான் நடக்குது? இதை நேரில் பார்த்தே ஆகணும் அப்படின்னு முடிவு பண்ணிச்சு.

   காட்டுக்கு வந்த புதிய முயலோட பழைய கதை எதுவுமே தெரியாத மயிலும் மானும் “தினமும் இந்த முயல்கள் ஏன் இப்படி புலிய தொந்தரவு செய்து கொண்டே இருக்கணும்?இதுக பண்றது தப்பு. புலி போய் சிங்கத்து கிட்ட சொன்னா நம்ப விடாமல் தடுக்குதுங்க”

 “இந்த முயல்கள் மேல தான் தப்பு. புலி மேல தப்பே இல்ல. அதனால புலிய நம்ம காப்பாத்தணும்” அப்படியே இந்த மயிலும் மானும் நினைச்சுக்கிட்டே அடிக்கடி பேசிக் கொண்டே இருக்கும்.

 திடீர்னு சிங்கம் அந்த  முயலோட இடத்துக்கும் புலியோட இடத்துக்கும் வருவதைப் பார்த்த மயில் ஓடிப்போய் மான்கிட்ட  “இந்த முயல்கள் தான் தப்பு பண்ணுதுகங்கற உண்மையைச் சிங்கத்துகிட்ட வெளிப்படுத்தியே ஆகணும்”

“இல்லைன்னா புலியை இந்தக் காட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவாங்க. பாவம் அந்தப் புலி” அப்படின்னு சொல்லி வருத்தப்பட்டன.

 உடனே இந்த மான், சிங்கம் வர வழியில எலுமிச்சை இலைகளை உடம்பு முழுக்கு தேச்சுட்டு இருந்துச்சு.

“என்ன நீ முட்டாள் தனமா பண்ணிட்டு இருக்கே?” அப்படின்னு கேட்டுச்சு சிங்கம்.

 “இது முயல்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த வழி.எப்ப எல்லாம் நமக்கு உடம்பு  முடியாம இருக்கோ அப்பல்லாம் குளிக்காம  இதைப் பயன்படுத்திக்கலாம்  என எனக்கு சொல்லிக்கொடுத்தன” அப்படின்னு  மான் சொன்னது.

 “புலி சொன்னதும் மான் சொன்னதும் ஒரே மாதிரி இருக்கே! இருந்தாலும் மறுபடியும் ஆராய்வோம்!” அப்படின்னு சொல்லி சிங்கம் போயிட்டு இருந்துச்சு.

 போற வழியில இதே மாதிரி மயிலும்  அந்த இலையை எடுத்து தேச்சிட்டு இருந்துச்சு.

 “சே! இது என்ன பழக்கம். இது யார் சொல்லி கொடுத்தா உனக்கு?” என ரொம்ப கோபமா கத்தியது சிங்கம்.

“முயல்கள் தான் அரசே சொல்லிக் கொடுத்தன.  பெரும்பாலும் முயல்கள் குளிக்கறதே இல்லை” என மயில் தனது பங்குக்கு சிங்கத்திடம்  முயல்களைப் பத்தி  சொன்னது.

அப்பவும் சிங்கத்துக்கும் முயல்கள் மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை. முதலில் முயல்கள் இருக்கிற இடத்துக்குப் போச்சு சிங்கம்.

சிங்கம் வருவதைத் தூரத்திலேயே பார்த்துவிட்ட முயல்கள் அவசர அவசரமாக ஓடையை நோக்கி ஓடின.

சிங்கம் வந்ததே தெரியாதது போல் ஓடையில் இருந்து ஈரத்தோட வந்து வெயில்ல நின்னு தங்களோட உடம்புல இருக்கிற ஈரத்தைக் காய வச்சன.

அப்புறம் அந்த எலுமிச்சை இலைகளை எடுத்து தேய்க்க ஆரம்பித்தன. அதுவரை பொறுமையாக பார்த்துட்டு இருந்த சிங்கத்துக்குக் கோபம் வந்துருச்சு.

“மயிலும் மானும் சொன்னது சரிதான்! நீங்கதான் குளிக்காம இந்த இலையை எடுத்து தடவறத பற்றி சொல்லிக் கொடுத்து இருக்கீங்க!” அப்படின்னு கோபமா கேட்டது சிங்கம்.

 “சிங்கராஜா! சிங்கராஜா! நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. நாங்க குளிச்சதுக்கு அப்புறம் தான் இந்த இலையை எடுத்து தேய்க்கிறோம்”

 “நாங்க குளிக்காம இந்த இலையை எடுத்து  தேய்த்தது  இல்லை” அப்படின்னு ரெண்டு முயல்களும் பொய்  சொல்லியது.

சிங்கத்துக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு. “எதுக்காக இந்த மயிலும் மானும் புலியும் முயல்களைப் பற்றி தவறாக சொல்லணும்?”

 “நாம கண்ணுல பார்த்தோமே! இதுக ரெண்டும் ஓடையில் போய் குளிச்சுட்டு வந்து உடம்ப காய வைத்து விட்டு அதுக்கு அப்புறம் தானே எலுமிச்சை இலைகளை எடுத்துத் தேச்சுதுங்க. எனக்கு இது ரொம்ப குழப்பமா இருக்கு. எதுக்கும் புலி இருக்கிற இடத்துக்குப் போய் பாக்கலாம்” என சிங்கம் புலியோட இடத்துக்குப் போச்சு.

புலியோட இடத்துக்குப் போனப்போ சிங்கத்துக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு.  புலியோட இடம் முழுவதும் குப்பை கூளமாக இருந்துச்சு. அங்கங்க கொசுக்கள் பறந்து கொண்டிருந்தன.

 புலியோட உடம்பு முழுவதும் ஒரு துர்நாற்றம் வீசியது. சிங்கம் உடனே எந்த விசாரணையும் விசாரிக்காம “புலியை முதல்ல காட்டைவிட்டு வெளியே அனுப்புங்கள்” அப்படின்னு கத்தியது.

 “நீ என் கண்ணு முன்னாடி நிக்காத! முதலில் இந்தக் காட்டை விட்டு வெளியே போ! அப்படின்னு சொல்லிட்டு சிங்கம் வேகமாக அந்த இடத்தைவிட்டு போனது.

புலிக்கு என்ன நடந்துச்சு? ஏது நடந்துச்சுன்னு? தெரியல.

  புலி அப்பதான் தூக்கத்திலிருந்து கண்ண முழிச்சு எந்திரிச்சுச்சு. “இது யார் செய்த வேலையா இருக்கும்? எதற்காக இப்படி செஞ்சு இருக்காங்க?” அப்படின்னு யோசிச்சு சிங்கத்துகிட்ட சொல்றதுக்கு முன்னாடியே சிங்கம் கோபமாக அந்த இடத்தைவிட்டு போச்சு.

   புலிக்கு வருத்தம் தாங்கவே முடியல. அதே இடத்தில ஒண்ணுமே புரியாம உட்கார்ந்துட்டு இருந்துச்சு. அப்ப அங்க மயிலும் மானும் வந்தன.

 “இந்த முயல்கள் தான் கண்டிப்பா இந்த வேலையை பண்ணியிருக்கணும். எதுக்காக இப்படி பண்ணுதுகன்னே தெரியல!”

 “உங்களை மட்டுமல்ல, உங்களுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்ச எங்களையும் சிங்கராஜா தவறாக புரிஞ்சிக்கிற மாதிரி பண்ணிருச்சுங்க!”

 “இதுக்கு என்னதான் பண்றது? எங்களுக்கு ஒண்ணுமே புரியலையே!” எனப் புலம்பிக் கொண்டே புலியோட இடத்தில் உட்கார்ந்து இருந்தன.

 அப்ப அந்த வழியா நரி ஒன்று ஓடிட்டு இருந்துச்சு. அப்ப இந்த மூன்றும் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து  அந்த இடத்துக்கு வந்துச்சு. நரி அன்னைக்கு முயல்கள் ரெண்டும் பேசுவதை ஒட்டுக் கேட்டு இருந்துச்சு. அந்த உண்மையைப் புலிகிட்ட சொல்லுச்சு.

  அப்போ புலி அந்த இடத்திலிருந்து பாஞ்சு முயல்கள் இருக்கிற இடத்துக்குப் போச்சு.

 “என்ன பண்ணுமோ? ஏது பண்ணுமோ?” அப்படிங்கிற பயத்துல மயிலும் மானும் நரியும் வேகமா புலி பின்னாடியே ஓடின.

 முயல்கள்  அதுகளோட  இடத்துல இல்ல.  “சிங்கத்துகிட்ட போய் நடந்தது எல்லாம் சொல்லணும்” என்று  புலி வேகமாக போச்சு.

 அப்போ முயல்கள் சிங்கத்துக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தன. சிங்கத்துகிட்ட நல்ல பேர் வாங்கிகிட்டு இருந்தன. புலி வருவதைப் பார்த்த உடனே சிங்கத்துக்கு  கோபம் பயங்கரமா வந்துருச்சு.

புதிதாக வந்த முயல் சிங்கத்துகிட்ட தன்னோட குடும்பத்துக்கு நடந்த கதை எல்லாம் சொல்லி முடித்து இருந்துச்சு.

 அந்தக் கோபம் வேற சிங்கத்துக்கு இருந்துச்சு. காட்ட சுத்தமா வச்சிக்கணும் சொன்னா புலி சுத்தமாக வைத்துக்கொள்ளாததற்கும்  கோபம் இருந்துச்சு.

  இந்தக் காட்டை விட்டு பக்கத்துக் காட்டுக்கு தன்னோட அனுமதி இல்லாமல்  போனதும்  சிங்கத்துக்குப்  புலி மேல ரொம்ப கோபமா வந்துச்சு.

 “இனிமேல் கண்ணு முன்னாடியே முழிக்காதே!” என சிங்கம்  கோபமாக கத்த ஆரம்பித்தது.

 புலி அப்போ ரொம்ப பணிவாக “சிங்கராஜா! காட்டிவிட்டுப் போகிறேன். எனக்கு வருத்தம் தான். ஆனா கண்டிப்பா நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் மறுபேச்சு பேசல. ஆனால் நடந்த உண்மையை உங்ககிட்ட நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும். சொல்லிட்டு நான் போறேன்” என்றது.

  சிங்கத்தோட கோவம் குறையவே இல்லை.அங்க  வந்த மயில், மான், நரி எல்லாமே புலிக்கு ஆதரவாக பேசின. அப்ப “சரி! என்னதான் சொல்லுறியோ சொல்லிட்டு போ!” அப்படின்னு  கோவமா சொன்னது சிங்கம்.

    “பக்கத்துக் காட்டுக்குள் உங்க அனுமதி இல்லாமல் போனது தவறு தான். அது நான் உங்ககிட்ட பலமுறை சொல்ல வந்தும் சொல்லாமல் போனதும் தவறு தான்”

 “அதற்காக  நான் இப்போ மன்னிப்பு கேட்டுக்குறேன்.  நான் நம்ம காட்டோட எல்லைப் பகுதியில் குப்பைகள் அதிகமாக இருக்கிறதா கேள்விப்பட்டேன்!”

 “பக்கத்துல இருக்கிற  காட்டுக்காரங்க இங்க குப்பைப் போடுவதாக நான் கேள்விப்பட்டேன். அங்க  போய் பார்த்துட்டு வரலாமுன்னு நான் முதல்ல நம்ம காட்டு எல்லைக்குப்  போனேன்”

“ அங்க ஒரு பெரிய மலை பாம்பு   போயிட்டு இருந்துச்சு. ஒரு  வளைக்குள்    இருந்து நிறைய முயல்களை  வெளியே  எடுத்துட்டு  இருந்துச்சு”

“அப்ப நான் அந்த மலைப்பாம்பைத் துரத்தி விட்டேன்.   அப்போ வெளியில் வந்த முயல்கள் என்னைப் பார்த்து பயந்து அங்கே இங்கே ஓட ஆரம்பிச்சிருச்சு.”

 “நான்தான் அந்த முயல்களைச் சாப்பிட்டதாக நெனச்சுக்கிட்டு இருந்தன. அப்போ  ரொம்ப குட்டி முயல்கள் நடக்கக் கூட முடியாமல் இருந்துச்சு.”

 “அந்த ரெண்டு முயல்கள நான் என்னோட வாயில எடுத்துட்டு வந்தேன். அதைப் பார்த்த விலங்குகள் நான் தான் முயல்களைக் கொன்னுட்டதா நினைத்தன”

  “என்னோட குகைக்குள்ள அந்த முயல்கள் பத்திரமாக வளர்ந்துட்டு தான் இருக்குது. நான் அந்த முயல்களைச் சாப்பிடவே இல்ல”

 “இதை நான் உங்ககிட்ட சொல்றதுக்குப் பலமுறை  முயற்சி செஞ்சும் என்னால சொல்ல முடியாமல் போனதற்கு நீங்க என்னை மன்னிச்சிடுங்க!” என்றது புலி.

  புலி சொன்னதையெல்லாம் கேட்டதும் சிங்கத்திற்குக் கோபம் குறைந்தது. புலியை உற்று பார்த்துக் கொண்டு இருந்தது.

 புதிய முயல் புலியிடம் சென்று மன்னிப்பு கேட்டது. புலியின் இடத்தை அசுத்தம் செய்ததும், புலிக்கு முகத்தில் கோடுகள் போட்டதும் தான்தான் என்று ஒப்புக்கொண்டு புலியிடம் மன்னிப்பு கேட்டது.

 மயிலிடமும் மானிடமும் சென்று சிங்கத்திடம் மாட்டிவிட்டதற்காக  மன்னிப்பு கேட்டது.

 இரண்டு  முயல்களும்  சிங்கத்திடம் வந்து நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்டன. 

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்த சிங்கம் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

 அனைத்து விலங்குகளும் சிங்கத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தன.

கொஞ்ச நேரம் கழிச்சு  “சரி! ….சரி! இப்ப என்ன? எல்லாம் முடிஞ்சு போச்சு. எல்லாத்துக்கு எல்லா உண்மை தெரிஞ்சிருச்சு.  எனக்கு காடு சுத்தமா இருக்கணும். காடு மட்டும் இல்ல உங்க மனசும் சுத்தமா இருக்கணும்!”

 “இந்த மாதிரி பொறாமையோ பழிவாங்குவதோ இனிமேல் யாருக்கும் இருக்கக்கூடாது. எல்லாமே வெளிப்படையாகவே உண்மையா இருக்கணும்!”

 “அதுதான் எனக்கு வேணும். வாங்க போய் அந்த ரெண்டு முயல்கள் எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்!” அப்படின்னு சிங்கம் கம்பீரமாக சொல்லிட்டுப் போச்சு.

  அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் பின் சென்றன. அன்றிலிருந்து அந்த காடு முழுவதும் சுத்தமாக இருந்தது. காடு மட்டுமல்ல அனைத்து  விலங்குகளின் உள்ளமும் சுத்தமாக இருந்தது.காடு முழுவதும் மகிழ்ச்சி பரவிக்கொண்டே இருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments