முன்பு ஒரு காலத்தில் ஒரு மாமரத்தில் இரண்டு சிறிய குருவிகள், ஒரு சிறிய கூட்டைக் கட்டின.
ஒரு குட்டிப்பையன் அதைப் பார்த்தான். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல், தனக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டான்.
அந்தக் கூடு வட்டமாகவும், மெத்தென்று மென்மையாகவும் இருந்தது. அந்தக் கூட்டைக் கட்டி முடித்தவுடன், அம்மாக் குருவி அதில் சில முட்டைகளை இட்டது. அவை மிகவும் அழகாய் இருந்தன!
அந்தப் பையன் மரத்திற்குள் கழுத்தை நீட்டிக் கூட்டிற்குச் சேதம் எதுவும் ஏற்படாதவாறு கவனமாகப் பார்த்தான்.
அம்மாக் குருவி அந்தக் கூட்டில் நாள் முழுவதும் அமர்ந்து அடைகாத்தது. முட்டைகளுக்குச் சூடு கொடுத்து, அம்மாக் குருவி அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது. அம்மாக் குருவி களைப்படைந்து சோர்ந்து போகும் சமயத்தில், அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்தது.
அந்தக் குட்டிப்பையன் அந்தக் குருவிகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த நீல நிற முட்டைகள் என்னவாகும் என அவனுக்கு வியப்பாக இருந்தது.
அதற்கடுத்த சில நாட்களும், அம்மாக் குருவி அந்தக் கூட்டிலேயே உட்கார்ந்திருந்தது. ஆனால் ஒரு நாள் காலையில், இனிமையான அதன் பாட்டைப் பாடிக்கொண்டு, அது பறந்து சென்றது. அப்பாக் குருவியும் அதனுடன் சேர்ந்து பாடியது. ஏனென்றால் அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்திருந்தது! அந்த அழகான நீல முட்டைகள் உடைந்திருந்தன. அவையிருந்த இடத்தில், பலவீனமான மிகச் சிறிய குருவிக் குஞ்சுகள் இருந்தன.
அந்தப் பையன் ஒன்று, இரண்டு, மூன்று எனக் குஞ்சுகளை எண்ணினான். மூன்று குருவிக் குஞ்சுகள், அந்தக் கூட்டில் இருந்தன.
அம்மா குருவியும், அப்பா குருவியும் ஓயாமல் ஓடி ஓடி, நாள் முழுதும் குஞ்சுகளுக்கு எதையோ கொண்டு வந்து ஊட்டிக்கொண்டிருந்தன.
ஒருவேளை இரவு சாப்பாட்டுக்கு அவைகளுக்கு ரொட்டி சாப்பிடப் பிடிக்கும் என்று அந்தப் பையன் தனக்குள் சொன்னபடி, சில ரொட்டித் துண்டுகளை அவற்றுக்கு வீசினான்.
அந்தக் குருவிக் குஞ்சுகள் சீக்கிரமாக வளர்ந்தன. அவை பறக்கத் தயாராவதற்கு முன்பே, அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் எப்படிச் சிறகை விரிப்பது, கால்களை எப்படி ஊன்றி நிற்பது என்று அவைகளுக்குச் செய்து காட்டின. அவை செய்து காட்டியது போலவே, அந்தக் குஞ்சுகளும் திருப்பிச் செய்தன.
அவை முயற்சி செய்ததைப் பார்த்த போது, அவனுக்கு வேடிக்கையாக இருந்ததோடு, சிரிப்பும் வந்தது. முதலில் மரத்திலிருந்து தரைக்கு மட்டுமே அவைகளால் பறக்க முடிந்தது. சீக்கிரமே அவற்றின் சிறகுகள் நன்கு வளர்ந்துவிட்டன. அதற்குப் பிறகு மரத்திலிருந்து வேலிக்குப் பறந்து சென்றன. பின்பு அங்கிருந்து வானத்தை நோக்கிப் பறந்தன.
அவை பறப்பதைப் பார்த்த குட்டிப் பையன், “அன்பான குட்டிக் குருவிகளே! குட்பை! குட்பை!” என்று கூவினான்.
(ஆங்கிலம் – Maud Lindsay)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.