என்ன சுட்டீஸ்? நிறைய பேருக்கு ஸ்கூல் திறந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்! எல்லாம் சமத்தா ஸ்கூல் போனீங்களா? ரொம்ப நாள் கழிச்சி உங்க ஸ்கூலுக்கு போனது எப்டி இருந்தது? டீச்சர்ஸ் எல்லாம் உங்கள எப்டி ரிசீவ் பண்ணினாங்க? ஃப்ரண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணீங்களா? வர்சுவல் க்ளாஸ்லேர்ந்து இப்ப உங்க ரியல் க்ளாஸ்ல போய் உங்க டெஸ்க்ல உக்காரும் போது செம்ம ஜாலியா இருந்ததா? எல்லாம் எங்களுக்கு சொல்லுங்க சுட்டீஸ்! கேக்கறதுக்கு ரொம்ப ஆவலா இருக்கோம்!
ஆனா இந்த நியூ நார்மலுக்கு நாம பழகிகிட்டாலும், ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க! சோசியல் டிஸ்டன்சிங், ஹேன்ட் சேனிடைசர், ஃபேஸ் மாஸ்க், ஹேன்ட் கிளவுஸ் இதெல்லாம் மறந்துடவே கூடாது! சரியா?
சரி! இப்ப நம்ம கதையோட அடுத்த பாகத்துக்கு போகலாமா?
பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உணவு மட்டுமல்லாது காவல் காக்க வந்த போலீஸ்காரர்களின் மதிய உணவும் திருட்டு போய்விட, இந்த விஷயம் மிகப் பெரிய பிரச்சனையாக பேசப்பட்டது.
பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர் பிரபல பத்திரிகைகளிலும் பிரபல செய்தி சேனல்களிலும் பணியில் இருந்ததால் இந்த விஷயம் டீவி வரை சென்றது.
சென்னையில் பிரபல தனியார் பள்ளியில்
உணவுத் திருட்டு!
திருடனைப் பிடிக்க முடியாமல் காவல்துறையே திக்குமுக்காடுகிறது!
என்றெல்லாம் பிரேக்கிங் நியூஸ் போட்டு தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன.
இந்த உணவுத் திருட்டைத் தடுக்க காவல்துறை தனிப்படை அமைத்து பள்ளியில் சிறப்புக் காவலர்களை நியமித்தது.
“என்னடா நம்ம ஸ்கூலுக்கு வந்த சோதனை?” என்று தலைமை ஆசிரியர் ஜெயலக்ஷ்மி மிகவும் வேதனைப் பட்டார்.
காவல்துறை ஒரு பக்கம் இந்தத் திருட்டைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்ய, ஆசிரியர்கள் ஒரு பக்கம் தங்களால் முடிந்ததைச் செய்து திருட்டைத் தடுக்க முயன்றனர்.
ஒவ்வொருவரின் உணவுப் பாத்திரத்துக்கும் நம்பர் தரப்பட்டு அது தினமும் சரிபார்க்க ஏற்பாடு செய்யப் பட்டது.
ஆனால் திருடுபவர் மிகவும் புத்திசாலி போலும்! உணவுப் பாத்திரங்கள் பத்திரமாக இருக்க அதிலிருந்த உணவு மட்டும் காணாமல் போனது.
இதனைக் கவனித்த மாணவர்கள் எல்லாம் சேர்ந்து தங்களுக்குள் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்தனர்.
எல்லா மாணவர்களும் தங்கள் வகுப்பாசிரியர்களிடம் சென்று இந்தத் திருட்டை நிறுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்; நீங்கள் காவல்துறையை திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.
முதலில் மறுத்த பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பிடிவாதத்தால் வேறு வழியின்றி காவல்துறையிடம் தங்கள் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதனால் பள்ளியில் பணியிலிருந்த காவலர்களும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டபடி தங்களின் வழக்கமான பணிக்குத் திரும்பினார்கள்.
மாணவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டபின் திருடன் யாரென்று தெரியாவிட்டாலும் கூட, உணவுத் திருட்டு நடப்பது அடியோடு நின்று போனது.
இதைக் கண்ட பள்ளி நிர்வாத்துக்கு வியப்போ வியப்பு!
காவல்துறையாலேயே தடுத்து நிறுத்த முடியாத திருட்டை மாணவர்களால் எப்படி தடுத்து நிறுத்த முடிந்தது என்று மிகவும் ஆச்சர்யப்பட்டார்கள்.
எல்லா மாணவர்களையும் அழைத்து விசாரித்தனர்.
மாணவர்களின் தலைவனான பதினொன்றாவது படிக்கும் கோகுல்நாத்,
“இப்ப வரை இந்த திருட்டு எப்டி நடந்தது? யார் திருடினாங்கன்னு எங்களுக்கும் தெரியலதான். ஆனா இப்ப திருட்டு நடக்கறதில்ல! அது மட்டும் உறுதி! இத சாதிச்சது நாங்க இல்ல! ஆரம்பத்தில தங்களோட நோட்புக்ஸ் காணம்னு புகார் குடுத்த விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்க குடுத்த ஐடியானாலதான் இந்த திருட்டை தடுக்க முடிஞ்சது.” என்றான்.
அப்படி இந்த ஐந்து குழந்தைகளும் என்ன ஐடியா கொடுத்தார்கள்?
அடுத்த எபில பாக்கலாமா?
அது வரைக்கும் சமத்தா இருக்கணும்! சரியா சுட்டீஸ்?!
பை! பை! டாட்டா!
👋👋👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.