ரியா மூர்த்தி
2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள்.
ஒரு ஊரில் பாலா என்ற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். நன்றாக படிப்பது, அப்பா அம்மாவிடம் மரியாதையாக நடந்து கொள்வது, ஆபத்தில் இருப்போருக்கு உதவி செய்வது என்று பிறருக்கு உதாரணம் சொல்லுமளவு அந்த ஊரிலேயே அவன் நல்ல பிள்ளை.
மற்ற சிறுவர்களைப் போல தினமும் பள்ளிக்கூடம் போவது, நண்பர்களோடு விளையாடுவது என்று அவனை வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் இரவு பாலா தன் அம்மா அப்பாவுடன் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களின் வீட்டிற்கு வெளியே ஏதோ விசித்திரமான சத்தம் கேட்டது. அம்மாவும் அப்பாவும் அசந்து உறங்கிக் கொண்டு இருந்ததால் அவர்களை எழுப்பாமல் பாலா மட்டும் ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தான்.
அங்கே ஒரு பறவை போன்ற புது மாதிரியான பெரிய எந்திரம் ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் பயத்தில் அம்மாவையும் அப்பாவையும் எழுப்பி விட்டான் பாலா.
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அங்கே எதுவும் தெரியவில்லை. ஆனால் பாலாவுக்கு இன்னும் அந்த எந்திரம் அங்கேயே நின்று கொண்டு இருப்பது தெரிந்தது.
சின்ன பையன் ஏதாவது கெட்ட கனவு கண்டிருப்பான் என்று நினைத்து திரும்ப படுக்க வைத்து விட்டார்கள் அவனின் அம்மாவும் அப்பாவும்.
தூக்கம் வராமல் சும்மா படுத்திருந்த பாலா, கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
அந்த எந்திரம் இன்னமும் அங்கேதான் இருந்தது. இவ்வளவு நேரம் எந்த அசம்பாவிதமும் அங்கே நடக்காததால் அவனுக்கு அந்த எந்திரத்தின் மேல் இருந்த பயம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியே போனான் பாலா. அந்த எந்திரம் ரொம்பவும் வித்தியாசமான லைட்டுகளுடன் பளபளவென மின்னி கொண்டு இருந்தது.
“இது என்ன? ஏன் இங்கே வந்து நிற்கிறது? இதற்குள்ளே யார் இருக்கிறார்?” என்று பாலா சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்த நேரம் அதன் உள்ளே இருந்து ஒரு பூனைக்குட்டி வெளியே வந்தது.
ஏலியன் போல யாராவது வந்து தாக்குதல் நடத்துவார்கள் என்று பயந்த பாலா பூனையைப் பார்த்ததும் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான்.
பிராணிகளின் மீது பாசம் கொண்ட பாலா அந்த பூனை குட்டியை பாசத்தோடு கையில் தூக்கிக் கொண்டான்.
பயந்துபோன பூனைக்குட்டி அதிர்ச்சியாய், “உன்னால என்ன பாக்க முடியுதா?” என்றது.
அதைவிடவும் அதிகமாக அதிர்ச்சி அடைந்த பாலா, “என்ன பூனைக் குட்டி பேசுது?” எனும் யோசனையோடு அதைப் பார்த்தான்.
அவன் நிலையைப் புரிந்துகொண்ட பூனை தன்னை பற்றி விளக்கிச் சொல்ல ஆரம்பித்தது.
“நான் வேற ஒரு கிரகத்தை சேர்ந்தவன். எங்களோட கிரகத்தை சேர்ந்தவங்க எல்லாரும் சுற்றுலாவுக்காக மற்ற கிரகங்கள சுற்றி பார்க்க கிளம்பினோம். அப்படித்தான் பூமிக்கும் வந்தோம்..
எங்களோட ஆட்கள் தங்குவதற்காக எவரெஸ்ட் மலைக்கு மேல ஒரு தற்காலிக இருப்பிடம் உருவாக்கி இருக்கிறோம். எங்க ஆட்கள் எல்லாரும் இந்நேரம் அங்க போய் இருப்பாங்க.
இதுதான் என்னோட ஸ்பேஸ்ஷிப். திடீர்னு ரிப்பேர் ஆயிருச்சு. என்னோட அம்மாவும் அப்பாவும் தன் நண்பர்களோட முன்னால போயிட்டாங்க. நான் கடைசியா வந்ததால என் மெஷின் ரிப்பேர் ஆனது அவங்களுக்கு தெரியாது. இப்ப எப்படி போறதுன்னு தெரியாம தவிச்சுகிட்டு இருக்கேன்” என்று சொல்லி அழுதது.
பாலாவுக்கு அந்த ஏலியன் பூனை மேல் இரக்கம் வந்தது.
அன்போடு அதன் தலையை வருடிக் கொடுத்த பாலா, “நீ கவலைப்படாத. நான் என் அப்பாகிட்ட சொல்லி உன்ன உங்க அம்மா அப்பா இருக்கிற இடத்துக்கு கொண்டு போய் விடுகிறேன்..” என்றான்.
பூனைக்குட்டி வருத்தத்தோடு, “அது முடியாது. நாங்களும் எங்களோட ஸ்பேஸ் ஷிப்பும் மனுஷங்க கண்ணுக்கு தெரிய மாட்டோம். நீ உண்மைய சொன்னாகூட யாரும் உன்ன நம்ப மாட்டாங்க. எல்லாரும் உன்ன பாத்து சிரிக்க கூட செய்வாங்க..” என்றது.
பாலா ஆச்சரியத்தோடு, “என்ன? யார் கண்ணுக்கும் தெரிய மாட்டியா? ஆனா என் கண்ணுக்கு மட்டும் தெரியிறயே! அது எப்படி?” என்று கேட்டான்.
பூனைக்குட்டி தலையை சொரிந்து கொண்டே, “அதுதான் எனக்கும் புரியல..” என்றது.
பாலா, “அதுவும் நல்லதுக்கு தான், இல்லனா நீ என்ன பண்றதுன்னு தெரியாம தனியா கஷ்டப் படுவ. இப்ப உனக்காக உதவி செய்ய நான் இருக்கேன்” என்று பாசமாய் சிரித்தான்.
பூனைக் குட்டி, “உன் பேர் என்ன?” என்றது.
“பாலா, உன் பேர் என்ன?”
“சரஸ்ஷா”
“உன் பேர் ரொம்ப வித்தியாசமா அழகா இருக்கு..”
“எங்க ஊர்ல இது ரொம்ப பொதுவான பெயர். உனக்கு எங்க மொழி தெரியாததால புதுசா இருக்கு பாலா.”
“உனக்கு எப்படி எங்க மொழி தெரிஞ்சது?”
“எங்க கிரகத்து மக்களுக்கு இப்படி ஒரு ஸ்பெஷல் பவர் உண்டு. யாரு எந்த மொழியில் பேசினாலும் எங்களுக்கு புரியும். அவங்க மொழியிலேயே எங்களால் பதில் சொல்ல முடியும் பாலா.”
“சூப்பர்… எனக்கும் இந்த மாதிரி சக்தி எல்லாம் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். இப்ப எப்படி நாம இந்த மெஷின ரிப்பேர் பண்றது சரஸ்ஷா?”
“நீ எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய் பாலா. எப்படியாவது எனக்கு ஒரு மேப் மட்டும் ரெடி பண்ணி கொடு. அதை பார்த்து நானே அம்மா அப்பா கிட்ட பறந்து போய் விடுவேன்.”
“கண்டிப்பா உதவி செய்யிறேன் சரஸ்ஷா” என்ற பாலா தன் பள்ளி பாடப் புத்தகத்தில் இருந்த இந்தியா மேப்பை எடுத்துக்கொண்டு வந்தான்.
“இதுதான் ஹிமாலயா, இதோ இந்த இடத்தில்தான் எவரஸ்ட் இருக்கும்” என்று விரலால் தொட்டு காட்டினான்.
ஆனால் அந்த ஏலியன் பூனைக்குட்டிக்கு மனிதர்கள் பயன்படுத்தும் மேப் சுத்தமாக புரியவில்லை. பதில் சொல்லாமல் திருதிருவென முழித்தது.
பாலா, “என்னாச்சு?”
“எனக்கு இந்த மேப் புரியல..”
“அப்படினா காம்பஸும் சேர்த்து தரவா?”
“தெரியாம அது வேற பக்கம் திரும்பிட்டா நான் எங்கேயாவது தொலைந்து போய்விடுவேன். யார் கண்ணுக்கும் தெரியாததால எனக்கு என்ன ஆனாலும் யாருமே கண்டுக்க மாட்டாங்க.”
பாலா, “சரியாத்தான் சொல்ற… உன்ன பெரியவங்க கிட்டயும் கூட்டிட்டு போய் காண்பிக்க முடியாது. பேசாம நானே உன்ன எவரெஸ்ட்க்கு கூட்டிட்டு போறேன். உங்க அம்மா அப்பாகிட்ட உன்ன ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றான்.
ஏலியன் பூனைக்கு அதைக் கேட்டதும் ரொம்பவே சந்தோஷம் வந்தது.
“டபுள் ஓகே. நான் உன்ன தூக்கிட்டு பறக்குறேன், நீ எனக்கு எப்படி போகணும்னு வழி சொல்லு பாலா… இங்கிருந்து அங்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்?”
“எவரெஸ்ட் இங்கிருந்து ரொம்ப தூரத்துல இருக்கு. எப்படியும் நாம அங்க போய் சேர பத்து மணி நேரம் ஆகும்..”
“அவ்வளவு நேரமா? அதுவரைக்கும் நான் டையர்டு ஆகாம இருக்கனுமே” என்று பாவமாய் சொன்னது ஏலியன் பூனைக்குட்டி.
பாலாவுக்கு அது ரொம்ப களைத்துப் போயிருந்தது புரிந்தது. தன் வீட்டில் இருந்த சில உணவு பொருட்களைத் தந்தான். சந்தோஷமாக சாப்பிட்டது பூனைக்குட்டி.
வயிறு நிறைந்ததும் படு உற்சாகமாக பறக்க தயாரானது. மேப்பையும் காம்பஸையும் கையில் எடுத்துக்கொண்டு பாலா அந்தப் பூனைக் குட்டியின் மேல் ஏறி உட்கார்ந்தான்.
அவன் பாதுகாப்பிற்காக தன் வாலால் அவன் உடலில் சீட் பெல்ட் போல கட்டி பிடித்துக்கொண்டது பூனை.
“ஏன் என்ன வாலால கட்டின சரஸ்ஷா?”
“நான் வேகமா பறப்பேன். எதிர் காத்துல நீ பறந்து போய் விடக்கூடாது இல்லயா? அதான் வாலல கட்டி புடிச்சேன். நீயும் என் காதை நல்லா புடிச்சுக்க” என்று சொல்லி விட்டு பறக்க ஆரம்பித்தது ஏலியன் பூனை.
பாலா எதிர்பார்த்ததை விட ஏலியன் பூனை பயங்கர வேகத்தோடு பறந்தது. ரொம்ப சீக்கிரத்திலேயே அவர்கள் இருவரும் எவரெஸ்ட்டை அடைந்து விட்டனர்.
ஒரு பெரிய மலை மேலே பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே ஏலியன் பூனை பயன்படுத்திய பறவை போன்ற எந்திரங்கள் நிறைய இருந்தன.
அவையெல்லாம் சரஸ்ஷா பயன்படுத்திய எந்திரங்களை விடவும் பத்து மடங்கு பெரியதாக இருந்தது.
பாலாவை அந்த பிரமாண்ட மேடையில் மையத்தில் இறக்கிவிட்டது சரஸ்ஷா. குட்டி பூனையை காணாமல் தவித்த அதன் பெற்றோர், பூனை வந்ததும் அதை பாசத்தோடு கட்டிப்பிடித்து கொண்டனர்.
சரஸ்ஷா பூமியில் இருக்கும் பூனைக்குட்டி அளவு தான் இருந்தான். ஆனால் அவனின் அம்மாவும் அப்பாவும் பாலாவை விட பெரியதாய் இருந்தார்கள்.
அவ்வளவு பெரிய பூனை குட்டியை பார்த்ததும் பாலா சற்று அதிர்ந்து போனான். ஆனால் தன் அதிர்ச்சியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பது போல நின்றான்.
சரஸ்ஷா ஒரு சிறுவனோடு வந்து இருந்தால் அவன் கிரகத்தைச் சேர்ந்த மற்ற பூனைக்குட்டிகள் பாலாவை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
அப்போது சரஸ்ஷா, “அம்மா.. அப்பா.. இது தான் பாலா. என் ப்ரெண்ட்” என்று தன் நண்பனை அறிமுகப்படுத்தியது.
“எங்க குழந்தையை பத்திரமாக இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி. நீ இல்லனா எங்க குழந்தை தனியா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும்.”
“என் நண்பனுக்காக நான் உதவி செஞ்சேன்ங்க” என்றான் பாலா.
“நீ ரொம்ப நல்ல பையனா இருக்க. உனக்கு கண்டிப்பா நாங்க ஒரு பரிசு தரணும்” என்ற அப்பா, அவன் கையில் ஒரு அழகான பிரேஸ்லெட் போட்டு விட்டார்.
பாலா, “இது என்ன?” என்றான்.
“இது எங்களோட கிரகத்தை சேர்ந்த பெரிய பதவி ஆட்கள் உபயோகிக்கிற பிரேஸ்லெட். இனி நீ எங்களோட சிறப்பு விருந்தாளி, அதனாலதான் உனக்கு இதை நான் போட்டுவிட்டேன்.”
“ரொம்ப அழகா இருக்கு, ஆனா என் அம்மாவும் அப்பாவும் இதை பார்த்தா எங்கிருந்து கிடைச்சதுனு கேப்பாங்களே. அப்ப நான் உங்கள பத்தி நான் உண்மைய சொன்னா என்னவாகும்?”
“அந்த பயம் உனக்கு தேவையே இல்லை பாலா. இது எங்க கிரகத்து உலோகத்தால் செய்யப்பட்டது. உன்னைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் தெரியாது. இது மூலமா நீயும் சரஸ்ஷாவும் எப்ப வேணும்னாலும் பேசிக்க முடியும். உங்களோட நட்பு எப்பவும் இதே மாதிரி தொடரணும்” என்றார்.
பாலாவும் பூனையும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
அம்மா பூனை, “எல்லாம் சரி. விடிகிற நேரம் நெருங்குது. சீக்கிரம் பாலாவை அவனோடு வீட்டுக்கு கொண்டு போய் விடுங்க. அவனோட அப்பா அம்மா தூங்கி எழுந்துட்டா அவனைக் காணாமல் தேட ஆரம்பிச்சிடுவாங்க” என்று அப்பா பூனையிடம் சொன்னார்..
பாலாவை அப்பா பூனை தன் பறக்கும் இயந்திரத்தின் உதவியோடு விடிவதற்கு முன்பே அவன் வீட்டில் இறக்கிவிட்டு விட்டது. பாலா சத்தம் போடாமல் பழையபடி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் வந்து படுத்துக் கொண்டான்.
கொஞ்ச நேரத்திலேயே நன்றாக உறங்கி விட்டான். விடிந்ததும் அவன் முதலில் தன் வலது கையைத்தான் பார்த்தான். அதில் ஏலியன் பூனையின் அப்பா போட்ட பிரேஸ்லெட் அழகாக மின்னியது.
அன்றிலிருந்து பாலாவும் சரஸ்ஷாவும் தினமும் கொஞ்ச நேரம் நட்போடு பழக்கம் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
சரஸ்ஷா தன் தினசரி நடவடிக்கைகளை பற்றி சொல்லச் சொல்ல பாலாவுக்கு அவர்களின் கிரகத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆசை அதிகமாகியது.
அடிக்கடி சரஸ்ஷாவிடம், “ஒரு தடவ உங்க கிரகத்துக்கு என்ன கூட்டிட்டு போ” என்று சொல்ல ஆரம்பித்தான்.
சரஸ்ஷாவுக்கும் அவனோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆதலால் தன் அப்பாவிடம் ஒரு நாள் மட்டும் பாலாவை அழைத்து வர அனுமதி வாங்கினான்.
விடிந்தால் பாலாவின் பிறந்தநாள். இரவோடு இரவாக அவன் வீட்டுக்கு வந்த சரஸ்ஷாவும் அவனின் அப்பாவும் பாலாவை ரகசியமாய் தங்களின் கிரகத்திற்கு கூட்டிப் போனார்கள்.
ஒரு மணி நேர பயணத்தில் வேறு ஒரு கிரகத்திற்கே சென்றுவிட்டான் பாலா. அங்கு இப்போது பகலாய் இருந்தது.
மிதக்கும் மலைகள், பறக்கும் மீன்கள், தலைகீழாய் பாயும் அருவிகள் என்று அந்த கிரகமே விசித்திரமாய் இருந்தது.
பாலாவுக்கு அந்த கிரகம் ரொம்பவும் பிடித்திருந்தது. அதைவிடவும் சரஸ்ஷாவின் குடும்பத்தினை ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது.
சரஸ்ஷாவின் அம்மா அவர்களுக்காக சிறப்பான முறையில் தயாரித்த உணவு பதார்த்தங்களை பெரிய டேபிள் முழுக்க அடுக்கி வைத்திருந்தார்.
ஐஸ்கிரீம் ப்ளேவரில் சாக்லேட் சிப்ஸ்கள் தூவப்பட்டு, அழகான குட்டி பிஸ்கெட் போல் இருந்த சாப்பாட்டை பாலா ஆசையோடு அள்ளி அள்ளி சாப்பிட்டான்.
இது போக மில்க் ஷேக் போன்ற கூழ் வகை பதார்த்தம் எல்லாம் பெரிய சைஸ் ஜக் நிறைய இருந்தது. சரஸ்ஷாவும் பாலாவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்ததும் சரஸ்ஷாவின் அப்பா அவர்களை ஒரு பூங்காவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்தார்.
இது வரைக்கும் பாலா பார்த்திராத பிரமாண்டத்தோட அந்த பூங்கா காட்சி தந்தது.
தரை போலவே தண்ணீர் மேல் நடக்கக்கூடிய வசதி கொண்ட தரைத்தளம், தண்டவாளம் இல்லாமல் வானத்தில் பறக்கும் ரோலர் கோஸ்டர், நிஜமான கடலில் ஆடும் கப்பல், விதவிதமான வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்று அந்த இடமே கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு காட்சி தந்தது.
சரஸ்ஷா பாலாவை ஜெயண்ட் வீல் இருக்கும் பக்கம் கூட்டி சென்றான். பாலாவுக்கும் அதுதான் மிகவும் பிடித்தமான விளையாட்டு என்பதால் ஆசையோடு கூட சென்றான்.
சரஸ்ஷாவின் அப்பா மூவருக்குமான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்தார். கண்ணாடி குடுவை போல் இருந்த கூண்டிற்குள் இருவரும் ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோ மேட்டிக் சீட் பெல்ட் அவர்களை சீட்டோடு சேர்த்து மாட்டியது.
ரோலர் கோஸ்டர் இயங்க ஆரம்பித்ததும் அதில் வழக்கமான முறையில் ஒரே இடத்தில் நின்று சுற்றும் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அதுவோ சக்கரம் போல தன் இடத்திலிருந்து கழன்று உருண்டு ஓட ஆரம்பித்தது.
பாலா அதிர்ச்சியும் சந்தோஷமும் ஒருசேர ஆஆஆஆ என்று கத்தினான். ஆனால் சரஸ்ஷா ஆர்வமும் மகிழ்ச்சியுமாய் கூச்சலிட்டான். கொஞ்ச நேரத்திலேயே பாலாவுக்கும் பயம் போய்விட்டது.
அந்தப் பூங்கா முழுவதையும் ஒரு சுற்று சுற்றிய பிறகு ஜெயன்ட் வீல் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்துவிட்டது.
கீழே இறங்கியதும் சிறுவர்கள் இருவரும் சந்தோஷமாக ரோலர் கோஸ்டரை நோக்கி ஓடினார்கள். சரஸ்ஷாவின் அப்பாவும் அவர்கள் விரும்புவது எல்லாவற்றையும் நிறைவேற்றித் தந்தார்.
மூவரும் வீடு திரும்பும்போது சரஸ்ஷாவின் அம்மா பாலாவிற்காக பிரத்யேகமாக சில உணவுப் பொருட்களை செய்து எடுத்து வைத்திருந்தார்.
அழகாக பார்சல் செய்யப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பாலா ஆசையாக தொட்டு தடவி பார்த்தான்.
சரஸ்ஷாவின் அம்மா, “உனக்காகத்தான் பாலா இது எல்லாம் செஞ்சு வெச்சிருக்கேன். இதுவும் உன் பிரேஸ்லெட் மாதிரி யாரோட கண்ணுக்கும் தெரியாது.
நீ உன் வீட்டுக்கு போனதும் இதை பத்திரமா எங்கேயாவது வச்சுக்கோ. ஆறு மாசம் வரைக்கும் எதுவும் கெட்டுப் போகாது. தினமும் நீ இதை எடுத்து சாப்பிடலாம்.
காலியானதும் திரும்பவும் உனக்காக நான் இதை எல்லாம் செஞ்சு தருவேன்” என்றது பாசமாய்.
பாலா, “எனக்கு உங்களையும் இந்த கிரகத்தையும் ரொம்ப பிடிச்சு இருக்கு. நான் பேசாம இங்கேயே இருந்துக்கட்டுமா?” என்றான்.
சரஸ்ஷா சந்தோஷமாய், “எனக்கு சம்மதம்… நாங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருக்கலாம்” என்றான்.
ஆனால் அவனின் அப்பாவும் அம்மாவும் அவன் அளவுக்கு சந்தோஷப் பட வில்லை.
பாலா சோகமாய், “என்ன உங்களுக்கு பிடிக்கலையா?” என்றான்.
சரஸ்ஷாவின் அப்பா, “பிடிக்காமலா உன்ன இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் செய்வோம்?” என்று கேட்டார்.
பாலா, “அப்புறம் ஏன் உங்க வீட்ல வச்சுக்க ஒத்துக்க மாட்டேங்கிறீங்க? நான் என் வீட்டில் இருந்ததை விட இங்க ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ப்ளீஸ் என்னை இங்கேயே இருக்க விடுங்களேன்..” என்றான் கண்களில் கண்ணீர் கசிய.
“இங்க இருந்தாதான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்னு இல்ல. நீ உன் வீட்டிலேயே இருந்தாலும் சந்தோஷமா இருக்கலாம்பா..” என்று எடுத்துச் சொல்லி அவனுக்கு புரியவைக்க முயற்சி செய்தார்.
பாலாவோ பதில் சொல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டான்.
சரஸ்ஷாவின் அம்மா, “இங்க பாரு பாலா, நாங்க சரஸ்ஷாவை தொலைச்சப்போ எவ்வளவு வருத்தப்பட்டோம்னு உனக்கு நல்லாவே தெரியும். நீ தொலைந்து போனா உன் அம்மா அப்பாவும் அப்படித்தானே வருத்தப்படுவாங்க? நீ அழுறனு உன்ன இங்க இருக்க வச்சுட்டா, நீ காணும்னு அங்க அவங்க அழுவாங்க. அது உனக்கு ஓகேவா?”
பாலாவுக்கு தன் தவறு புரிந்தது… வருத்தமாய் தலை குனிந்தான்.
“நீ எங்க இருந்தாலும் எங்களுக்கு செல்லப் பிள்ளை மாதிரிதான். ஆனா நீ உன் அப்பா அம்மாகூட இருக்குறதுதான் உனக்கு பாதுகாப்பு. அவங்கள தவிர வேற யாராலயும் உன்ன நல்லா பாத்துக்க முடியாது. அதே மாதிரி அவங்களுக்கு உன்ன விட்டா வேற எந்த விஷயமும் பெருசு கிடையாது. இத நீயே ஒருநாள் புரிஞ்சுக்குவ, அது வரைக்கும் நீ அவங்களோடதான் இருக்கனும், சரியா?”
“சரி… இருக்கேன்” என்றான் பாலா.
அதைக்கேட்டு சரஸ்ஷாவின் அம்மாவும் அப்பாவும் சந்தோஷப்பட்டனர். விடியும் முன்பே பாலாவை பத்திரமாக வீட்டிற்கும் திரும்ப கொண்டு வந்து விட்டனர்.
பாலா சரஸ்ஷாவுக்கு பிரியா விடை தர, அவர்களின் பறவை எந்திரம் பறக்க தயாரானது.
அடுத்த நாள் காலையில் பாலாவின் அம்மா அவனுக்கு பிடித்த சாப்பாடு வகைகளையும், இனிப்பு பலகாரங்களையும் செய்து தந்தார். பாலாவின் அப்பா பள்ளிக்கூடம் முடிந்ததும் அவனுக்கு பிடித்த உணவகத்திற்கு அழைத்துச் செல்வதாய் வாக்குறுதி தந்தார்.
பள்ளிக்கூடத்தில் அவனது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பாலாவுக்கு தங்களால் முடிந்த சின்ன சின்ன பொருட்களை பிறந்தநாள் பரிசாக தந்தார்கள்.
அனைவரின் பாசத்திலும் திக்குமுக்காடிய பாலா சரஸ்ஷாவையும் அவனது கிரகத்தையும் மறந்தே போனான். அத்தனை கொண்டாட்டங்களும் முடிந்த பிறகு ராத்திரி உறங்கும் நேரமான பின்புதான் சரஸ்ஷாவிடம் பேச வேண்டும் எனும் ஞாபகமே வந்தது.
பிரேஸ்லெட் மூலம் சரஸ்ஷாவை கூப்பிட்ட பாலா, “எனக்கு இப்பதான் உன் அப்பா சொன்னதுக்கான முழு அர்த்தமும் புரியுது… நான் என் வீட்டுலயும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், அடுத்து பரீட்சை லீவுக்கு கண்டிப்பா உங்க வீட்டுக்கு திரும்பி வருவேன்” என்றான் பாலா.
அவன் சொன்னதைக் கேட்ட பிறகு சரஸ்ஷாவும் சந்தோஷமானான். இருவரின் நட்பும் இடை விடாமல் இனிதே தொடர்ந்தது.
பிரமாதமான கற்பனை.👏👏👏👏