முன்னொரு காலத்தில் பழந்தமிழ் நாட்டில் ஒரு குட்டி நாடு இருந்தது. அந்த நாட்டின் அரசனும், அரசியும் நாட்டு மக்களிடம் அதிக அன்புடன் நடந்து கொண்டார்கள். மக்களுக்கும் அவர்களை மிகவும் பிடித்தது.

அரசிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று எல்லோருக்கும் கவலை. மக்கள் அனைவரும் அரசருக்கு வாரிசு உருவாக வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அனைவரும் ஆசைப்பட்டபடி அரசியும் கருவுற்றார். மக்கள் அனைவரும் புதிய இளவரசரோ, இளவரசியோ யார் பிறந்தாலும் கோலாகலமாக வரவேற்க, ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அரசர், ஒரு முறை நாட்டின் வனப்பகுதியில் வேட்டையாடப் போயிருந்த சமயம், அரசிக்குப் பிரசவம் ஆனது. மருத்துவர்கள் கணித்திருந்த நேரத்திற்கு முன்னதாகப் பிறந்து விட்ட அந்தக் குழந்தை மிகவும் சிறிய உருவமாக இருந்தது. அந்த இளவரசனைப் பார்த்து பயந்து போன அரசி, எல்லோரிடமும் குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டதாகச் சொல்லி விட்டார். மருத்துவம் பார்த்த கிழவிக்கும் நிறையப் பொற்காசுகளைப் பரிசாக அளித்து உண்மையை மறைத்து விட்டாள்.

WhatsApp Image 2021 09 14 at 10.35.09 PM
படம்: அப்புசிவா

ஒரு வேர்க்கடலையின் கூட்டுக்குள் இளவரசனை ஒளித்து வைத்து இரகசியமாக வளர்த்து வந்தார். தனது அறையில் ஒளித்து வைத்துக் கொண்டு யாரும் இல்லாத சமயம் இளவரசனைக் கொஞ்சுவாள். வருடங்கள் உருண்டோடின. இளவரசனின் வயது கூடினாலும் வளர்ச்சி இல்லவே இல்லை. அதற்குப் பிறகு அரசிக்கு வேறு குழந்தை பிறக்கவும் இல்லை. நாடே துயரத்தில் ஆழ்ந்தது.

ஒருமுறை அரசியைச் சந்திக்கப் பக்கத்து நாட்டு அரச குடும்பத்தினர் வந்திருந்ததால், அரசிக்கு அவர்களுடன் அதிக சமயம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசி இல்லாத சமயத்தில், அரசியின் படுக்கையில் இருந்த வேர்க்கடலையை, அங்கே வந்த பணிப்பெண் சாளரம் வழியாக வெளியே எறிந்து விட்டாள்.

அரண்மனை நந்தவனத்தில் விழுந்த அந்த வேர்க்கடலை, அங்கே நடப்பவர்களின் கால் பட்டுப் பட்டு மண்ணில் அமிழ்ந்து போனது.

அரசி திரும்பி வந்து தனது இளவரசனைக் காணாமல் பதறிப் போய் அறையெங்கும் தேட, இளவரசனோ கிடைக்கவேயில்லை. யாரிடமும் தனது சோகத்தை அவரால் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் அரண்மனை நந்தவனத்தில் பிரம்மாண்டமான மரம் ஒன்று முளைத்திருந்தது. என்ன ஆச்சரியம்! அந்த மரத்தில் கொத்துக் கொத்தாகக் கடலைக் காய்கள் காய்த்துத் தொங்கின. சாதாரணமாக வேர்க்கடலை நிலத்தின் கீழே வேரில் காய்க்கும் என்பதால் இந்த அதிசயத்தைக் கண்டு எல்லோரும் குழப்பமடைந்தார்கள்.

“என்ன இது! மாயாஜாலமாக இருக்குமோ? இல்லை யாராவது மந்திரவாதியின் செயலாக இருக்குமோ?”  என்று எல்லோரும் வியந்து போய் வேடிக்கை பார்த்தார்கள்.

அந்த மரத்தை வெட்டக் கூடாது என்று அரசியாரும் கட்டளை இட்டார். மனம் வருந்தும் போதெல்லாம் அந்த மரத்தடியில் சென்று நிற்பார் அரசி.

கடலைக் காய்கள் காற்றில் அசைந்தாடும் ஒலி, அரசியின் செவிகளில் இனிமையாகக் கேட்கும் போதெல்லாம், “அன்னையே!” என்று இளவரசன் அழைப்பது போலத் தான் அவருக்குத் தோன்றியது.

இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் நாட்டு எல்லையில் போர்மேகங்கள் சூழ்ந்தன. எதிரி நாட்டு அரசன், அவர்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அரசரும்  தன்னுடைய வீரர்களுடன் சென்று போர் புரிந்தான். பல நாட்கள் யுத்தம் நீடித்தது. அரசரின் படைபலம் குறைந்து கொண்டே வந்தது. அரசர், இனி தான் தோல்வியைத் தான் சந்திக்கப் போகிறோம் என்று எண்ணி மனம் வருந்தினார். தகவலை அறிந்த அரசியும் கவலையுடன் அந்த அதிசய மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

திடீரென்று, “அன்னையே! , அன்னையே!” என்று இளவரசனின் குரல் கேட்டது. திடுக்கிட்டுப் போய் சுற்றும்முற்றும் பார்த்தார் அரசியார். கண்களில் யாரும் தட்டுப்படவில்லை. பயந்து போய் நின்றார் அரசியார் .

“அன்னையே, நான் தான் உங்களுடைய பிரிய இளவரசன் தான் வந்திருக்கிறேன் உங்களுக்கு உதவும் ஆசையுடன் வந்திருக்கிறேன். நீங்கள் இந்த அதிசய மரத்தைப் பிடித்து நன்றாக உலுக்குங்கள் ஒருமுறை” என்று மீண்டும் இளவரசனின் குரல் கேட்டதும், அரசியும் மரத்தைப் பிடித்து உலுக்கினார் மரத்திலிருந்து கடலைக்காய்கள் தெறித்து நிலத்தில் விழுந்தன.

கீழே விழுந்த ஒவ்வொரு கடலைக்காயும் வெடித்துத் திறந்தது. அதில் இருந்து குட்டிக் குட்டி மனிதர்கள் வெளியே வந்தனர். அவர்களின் தலைவனாக, அரசியின் மகனான வேர்க்கடலை இளவரசன் போர்க்கோலத்தில் நின்றான்.

“நானும், எனது வீரர்களும் சென்று தந்தைக்கு உதவி செய்யப் போகிறோம். எங்களை ஆசீர்வதித்து விடை கொடுத்து அனுப்புங்கள் அன்னையே!” என்று இளவரசன், அரசியை வணங்கினான்.

“பெரிய பெரிய மனிதர்களுடன் எப்படி நீங்கள் யுத்தம் செய்ய முடியும்? மனிதர்களின் காலடிகளிலும், குதிரைப் படை, யானைப்படையின் நகர்விலும் நீங்கள் மிதிபட்டு நசுங்கி உயிரிழந்து விடுவீர்களோ என்று என் நெஞ்சம் பதைபதைக்கிறது இளவரசே!” என்றார் அரசி.

“கவலை வேண்டாம் அன்னையே! வலிமை மிகுந்த யானையை ஒரு சிற்றெறும்பு துன்புறுத்திக் கலங்க வைப்பது போல், உருவத்தில் சிறிய நாங்கள், எங்களை விட எவ்வளவோ பெரியவர்களை நிச்சயமாகக் கதற அடிப்போம். துணிவோடு விடை கொடுங்கள்” என்று இளவரசன் வேண்ட, அரசியும் மனதில் துணிவை வரவழைத்துக் கொண்டு ஆண்டவனை வேண்டிக் கொண்டு அவர்களுக்கு விடை கொடுத்தாள்.

கடலை வீரர்கள் போர்க்களத்தை அடைந்தார்கள். எதிரிப் படையின் ஊடே புகுந்து அதகளம் செய்து விட்டார்கள். யானைகளின் காதுகளுக்குள் புகுந்து தங்கள் குச்சிகளால் குடைந்ததில், யானைகளுக்கு மதம் பிடித்து, அவர்கள் படைக்குள்ளேயே நாசம் விளைவித்தன.

அதே போலக் குதிரைகளின் கால்களில் கத்தியால் உரசியதால், குதிரைகளும் தாறுமாறாக ஓடிக் குழப்பம் உண்டாக்கின.

படைவீரர்களின் தோள்களில் சிலர் ஏற, சிலர் தலையில் ஏறி உட்கார்ந்து தங்கள் கேடயத்தால் அடிக்க, எதிரி நாட்டு வீரர்கள் பயந்து போய் விட்டார்கள்.

“ஏதோ கண்ணுக்குத் தெரியாத மந்திரசக்தி எங்களைத் தாக்குகிறது. எங்களால் இந்த நிலையில் தொடர்ந்து போர்  செய்ய முடியாது” என்று அந்த வீரர்கள், கைகளில் இருந்த ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டுப் புறமுதுகிட்டு ஓடியே போனார்கள்.

எதிரி நாட்டு அரசனும் தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கினான்.

அரசரும் எதிர்பாராத இந்த வெற்றியால் மனமகிழ்ந்து போனார். தமக்கு உதவி செய்த குட்டி வீரர்களுக்கு நன்றி கூறுவதற்காக அவர்களைத் தேடிய போது அவர்கள் கிடைக்கவில்லை. நடந்த அதிசயத்தை அரசியிடம் வந்து அரசர் சொன்ன போது அரசியும் மகிழ்ந்து போனார்.

அதற்குப் பிறகு எப்போதெல்லாம் அந்த நாட்டு மக்களுக்கு உதவி தேவையாக இருந்ததோ, அப்போதெல்லாம் கடலை வீரர்கள் வந்து உதவி செய்தார்கள்.

சில வருடங்கள் கழித்து இளவரசனும் உருவத்தில் பெரியவனாகி அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். நாட்டில் நல்லாட்சி தொடர்ந்து நடைபெற்றது. மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments