thottam

ஆடு மாடு மேய்ந் திடாமல்
ஆடா தொடை, கிளுவை கொண்டு
வீட்டைச் சுற்றி வேலி அமைப்போம்
தோட்டம் போட்டுச் செடி வளர்ப்போம்

ஆடிப் பட்டம் தேடி விதைத்தால்
விளையும் பயிர் காய்ந் திடாமல்
மழையும் காலத்தில் பெய் திடுமே!
பயிரும் செழித்து வளர்ந் திடுமே!.

நீண்ட ஓடை பாத்தி கட்டி
நீரைச் செடிக்குப் பாய்ச் சிடுவோம்
மிஞ்சும் நீரைச் சேமித்து வைத்தே
மண்ணின் வளத்தைக் காத் திடுவோம்

வட்ட வட்டப் பாத்தி கட்டி
கீரை தெளித்து வளர்த்திடுவோம்
மேட்டுத் திண்டு பாத்தி கட்டி
முள்ளங்கி விதையை ஊன்றிடுவோம்

சதுரப் பாத்தியில் அவரை நட்டு
பந்தல் போடுவோம் கொடி படர
செவ்வகப் பாத்தியில் புடலை நட்டு
அவரை பந்தலில் ஏற்றிடுவோம்

பக்கத்துப் பாத்தியில் பாகல் ஊன்றி
பந்தல் காலில் சுற்றி விடுவோம்
மூன்று கொடிகளும் ஒத் திசைந்து
ஒன்றாய்க் கலந்து படர்ந் திடுமே

கொடியில் அரும்பு தோன்றி விட்டால்
மனதில் மின்னும் விண்மீன் ஆயிரமே
புடலை காய்த்து முடியும் வரை
அவரை ஒதுங்கி இடங் கொடுக்கும்

பந்தல் கீழே பாகற் காயும்
பசிய டோலக்காய் தொங் கிடுமே
பந்தல் மேலே கொத்துக் கொத்தாய்க்
அவரை காய்த்துத் தள்ளிடுமே

இயற்கை உரங்கள் போடுவதால்
மண்ணின் இயல்பும் கெடுவதில்லை
சூழல் தனிலும் மாசு இல்லை
சத்தும் முழுதாய்க் கிடைத்திடுமே!

நம்உழைப்பில் விளைந்த காய்கனிகள்
நாக்கில் தேனாய் இனித்திடுமே!
கொல்லையில் பறவை பண்ணிசைக்கத்
தோட்டம் போடுவோம் வாருங்கள்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments