கவி மாரியப்பன்

2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள்.

thumba 1

டர்ந்த ஆல மரங்களுக்கு இடையில் ‘சட்’ ‘சட்’ என சிறு நீர்த்துளிகள் நெருங்கி விழத் தொடங்கி இருந்தன.

அம்மாவின் நான்கு கால்களுக்கு இடையில் கதகதப்பாக இருக்க வேண்டும் என நெருங்கி, தன் உடலை சுருக்கி படுத்துக் கொண்டது அந்த குட்டி யானை தும்பா.

அம்மாவுக்கு அருகில் அக்கா, சித்தி, பெரியம்மா, பாட்டி யானைகளும், அடுத்த மரத்தின் கீழ் அப்பா, பெரியப்பா யானைகளும் படுத்துக் கிடந்தன‌.

தூக்கம் வராமல் இப்படி, அப்படியென்று கால்களுக்குள் நெளிந்த தும்பாவை மெதுவாக தன் தும்பிக்கையால் அதன் குட்டி தலையில் இருந்த சிறு முடிகளை மெல்ல இழுத்து, இதமாக தடவி கொடுத்தது அம்மா யானை. கண்கள் மெல்ல செருகியது  தும்பாவுக்கு.

thumba 2
படம்: அப்புசிவா

இருந்தும் தூங்காமல் வானத்தில் ‘பளபள’வென்று கண் சிமிட்டிய மின்னலை ஒரு கண்ணை மூடி, மறு கண்ணை பாதி திறந்து பார்த்தது. 

“தும்பா, மின்னலை பாக்காத, கண்ணை இறுக்க மூடு, தூங்கு” மெல்ல குரல் கொடுத்தது அம்மா.

“இல்லம்மா நான் மின்னலை பாக்கலை. வானத்தில் அப்பா மாதிரியே, ஆனா அப்பாவை விட பெருசா, நீள கொம்புங்களோட, பெரிய காதுங்களோட யாரோ நடந்து போறாங்க மா. அப்பத்தான் அவங்க கால் சத்தம் ‘டம்..டம்’னு கேட்குது. உடனே மின்னலும் வருது மா’

‘அடேய் கதைக்காரப்பயலே நீ ஆரம்பிச்சிட்டியா” அம்மா கொஞ்சம் குரலை உயர்த்த,

“அம்மா நிஜமாத்தான் சொல்றேன், நா பாத்தேன் மா..” சிணுங்கலோடு தும்பா, ராகம் போட்டு சொன்னது.

“மழை இன்னும் கொஞ்ச நேரத்தில் அதிகமானாலும் ஆகும். அப்பா இன்னும் கொஞ்ச தூரம் இருக்க மலைக்குகைக்கு கூட்டிட்டு போனாலும் போவார். இப்பவே தூங்கினாத்தான் உன்னால நடக்க முடியும். அப்புறம் கால்வலிக்குது, தூக்குங்கன்னு சொன்னா அடி விழும்” கண்களை உருட்டி அம்மா சொன்னதும் தும்பாவுக்கு ஒரே சோகமாக ஆகிவிட்டது.

பாட்டி யானை, ”மேகா, குழந்தையை ஏன் திட்டற. புரியற மாதிரி அன்பா சொன்னா பிள்ளை கேட்க போறான்” தும்பாவுக்கு ஆதரவாக சொன்னதும், தும்பாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

இருந்தும் பாட்டி யானை இன்னும் தன்னை கொஞ்ச வேண்டும் என்று கள்ளத்தனமாக அருகில் தெறித்து ஓடிய நீர்த்துளிகளை எடுத்து தன் கண்களின் ஓரம் தடவிக் கொண்டு சத்தமாக விசும்ப தொடங்கியது.

தும்பா கண்ணில் இருந்து நீர் கசிவதை  பார்த்ததும் அருகில் இருந்த பெரியம்மா, சித்தி, பாட்டி யானைகள் பதறி எழுந்து மெதுவாக தும்பாவை எழுப்பி சுற்றி நின்றுக் கொண்டு தங்கள் தும்பிக்கைகளால் தடவிக் கொடுத்து அதனை சமாதானப்படுத்த விளையாட ஆரம்பித்தன.

தும்பாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தாங்கவில்லை. மழை தூறும்போது ஓடி ஆடினால் அப்பா திட்டுவார்கள். இப்போது மெல்ல தான் மரத்தை விட்டு வெளியே வந்து மழைத் தூறலில் நனைந்தால், கூடவே எல்லாரும் தனக்காக வெளியில் வந்து விடுவார்கள். தன் திட்டம் பலித்ததை எண்ணி தன்னையே பாராட்டித் கொண்டது.

‘ ஐ.. நான் மழையில் நனைய போறேனே’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு காலை எடுத்து, வெளியே வைத்ததும் வானத்தில் மீண்டும் மின்னல் பளீரென்று வெட்டியது. கூடவே கனமான ‘டமடம’ வென பாறைகள் ஒன்றோடொன்று மோதுவது போல இடி சத்தமும் கேட்டதும், அண்ணாந்து  வானத்தை பார்த்தது தும்பா..

அது சற்று நேரத்திற்கு முன் கற்பனையாக சொன்ன அடையாளத்துடன் ஒரு மலையை போன்ற பெரிய யானை, பளபளக்கும் கண்களுடன் வானத்தில் தெரிந்தது. பயந்து போய் அம்மாவுக்கும் பாட்டிக்கும் இடையில் வந்து நின்றுக் கொண்டது தும்பா. தும்பா பயந்ததை பார்த்து அக்கா யானையான அம்பாவும் பயந்து இதனுடன் வந்து இணைந்து நின்று கொண்டது.

“மழை வலுக்கும் போல, நாம இப்பவே கிளம்பினாத்தான் பெரிய மழைக்கு முன்னாடி குகைக்கு போய் சேர முடியும். எல்லாரும் வாங்க.. போகலாம்” அப்பா யானையான கஜா சொன்னதும் அனைவரும் கிளம்பினர்.

தூறலில் அனைத்து யானைகளும் ஒன்றோடொன்று நெருங்கி நடக்கத்துவங்கின. பெரியப்பா யானை எல்லாருக்கும் முன்னும், அப்பா யானை எல்லாருக்கும் பின்னும்  பாதுகாவலர்களை போல நடந்து வந்தன.

தும்பாவுக்கு வானத்தை நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது ‌. தலையை குனிந்து கொண்டு முடிந்த மட்டும் எல்லாருக்கும் இடையில் புகுந்து புகுந்து வேகமாக ஓடி வந்தது.

அனைவரும் மழைக்கு முன்னே குகைக்குள் வந்து சேர்ந்தனர். இருண்ட பெரிய மலையின் வாயை திறந்தது போல இருந்தது அந்த குகை.  

மழைத்தண்ணீர் உள்ளே புகுந்து விடாத வண்ணம் குகையினுள் சிறிது தூரம் உள்ளே சென்று அனைத்து யானைகளும் அங்கிருந்த கற்களின் மேல் தலையை சாய்த்து படுத்துக் கொண்டன. தும்பா பாட்டியின் மீது தலையும், அம்மாவின் மீது காலையும் தூக்கி வைத்து கொண்டு படுத்தது.

சிறிது நேரத்தில் அனைவரும் தூங்கினாலும் தும்பாவால் தூங்க முடியவில்லை. மெல்ல பாட்டியின் காது பக்கமாக நகர்ந்தது. பாட்டியும் பேரனை தன் முகத்தோடு சேர்த்து வைத்து அதன் உடம்பில் மெதுவாக தட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.

“பாட்டி” ரகசியமாக கூப்பிட்டது தும்பா.

“சொல்லுடா குட்டி பையா” பாட்டியும் மிக மெதுவாக கேட்டது.

“நாம மரத்தடியில் இருந்து கிளம்பறப்ப வானத்தில அப்பா, பெரியப்பாவை விட பெரிசா ஒரு யானையை பாத்தேன். பயம்மா இருந்துச்சா…‌ கண்ணை மூடிட்டே உங்களோட வந்துட்டேன்”

“நிஜமாவா சொல்ற என் தங்கமே. நீ பாத்தியா. யார் கண்ணுக்கும் தெரியாத அவர் உன் கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கார்னா நீ பெரிய அதிர்ஷ்டசாலி டா சின்னப்பயலே”

“யார் பாட்டி அது?. பெரிய மலை மாதிரி இருந்தாரு பாட்டி”

“அவர் தான் உன் தாத்தைய்யா”

“தாத்தைய்யாவா. அப்படின்னா”

“தும்பாக்குட்டி.. உன் தாத்தாவோட அப்பா அவர். பெரிய  கஜராஜா. இந்த காட்டுக்கே ராஜா.”

“காட்டுக்கு ராஜா சிங்கம் தானே”

தும்பா கேட்டதும் மெதுவாக சிரித்தது பாட்டி யானை.

“காட்டுக்கு ராஜா சிங்கம் தான். ஆனா அந்த சிங்கங்களே உங்க தாத்தைய்யாவ பார்த்தா நடுங்கும். அவர் பெரிய பெரிய தந்தங்களோட நடந்தார்னா அப்படியே நிலம் அதிரும். அவர் குரல் கொடுத்தா காட்டுல வழி தவறி போன நம்ம ஆட்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உடனே அதை கேட்டு வந்திடுவாங்க. அப்படி ஒரு கம்பீரமானவர்‌.”

“அவர் ஏன் பாட்டி வானத்துக்கு போனார்”

“அது ஒரு பெரிய கதை.”

“கதையா.. சொல்லுங்க சொல்லுங்க.. இப்பவே சொல்லுங்க”

“சொல்றேன் சொல்றேன். உங்க அப்பா உன்னை மாதிரி இருந்தப்ப இங்க ஒரு அடை மழைக் காலம் வந்துச்சு. தொடர்ந்து பத்து நாள் விடாத பெரிய கோடை மழை. எங்க பார்த்தாலும் காட்டு வெள்ளம். பெரிய பெரிய மரங்களெல்லாம் அடிச்சிட்டு கண்டபடி வெள்ளத்தில ஓடுது.  கண்ணுல பட்ட எல்லாத்தையும் வாரி சுருட்டிட்டு போச்சு அந்த வெள்ளம்”

“அய்யோ.. அப்புறம்”

“ஹ்ம்ம். எல்லா விலங்குகளும் கிடைச்ச குகையிலையும், பெரிய மரங்கள்ல இருக்க பொந்துகளிலேயும் அடைஞ்சுட்டு இருந்துச்சுங்க. நிறைய பேருக்கு இருக்க இடமில்ல. சாப்பிட சாப்பாடு இல்ல”

“அப்ப எல்லாருமே பட்டினியா இருந்தீங்களா.”

“ஆமா மழை கொஞ்சம் குறைஞ்சாலும் காடு முழுக்க சேறும், சகதியுமா கிடக்குது. என்ன செய்யறதுன்னு தெரியாம மிருகங்க எல்லாம் காட்டில் இருந்த சிங்க ராஜாவை தேடி போனா அது ஒரு சின்ன பாறைக்கு அடியில் பதுங்கிட்டு சோகமா இருந்துச்சு”

“அதுவும் சாப்பிடாம கிடந்துச்சா”

“ஆமா. அது குட்டிங்களலாம் வெள்ளம் அடிச்சிட்டு போய்டுச்சு. பெண் சிங்கம் அந்த வருத்தத்தில எந்த மிருகத்தையும் தேடிப் போய் வேட்டையாடல. அது கண்ணுக்கு மத்த மிருக குட்டிகளெல்லாம் தன் குட்டிகளை போல தெரியவே, அதுக்கு கொல்லவே மனசு வரல”

“ஏன் அந்த சிங்க ராஜா போய் வேட்டையாட வேண்டியது தானே”

“அதுக்கு பழக்கமில்லை டா செல்லக்குட்டி. பெண் சிங்கங்க தான் வேட்டையாடும். ஆண் சிங்கம் அது எல்லையில் வர மத்த ஆண் சிங்கத்தையும், வேற பெரிய மிருகங்களோடையும் தான் சண்டைக்கு போகும்”

“அப்ப ராஜாக்கு ராணி தான் சாப்பாடு போடுமா”

“ம்ம் ஆமா. எல்லா மிருகங்கள்ட்டையும் தன்னால் எதுவும் செய்ய முடியாது, ‘நீங்களே போய் தங்க இடமும், சாப்பாடையும் பாத்துக்குங்க’ன்னு சொல்லிடுச்சு சிங்கம்”

“ம்ம் அப்புறம்”

“ஒரு தலைவன்னா அது தன் மக்களோட கஷ்டங்களை தன் கஷ்டமா நினைச்சு அதுக்கு தீர்வு காணனும். பசியோட தவிக்கிற சின்ன குட்டிகளை பார்த்து அதுக்கு இரக்கம் வரணும். ஆனா சாதாரண நாட்கள்ல கம்பீரமா காட்டுக்கே நான் தான் ராஜான்னு சொல்லிட்டு இருந்த சிங்கத்தால ஒரு கடினமான சூழல்ல தீர்வும் காண முடியல, மக்களுக்கு உதவியும் செய்ய முடியல”

“அப்ப ராஜாவுக்கு இருக்க வேண்டிய தகுதியே அதுக்கு இல்லாம போயிடுச்சு… அப்படித் தானே பாட்டி. அப்புறம் “

“ஆமாடா கண்ணு. அப்புறம் தாத்தையா தான் உடம்புல தெம்பு இருக்க பத்து ஆண் யானைகளையும், கரடிங்க, சிறுத்தைங்க, காட்டெருமைங்கன்னு ஒரு கூட்டத்தையும், காடு பத்தி அக்கு வேற ஆணி வேறா நல்லா தெரிஞ்ச செந்நாய்ங்க, குள்ள நரிங்க, கழுதை புலிங்கன்னு ஒரு கூட்டத்தையும் சேர்த்து முதல்ல இந்த மழையில் எங்க போய் உணவை எடுத்துட்டு வரலாம்னு ஆலோசனை நடத்தினார்”

“தாத்தைய்யா அவ்ளோ பெரிய புத்திசாலியா பாட்டி”

“ஆமா தங்கம். அவர் உடல்ல மட்டுமில்ல அறிவிலயும் பலசாலி தான். எல்லா மிருகங்களும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தாங்க. சின்ன மிருகங்களை முடிஞ்ச அளவு வெள்ளம் வராத பகுதியில் விட்டுட்டு இவங்க உணவை தேடி காட்டுக்குள்ள போனாங்க. வழக்கமான எல்லா பாதையும் மாறி இருந்தது. மழை தண்ணியில் எது பள்ளம், எது குழி, எது பாதைன்னு தெரியல. எல்லாருக்கும் முன்னால நாலு யானைகளையும், பின்னால நாலு யானைகளையும் பாதுகாப்பா வர சொல்லிட்டு இவர் தான் தலைமை ஏத்து போனார்.”

“சீக்கிரமா சொல்லுங்க பாட்டி.. சாப்பிட கிடைச்சதா எதாவது”

“ ம்ம்.‌ முதல்ல கிடைக்கல. கொஞ்ச தூரம் போனப்ப நல்ல வாசனை காத்தில வந்தது. அதை வச்சு போய் பார்த்தா, மலையடிவாரத்தில் சந்தன மரங்களும், பலா மரங்களும் வேரோடு சாஞ்சு வெள்ளத்தில் அடிச்சுட்டு வந்து பாறைங்க இடையில் கிடந்துச்சு. சந்தன மரத்தில் இருந்த தேன்கூடுகள் மரங்களோட இடையில் பாதி தேன் ஒழுகி போய் மீதி தேனடையில் கொஞ்சம் தேனோடவும், பலா பழங்கள் பெரிசா இருந்ததால முழுக்க பிஞ்சு போகாம ஓரளவு கிடைச்சது. அதையெல்லாம் எடுத்துக்கிட்டாங்க. ஆத்தோரங்கறதால நாணல் புல்லெல்லாம் தண்ணியில் அவ்வளவா அடிச்சிட்டு போகாம இருந்துச்சு. மான்களுக்கும், குட்டி முயல் மாதிரி மிருகங்களுக்கும் தேவைப்படுமேன்னு அதை சேகரிக்கறப்ப பார்த்தா சீனிக்கிழங்குகளும், பெரிய வள்ளிக்கிழங்குங்க, எத்தனையோ பழங்கள் எல்லாம் நாணல் புதருக்குள்ள காட்டுக் கொடியோடு சுத்திட்டு கிடந்துச்சாம். அதையும் சந்தோஷமா எடுத்து காட்டுக் கொடிங்களோட சேர்த்து கட்டிக்கிட்டாங்களாம்.”

“ஐ தேன், பலா, கிழங்கு, பழம், நாணல் புல் எல்லாம் கிடைச்சதா”

“ம்ம் கிடைச்சது. ஆனா எல்லா மிருகங்களும் நம்மை மாதிரி இலை, புல், காய், பழம்னு சாப்பிடாது இல்லையா?”

“ஆமா பாட்டி. அதுங்களுக்கும் பசிக்குமே”

“சரி தான். அப்படி குள்ளநரி, கழுதை புலில்லாம் கேட்டதும் தாத்தைய்யா யோசிச்சார். அப்பத்தான் வர வழில நிறைய பறவைங்க, குட்டி முயல்ங்க, நீர்க்கோழிங்கன்னு செத்து கிடந்தது அவருக்கு ஞாபகம் வந்தது. அங்க இருந்த மத்த மிருகங்கள்ட்ட உறுதிமொழி கேட்டார்”

“உறுதிமொழின்னா என்ன பாட்டி”

“சத்தியம் டா பட்டூ. ‘இந்த பெரிய மழைக்கு நாமெல்லாம் தப்பி பிழைச்சதே பெரிசு. நிறைய மிருகங்க செத்து போச்சு. இப்ப மிச்சம் மீதி இருக்கற மிருகங்களை வேட்டையாடினா நிறைய விலங்கினங்க இருந்த இடமே தெரியாம அழிஞ்சு போய்டும். அதனால நாம் வழில கிடந்த செத்த மிருகங்கள்ல அழுகிப்போகாததா பார்த்து எடுத்துட்டு போவோம். இன்னும் ரெண்டு நாள்ல மழை விட்டுடும். அப்ப அதுங்களை வெயில்ல நல்லா காய வெச்சு எடுத்து வச்சிட்டு கொஞ்ச நாள் சாப்பிடுங்க. அப்புறம் பத்தலைன்னா ஆத்துல போற மீன்களை சாப்பிடுங்க..  திரும்ப இந்த காட்டில் எல்லா உயிரினங்களும் குட்டி போட்டு நிறைய மிருகங்களா காடே நிறைஞ்சிருக்கறப்ப தான் நீங்க எல்லாரும் வேட்டையாடி உணவு சாப்பிடனும். இதுக்கு நீங்க எல்லாரும் உங்க இனத்தார்ட்ட பேசி எல்லா மிருகங்க முன்னாடியும் சத்தியம் பண்ணனும். சரியா’ன்னு தாத்தைய்யா கேட்டார். அவரோட குரல்ல இருந்த கண்டிப்பையும், அவர் சொன்னதுல இருந்த நியாயத்தையும் எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு ஒத்துக்கிட்டாங்க.”

“ஹை.. அப்ப எல்லாருக்குமே சாப்பாடு கிடைச்சிடுச்சு இல்ல பாட்டி.. தாத்தைய்யா பெரிய புத்திசாலி தான்”

“ஆமாடா அப்புக்குட்டி. இயற்கை தான் நம்ம எல்லாருக்கும் தெய்வம். அம்மா மாதிரி. தன் குழந்தைங்க பசிய பார்த்து பொறுத்துக்க முடியாம அது எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கற மாதிரி தாத்தைய்யா மூலமா செஞ்சது..”

“அப்புறம் சாப்பாடு தான் கிடைச்சாச்சே.. அப்புறம் என்ன வேணும் பாட்டி எல்லாருக்கும்”

“ம்ம் சாப்பாடு மட்டும் போதுமா? நாம பாதுகாப்பா இருக்க ஒரு இடம் வேணாமா”

“ஆமால்ல.. அதுக்கு என்ன பண்ணார் தாத்தைய்யா”

“அப்ப நாங்க இந்த குகைக்கு பின்னாடி இருக்கற மலைக்காட்டில இருந்தோம். இங்கல்லாம் நாங்க வந்ததே இல்ல. எல்லா மிருகங்களும் ‘எங்களுக்கு மழை வந்தா பாதுகாப்பா இருக்க ஒரு இடம் வேணுமே கஜராஜா’ன்னு கேட்டாங்க. தாத்தைய்யா எல்லாரையும் சாப்பிட்டு பத்திரமா இருக்க சொல்லிட்டு கிளம்பினார்”

“அவர் மட்டும் தனியா வா”

“ஆமா. நிறைய நேரங்கள்ல புதுசா இருக்க மூங்கில் காடு, சந்தன காடு, பழக்காடு, சுனைங்க, அருவிங்கன்னு தேடி தனியா போய் கண்டுபிடிச்சு தான் எங்களை கூட்டிட்டு போவார். மூங்கில் அரிசியும், தேனும் சாப்பிட்டு, இனிக்கற சுனை தண்ணியும் குடிச்சிட்டு அருவில குளிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? ம்ம்… அதெல்லாம் ஒரு காலம். இப்பல்லாம் மனுஷப்பயலுங்க எல்லாத்தையும் தேடி வந்து மொத்தமா சீர்குலைச்சிட்டு போயிடறாங்க”

“அவங்களுக்கு தான் இருக்க இடம் இருக்கு இல்ல.. அவங்க ஏன் இங்க வராங்க நம்ம இடத்துக்கு?”

“இப்போ தாத்தைய்யா கதை தானே பாக்கறோம். மனுஷங்க கதையை இன்னொரு நாள் சொல்றேன்”

“சரி பாட்டி அப்புறம் இடம் கிடைச்சதா?”

“அவர் போய் ரொம்ப நேரம் கழிச்சு வந்து தான் எங்களையெல்லாம் கூட்டிட்டு மலையை சுத்தி இந்த பக்கம் கூட்டிட்டு வந்தாரு. வந்து பார்த்தா பெரிய மலையை குடைஞ்சு வச்ச சுரங்கம் மாதிரி இந்த குகை இருந்துச்சு. ஆனா நாங்கள்லாம் உள்ளே நுழையாத படி பெரிய பாறாங்கல் வாசலை பாதி மூடியிருந்தது.”

“அச்சோ”

“அப்புறமா தாத்தைய்யா, சின்ன, பெரிய தாத்தாங்கல்லாம் சேர்ந்து அதை உருட்டி  பள்ளத்தில தள்ளினாங்க.  இருட்டோன்னு இருந்த குகையை பார்த்து பயமா இருந்துச்சு”   

“ஏன் பாட்டி. பூதம் இருந்துச்சா உள்ள” கண்களை சிமிட்டி கொண்டு தும்பா பயந்த குரலில் கேட்டது.

“பூதமா.. அதெல்லாம் கதையில் தான வரும்.”

“ஓஹோ.. அப்ப என்ன எல்லாரும் பயமுறுத்த தான் இத்தனை நாள் பூத கதை சொன்னீங்களா” 

“இல்லன்னா நீ ரொம்ப வாலாட்டுவியே அதான். நீ பெரிய பையன் ஆனா அதெல்லாம் பொய்னு உனக்கே தெரியும்”

“ம்ம் சரி போனா போகுது போங்க. குகைக்குள்ள என்ன இருந்துச்சு”

“உள்ள நுழைஞ்சு தாத்தைய்யா போய் பாத்திட்டு ‘யாரும் பயப்பட வேணாம், உள்ள வாங்க’ன்னு கூப்பிட்டார். நாங்களும் போனோம். ரொம்ப வருஷங்களா இந்த குகை வழியா ஒரு பெரிய ஆறு ஓடிருந்திருக்கு. அது காஞ்சு போய் அந்த மணல் துகள்லாம் அப்படியே கல்லா மாறி போயிருந்தது. ஆனா எத்தனை மிருகங்க வந்தாலும் மழையிலருந்து பாதுகாப்பா இருக்கற அளவு பெரிய குகை. எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். தாத்தைய்யாவ சுத்தி வந்து பாட்டு பாடி ஆடி சந்தோஷமா தங்கிக்கிட்டாங்க. “

“தாத்தைய்யா தான் உண்மையிலேயே காட்டு ராஜா. அவர் ஏன் பாட்டி இப்ப இங்க இல்ல. எனக்கு அவர பாக்கனும் போல இருக்கு பாட்டி”

“ம்ம். பிறக்கற எல்லாரும் ஒரு நாள் இறந்து வானத்துக்கு போய்தான் ஆகனும் டா கண்ணா. உங்க அப்பா, பெரியப்பால்லாம் பெரியவங்களாகற வரை ரொம்ப வருஷங்க இந்த காட்டோட நன்மைக்காகவே வாழ்ந்த தாத்தைய்யாக்கு ரொம்ப வயசாச்சு. எழுந்து நடமாட முடியல. அப்பத்தான் எல்லாரையும் கூப்பிட்டு, ‘ நீங்கல்லாம் எப்பவும் ஒத்துமையா இருக்கனும். ஒரு கஷ்டம் வரப்ப எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கனும். இந்த காட்டுக்கு எல்லாரும் ராஜாக்கள் தான். பெரியவங்க புத்திமதியை கேட்டு இளையவங்க மதிச்சு நடந்துக்கனும். எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு. இனி நான் உங்களுக்கு பாதுகாப்பா ஓடி வர முடியாது. நான் மலை மேல போய் உண்ணாவிரதம் இருந்து என் வாழ்க்கையை அமைதியா முடிச்சுக்க நினைக்கிறேன். யாரும் எனக்காக வருந்த வேண்டாம். இனி என் குடும்பத்துக்கு கஜா வழிகாட்டுவான். நான் இந்த உலகத்தை விட்டுப் போனா கூட உங்க எல்லாரையும் வானத்தில் இருந்து பார்த்துட்டே இருப்பேன். ஒரு பெரிய துன்பம் வர போகுதுன்னா யார் கண் முன்னாடியாவது வந்து வழிகாட்டுவேன். உங்க எல்லாருக்கும் என் நன்றியும், வாழ்த்துகளும்’ அப்படின்னு சொல்லிட்டு இந்த குகைக்கு மேல இருக்க மலையில் போய் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை விட்டார். இந்த காடே அவருக்காக அழுதுச்சு. அவர் சொன்ன மாதிரி எப்ப துன்பம் வந்தாலும் யார் மூலமா எங்களுக்கு வழி காமிச்சிட்டு தான் இருக்கார் ” பாட்டி கனத்து போய் கூறியதும் தும்பா அழ ஆரம்பித்தது. கூடவே அந்த குகையில் மத்த யானைகளின் விசும்பல்களும் கேட்டது. பாட்டி யானை தும்பாவை இறுக அணைத்துக் கொண்டதும் தும்பா அந்த அணைப்பிலும், தாத்தைய்யாவின் நினைப்பிலும் அப்படியே உறங்கியது.

இரவு முழுதும் கன மழை பெய்து முடிந்த பின், வானம் வெளுத்து மெல்லிய வெயில் குகையினுள் படர துவங்கியது.

“எல்லாரும் எழுந்திருங்க, விடிஞ்சிருச்சு. இன்னிக்கு நாம மேற்கு பக்கமா சாப்பாடு தேடி போகனும். இப்பவே நடக்க ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்.” அப்பா யானை சொன்னதும் எல்லாரும் எழுந்து சோம்பல் முறித்து குகைக்கு வெளியே வந்தனர்.

தும்பா வெளியே வந்து குகையை நிமிர்ந்து பார்த்தது. மலையின் மேல் இருந்த பாறை அப்படியே தாத்தைய்யாவாக , ஒரு பெரிய கல் யானையாக அதன் கண்களுக்கு தெரிந்தது. தன் சின்னஞ்சிறு தும்பிக்கையை தூக்கி அதற்கு நன்றியும் வணக்கமும் செலுத்தி விட்டு , மகிழ்ச்சியோடு துள்ளி குதித்து தன் கூட்டத்தினருடன் காட்டை நோக்கி சென்றது.

thumba 3

(முற்றும்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments