
அழகு குட்டி பாப்பா
அசந்து தூங்கும் அழகைப் பாரு
அம்மா சொன்ன கதைக்கு
ஆமாம் போடும் அழகைப் பாரு
அல்லி ராணி கதையத்தான்
அழுது புரண்டு ஆட்டமிட்டு
அர்த்த ஜாம நேரத்தில்
அழகு ராணி கேக்குதாம்
ஆக மொத்தம் அம்மாவுக்கு
தூக்கம் கண்ணை அசத்துதாம்
காலு மேல காலு போட்டு
அல்லி ராணி ஊர்வலம்
துள்ளி நின்னு ரசித்திட
மேள தாளம் ஆரம்பம்
குட்டி பாப்பா நினைவினில்
ஜோரா நடக்குது கதைக்களம்
வாளை எடுத்து வீசவும்
ஆளைக் கட்டிப்போடுது வீரம்
காளையாட்டம் அவள் வேகம்
வேளை வந்தது விடிகாலம்
கதையை கேட்ட மாத்திரம்
பாப்பாவுக்கு வந்தது உத்வேகம்
சட்டென எடுத்தது பால்புட்டியை
சுழட்டி எரிந்தது சில்லாப்பாய்
அறை முழுக்க பால்வாசம்
அம்மாவுக்கு வந்ததே ஆவேசம்
அதிகம் பேசினால் அவகாசம்
அதற்கெல்லாம் ஏது அவகாசம்
அரையணா உயர அடிவீதம்
அல்லி ராணி இறங்கினாள்
ஆன மட்டும் ஆடினாள்
அறைக்கோட்டையை சூறையாடினாள்
போதும் போதும் அம்மா கெஞ்சினாள்
அல்லி ராணி அறை எல்லை
தாண்டவே நிறுத்த சொல்லி கொஞ்சினாள்
அம்மா மனசு கேட்டதும்
அல்லி ராணி இறங்கினாள்
அன்றைக்கு அதுபோதும் என்றேதான்
அம்மாவின் மடியில் அசந்து தூங்கினாள்